'சாவித்திரி': எனக்கு ஒரு அவா…! -ஆ.ஐ. இரவி ஆறுமுகம்

அரவிந்தர் சீடரான பொறிவாயில் ஐந்தவித்த ரிஷி எழுதியுள்ள ‘சாவித்திரி’ என்ற புத்தகம் எனக்கு பிறவிப்பயனத் தேடித் தந்த புதிய அனுபவம்.
'சாவித்திரி': எனக்கு ஒரு அவா…! -ஆ.ஐ. இரவி ஆறுமுகம்
Published on
Updated on
2 min read

நான் படித்த புத்தகம் எனக் கூறினால் அது தவறாகப் போய்விடும். நிந்தையாகக் கூட மாறிவிடும். நான் பயின்ற புத்தகம் அது. நாளும் அதை நான் பாடம் செய்ய அது என்னைப் புடம் போடும். பாடம் செய்யும். அரவிந்தர் என்று நம்மாலும் ஸ்ரீஅவுரோபிந்தோ என அவர் சீடர்களாலும் அழைக்கப்பெறும் பொறிவாயில் ஐந்தவித்த ரிஷி எழுதியுள்ள ‘சாவித்திரி’ என்ற புத்தகம் எனக்கும் பிறவிப்பயனத் தேடித் தந்த புதிய அனுபவம்.

நாம் வில்லுப்பாட்டுக்களில் கேட்கிற, நாடகங்களில் பார்த்துள்ள சத்தியவான் – சாவித்திரி கதைதான் இதன் கருப்பொருள். வியாசரின் மகாபாரதத்தில் இந்தக் கதையானது மார்க்கண்டேய முனிவரால் யுதிஷ்டருக்கு (தர்மராஜா) அவர் நொந்து நூலாயிருந்த நிலையில் வனப்பருவத்தில் சொல்லப்பட்ட கதையாகும். நமது மகளிர் இன்றைக்கும் சாவித்திரி – சத்தியவான் பூஜையை அனுஷ்டிப்பது நமது மரபு. மகாபாரதத்தில் எழுநூறு வரிகளில் இயம்பப்பட்ட ஒரு கதைப் பொருளை ஒரு சங்கேதமாக ரசமாற்றமும் செய்துள்ளார். எதற்கான சந்தேகம் என்றால் ஒரு புதிய வைகறைக்கான ஒரு புதிய விடியலுக்கான சங்கேதமாய் இந்த நுண்மாண் நுழைபுலம் கொண்ட நூலைப் படைத்துள்ளார்.

கதோபனிஷதத்தில் நசிகேதன் மயனை அந்தகன் என அழைக்கிறான். சாவை வென்றவர்களை நாம் சந்திக்க முடிவதில்லை. அமரத்துவம் பற்றி நாம் பேசப் போனாலும் சாவுடன் நமது கணக்கைத் தீர்க்காமல் அது இயலாது. நசிகேதன் சாவின் மாளிகைக்கு மரணத்தின் மறைபொருளைத் தெரிந்து கொள்ளத் தேடிப்போனான். தனது தந்தையிடம் வாதிடவில்லையெனில் அவனுக்கு இந்தத் தேடல் வாய்த்திராது. ஆனால் சாவித்திரிக்கோ சாவு அவளைத் தேடி வந்தது. சத்தியவானைப் பாசக் கயிற்றினால் பற்றித் தனியே அழைத்துச் செல்ல முடியாத சாவும், சாவித்திரியும் எதிரும் புதிருமாகச் சந்தித்தனர். சாவித்திரிக்குச் சாவினுடைய அர்த்தத்தை அறிவதில் அக்கறை கிடையாது. சாவைச் சந்தித்த அவள் அதை அதனுடைய தளத்தில் அழித்து ஒழித்து பூமிக்கு மீண்டும் சத்தியவானை மீட்டு உயிருடன் கொண்டுவந்ததாக வேண்டும். சாவித்திரி என்பது ஒரு உலகப் பொதுமறை.

