பாரதியார் கவிதைகள் /  இயக்குநர் ஆர்.சி.சக்தி
பாரதியார் கவிதைகள் / இயக்குநர் ஆர்.சி.சக்தி

'பாரதியார் கவிதைகள்': எழுதியபடி வாழ்ந்தவர்! -இயக்குநர் ஆர்.சி.சக்தி

அடிக்கடி படிக்கிற புத்தகம் என்று சொல்ல வேண்டுமானால் அது ’பாரதியார் கவிதைகள்’ தான். பாரதி எதை எழுதினாரோ, அதாகவே வாழந்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமானது
Published on

எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகம் இல்லை. சின்ன வயதில் அகிலனின் பாவை விளக்கும், கொத்தமங்கலம் சுப்புவின் ’தில்லானா மோகானாம்பா’ளும் முறையே, கல்கி, ஆனந்த விகடனில் தொடர் கதைகளாக வெளிவந்தபோது அவைகளை விரும்பிப் படித்திருக்கிறேன்.

காண்டேகரின் ’கருகிய மொட்டு’, மு.வ.வின் ‘கரித்துண்டு’, ஆப்ரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறாக ஆங்கிலத்தில் வெளிவந்த ’லவ் ஈஸ் எட்டர்னல்’ என்ற புத்தகத்தை தமிழில் ’அழிவற்ற காதல்’ என்று மாயாவி மொழிபெயர்த்திருந்தார்.  அந்த அழிவற்ற காதலையும் விரும்பிப் படித்ததுண்டு. மற்றபடி நான் அடிக்கடி படிக்கிற புத்தகம் என்று சொல்ல வேண்டுமானால் அது ’பாரதியார் கவிதைகள்’ தான்.

காரணம் பாரதி எதை எழுதினாரோ, அதாகவே வாழந்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமானது. தன்னுடைய எழுத்துகளுக்கும் வாழ்க்கைக்கும் சற்றும் இடைவெளி விடாமல் வாழ்ந்தவர்.

ஊருக்கே உபதேசிப்பவன் மாத்திரம் கவிஞனல்ல, அந்த உபதேசங்களிலே தன் உயிர்மூச்சுக் கொண்டு வாழ்கிறவன்தான் கவிஞன். குடிக்கிறது கெடுதல் என்று பாட்டு எழுதிவிட்டு, ராத்திரியானால் குடிச்சுட்டுக் கும்மாளம் போடுகிறவன் எழுத்தாளனுமல்ல, கவிஞனுமல்ல. பெண்ணின் விடுதலை பற்றிப் பாடிவிட்டுக் கட்டிய மனைவியை அடிமையைப் போல நடத்துபவன் எவ்வளவு சிறந்த கவிஞனாக இருந்தாலும் கவிஞர் என்பவனுக்குப் பொருத்தமானவன் அல்ல.

’’சொல்லடி சிவசக்தி – என்னை

சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ’’ என்று தான் வணங்கும் பராசக்தியிடம் கேட்கிறான். எதற்காக? தான் அனைத்துச் செல்வங்களும் பெற்று சுகபோகமாக வாழ வேண்டும் என்பதற்காக அல்ல.

‘’வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’’ என்று சமூகக் கவலை கொண்டு பாடுகிறான்.

இன்னொரு பாடலில், ‘’காணி நிலம் கேட்டான், காணி நிலத்திடையே நல்ல மாளிகை கட்டித்தரக் கேட்டான். பக்கத்திலே பத்து பன்னிரெண்டு தென்னை மரம் கேட்டான். பாட்டில் கலந்திட – ஒரு பத்தினிப் பெண் கேட்டான். காட்டு வெளியினில் அம்மா – நிந்தன் காவலுற வேண்டும்’’ என்று கேட்டான்.

எல்லாவற்றிற்கும் உச்சமாக, ‘எந்தன் பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்திட வேண்டும்’ என்று கேட்டான். இப்படி பாரதியைப் பற்றி அவரின் கவிதைகள் பற்றியும் ஏராளமாகச் சொல்லலாம். என்னைப் போன்றே புத்தக விரும்பிகளும், வாசகர்களும் பாரதியின் கவிதைகளைப் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

                ( தினமணி கதிரில் 25.11.2001 அன்று வெளியானது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com