'இன் கோல்ட் ப்ளட்': புத்துயிர் தந்த புத்தகம்! -ராண்டார் கை

'இன் கோல்ட் ப்ளட்' ஆங்கில இலக்கிய உலகில் பல வகைகளில் ஒரு பெரும் புரட்சியையே உருவாக்கியது. இதை எழுதியவர் இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவரான 'ட்ரூமென் கெபோடே'.
'இன் கோல்ட் ப்ளட்' / ராண்டார் கை
'இன் கோல்ட் ப்ளட்' / ராண்டார் கை
Published on
Updated on
2 min read

கலைக் கடலில் குதித்துக் கரைசேரத் துடித்துக் கொண்டிருக்கும்போது 1960-களில் வாழ்க்கைக்கே அடிக்கல்லாக, ஒரு திருப்புமுனையாக அமைந்தது ஒரு புத்தகம் அதன் பெயர் ‘’இன் கோல்ட் ப்ளட்’’ (In cold Blood). இது ஆங்கில இலக்கிய உலகில் பல வகைகளில் ஒரு பெரும் புரட்சியையே உருவாக்கியது. இதை எழுதியவர் இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ‘’ட்ரூமென் கெபோடே’’ (Truman Capote).

1924-ல் பிறந்த இவர் உயரம் அதிகமில்லாதவர். ஆனாலும், மூர்த்தி சிறிதி; கீர்த்தி பெரிது என்று சொல்வதைப் போல அழியாத புகழைப் பெற்ற, புதுப்பாதை வகுத்த எழுத்தாளர். இவருடைய முதல் புத்தகம் இவருடைய 21-வது வயதிலேயே வெளியாகிப் புகழைப் பெருமளவில் தேடித் தந்தது. நாவல்கள், நாடகங்கள், திரைக்கதை வசனங்கள், கட்டுரைகள் இப்படிப் பல வகையான எழுத்துகளை உலகிற்கு அளித்தவர்.

‘’இன் கோல்ட் ப்ளட்’’ ஆங்கில இலக்கிய உலகில் ஒரு மாபெரும் மாற்றத்தை உண்டாக்கியது. இதன் வடிவம் நாவலைப் போன்றது. ஆனால், அதில் சொல்லப்பட்ட கதை கற்பனையல்ல; உண்மை. இந்தப் புத்தகத்தின் மூலம் கெபோடே ‘’நான் ஃபிக்‌ஷன் நாவல்’’ (Non –Fiction Novel) என்ற புதுவகையான இலக்கியத்தை உருவாக்கினார். நாவல் என்றாலே கற்பனை. கற்பனையல்லாத நாவல் என்றால் என்ன? அதுதான் இவருடைய எழுத்தின் வலிமை. அந்தப் புத்தகத்தின் சிறப்பு!

இரண்டு அமெரிக்க இளைஞர்கள் காரில் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் இரவு ’கான்சாஸ்’’ (Kasas) என்ற மாகாணத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரக் குடியானவனின் வீட்டில் விருந்தாளியாகத் தங்குகிறார்கள். மறுநாள் காலை அவர்கள் சென்றுவிட்டார்கள். வீட்டிலிருந்த எல்லோரும் பிணமாகக் காட்சியளித்தார்கள்!. காரணம் இந்த இருவர் எல்லோரையும் சுட்டுக்கொன்றுவிட்டார்கள். எந்தப் பொருளையும் களவாடவில்லை. வீட்டிலுள்ள பெண்களைக் கற்பழிக்கவில்லை. அந்த நிலைமையில் முன்பின் பழக்கமில்லாத அவர்கள் எல்லோரையும் சுட்டுப் பொசுக்கக் காரணம்? இது ஒரு புரியாத புதிராகவே இருந்தது. இருவரும் பிடிபட்டார்கள். கொலைக் குற்றத்திற்காகக் கான்சாஸ் நகரத்தில் வழக்கு நடந்தது.

அதைப் பற்றிப் பிரபல ‘’நியூயார்க் டைம்ஸ்’’ பத்திரிகையில் நாலே நாலு வரிகள் ஏதோ ஒரு மூலையில் எழுதப்பட்டது. அதைப் படித்தார் கொபோடே.

வழக்கு நடந்த ஊருக்குச் சென்றார். வழக்கத்தை கவனித்தார். பிரபல எழுத்தாளர் என்பதினால் இருவருக்கு அந்தக் குற்றவாளிகளுடன் ஜெயிலில் நீண்ட நேரம் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இருவரும் செய்த குற்றத்திற்காகத் தூக்குத் தண்டனையால் மாண்டார்கள்.

இந்தச் சம்பவத்தை வைத்து கெபோடே ஆறு வருட காலம் ஆராய்ச்சி நடத்தி ‘’இன் கோல்ட் ப்ளட்’’ புத்தகத்தை எழுதினார். ஒரு உண்மையான சம்பவத்தை நாவலில் கதை சொல்வது போலச் சுவையாக அமைத்துச் சொன்னார். இந்தப் புது முயற்சிக்குப் பெருமளவில் வரவேற்புக் கிட்டியது.

இந்தப் புத்தக விற்பனையில் கெபோடேவிற்கு ஏறத்தாழ 6 கோடி ரூபாய் வருமானம்!. இது பின்னால் திரைப்படமாக வந்தது. கறுப்பு வெள்ளையில் படத்தைக் கொலை நடந்த அதே வீட்டில் படமாக்கினார்கள். நட்சத்திர நடிகர்களில்லை. இனக்கவர்ச்சிக் காட்சிகளில்லை. ஆனாலும் படம் பெரு வெற்றியடைந்தது. (சென்னையில் மட்டும் இது மூன்று நாட்களே ஓடியது!) அதில் ஆறு காட்சிகளைப் பார்த்தவன் நான்!.

கெபோடேவின் புத்தகத்தைப் படித்த பிறகு என் மனதில் ஒரு புதிய வேகம். ஏன் ஒரு புத்துயிரே பிறந்தது! உண்மைக் கொலை வழக்குகளைக் கெபோடே பாணியில் தமிழில் எழுதத் தொடங்கினேன். பல தோல்விகளுக்குப் பிறகு ‘’குமுதம்’’ கை கொடுத்தது. எழுத்தாளன் என்ற அங்கீகாரமும் கிடைத்தது. வாழ்வில் வசந்தமும் விளையாடத் தொடங்கியது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் ‘’இன் கோல்ட் ப்ளட்’’டும், ‘’ட்ருமன் கெபோடே’’வும் தான். மறக்க முடியாத புத்தகம். மறக்க முடியாத மனிதர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com