ஹோமரின் இலியட். ஒடிஸ்ஸி. வெர்ஜிலின் அனிட். தாந்தேயின் டிவைன் காமெடி. மில்டனின் பாரடைஸ், கதேயின் பாஸ்ட், பிளேக்கின் கவிதைகள், வேட்ஸ்வெர்த்தின் பிரிலூட், ஷெல்லியின் பிராமிதிஸ் அன்பவுண்ட் இவற்றின் இழையோட்டங்களை சாவித்திரியில் நம்மால் இனம் காண முடியும். சாவித்திரி இந்த உச்சங்களின் சிகரம் என்பதையும் நம்மால் உய்த்துணர முடியும்.

சாவித்திரி என்ற நெடுங்கதையை அரவிந்தர் மகாவியத்தில் ஒன்றாக ஆக்கி இதிகாசமாக நமக்கு அளித்துள்ளார். இது இதிகாசம் மட்டுமல்ல. இதிகாச வடிவில் நாம் காணும் தத்துவ தரிசனம். பிரபஞ்சத்தின் படைப்பின் விஸ்வரூபத்தை அவர் விளக்கியுள்ளார். சாவித்திரியின் தந்தையான அசுவபதியின் உணர்வின் விரிவில், பெருக்கத்தில், ஏற்றத்தில் நாம் அரவிந்தரைத்தான் அவரது யோக அநுபூதியைத்தான் காண்கிறோம். ஊழின் செயல்பாடுகள், ஆன்மாவின் ஏற்றம், உயிரின் தோற்றம், உயிருருவின் பிறப்பு, ஜீவனின் செறிவு, உயிர் அணுக்களின் திரட்சி என ஒவ்வொரு சொல்லுமே நிலைத்த சத்தியத்தின் நித்திய வெளிப்பாடாக உள்ளதை நம்மால் இந்நூலில் கண்கூடாகக் காணமுடியும். உணர முடியும்.

சாவித்திரிக்கும் மரணதேவனுக்கும் இடையில் நிகழும் வாக்குவாதம், கம்பரின் வாலிக்கும், ராமபிரானுக்கும் இடையே நடந்த உரையாடலை நினைவுபடுத்தும். நாரதருக்கும் சாவித்திரியின் அன்னைக்கும் இடையே நிகழும் பிறப்பின் நோக்கம் பற்றிய சர்ச்சை நம்முடைய அறியாமையை அகற்றி மெய்ஞானதீபம் ஏற்றும். ஆங்கிலத்தில் எந்த ஒரு ஆங்கிலேயராலும் எழுதப்படாத செழுமையைக் கொண்டு இலக்கியவளம் கொண்டு, பாரதியின் ‘தேவசக்தியை நிலைபெறச் செய்யும்’ சொல்நயம் கொண்டு அரவிந்தர் தீட்டியுள்ள சொல்லோவியம் சாவித்திரி.

க்ளீ, கான்டின்ஸ்கீ என்ற ஓவியர்கள் இசைக்கு ஓவிய உருவகம் தர ஊடகம் தேடி முயன்றுள்ளனர். ஆனால் சாவித்திரியிலோ அரவிந்தர் தத்துவத்திற்கு சொல்வடிவில் ஓவியம் வரைந்துள்ளார்.

ஐம்பது ஆண்டுகள் அவர் முனைப்பில், முப்பத்து நான்கு ஆண்டுகள் அவர் யோக அனுபவத்தில் விளைந்த பழுத்த இதிகாசக்கனி இது. தத்துவக்குவியல் இது. தொட்டனைத்தூறும் ஞானக் கேணியைக் கற்கும்போதெல்லாம் நவில்தரு நூல்நயம் தோன்றும். எனக்கு ஒரு அவா. என்னுள் ஒரு விழைவு.

சாகும்போது நான் சாவித்திரியைத் தமிழில் படித்துச் சாக வேண்டும். என் சாம்பலும், திருமூலரின் திருமந்திரத்தையும் நால்வரின், ஆழ்வார்களின் பதிகங்களையும் பாசுரங்களையும் அத்துடன் அரவிந்தரின் சாவித்திரியையும் திருவாசகங்களாக உச்சரிக்க வேண்டும்.

             தினமணி கதிரில் 14.07.2002 அன்று வெளியானது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com