'பொன்மணல்': அரிய பொக்கிஷம்! -கு.ப.சேது அம்மாள்

‘பொன்மணல்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் மிக அருமை. நம்மைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கக் கூடிய உயரிய நூல் இது.
கு.ப.சேது அம்மாள்
கு.ப.சேது அம்மாள்
Published on
Updated on
2 min read

முன்ஷி என்ற அமரர் என்.எஸ். கல்யாண சுந்தரம், அக்காலத்தில் தலை சிறந்து விளங்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். நுட்பமான கருத்துச் செறிவும் இயற்கையான நகைச்சுவையும் கலந்து மிளிர்வது அவரது எழுத்து. அவரது ‘பொன்மணல்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் மிக அருமை. நம்மைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கக் கூடிய உயரிய நூல் இது.

இச் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையான ’பொன்மண’லில் வரும் கதாபாத்திரம் வேணு. சுபாவத்திலேயே எதையும் ஆராய்ந்து அறியக்கூடிய விஞ்ஞானி மட்டுமல்ல; எதையும் தெளிவாகப் பலவிதமான கோணங்களில் அலசிப் பார்க்கக் கூடிய வித்தியாசமான மனிதரும் கூட. அவர், தான் தற்செயலாகக் கண்டெடுத்த கல்லை ஆராய்கிறார். அதில் தங்கம் உட்பட பலவித உலோகங்கள் இருப்பது தெரிகிறது.  பக்குவமாகத் தங்கத்தைப் பிரித்தால் நாட்டின் வளம் பெருகும் என்று யோசிக்கிறார். பின்னர் அத்தகைய வளர்ச்சியால் ஏற்படக்கூடிய பாதகங்களையும் அலசுகிறார். அம் முயற்சி பணக்காரர்களை உயர்த்துமே தவிர உழைப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன் தராது என்று உணர்கிறார். ஆராய்ந்த கல்லையும், ஆராய்ச்சிக் கட்டுரையையும் நீரில் எறிந்து விடுகிறார்.

’குழியும் பறித்ததாம்’ என்ற கதையில் தன் பர்ஸைப் பறிகொடுத்தவரின் அனுபவத்தையும் பர்ஸைக் களவாடிய ஜேப்படி திருடனின் எரிச்சலையும் ரஸமாகச் சொல்லியிருக்கிற பாங்கு ரசிக்கக்கூடிய ஒன்று. தான் எடுத்த பர்ஸை ஆவலுடன் திறந்து பார்க்கிறான் அவன். அதில் ஒரே ஒரு நயா பைசா மட்டும் இருப்பதைப் பார்க்கிறான். எரிச்சலுடன் ஒரு குறிப்பு எழுதி அதை அந்தப் பர்ஸுடன் இணைத்து பர்ஸின் சொந்தக்காரர் வீட்டுத் தபால் பெட்டியில் போட்டு விடுகிறான். அவன் குறிப்பு:

‘’சீ … அதிர்ஷ்டக் கட்டை! இன்னிக்குப் போணி இப்படியா போவணும். இப்படிப்பட்ட தரித்திர நாராயணனுங்க கூட மெட்ராஸில் இருக்காங்களா? ஏ சாரே..! இந்த ஒரு பைசாவை பத்திரமாக வச்சுக்கோ. டாம்டூம்னு வீண் செலவு செஞ்சிடாதே. இப்படிக்குத் துரதிருஷ்டசாலி…’’

இந்தக் கோப வரிகள் படிப்பவரைச் சிரிக்க வைத்துவிடும். இதேபோல ’ரத்தினக் கம்பளமும் வைரத் தோடும்’ என்ற கதையும் பழம் பொருள்களைத் தன் வேடிக்கைச் சுபாவத்தால் புராதனச் சான்றுகளாக உருவகப்படுத்தும் ஒருவரின் சாமர்த்தியத்தை நகைச்சுவை இழையோடச் சொல்கிறது.

இத் தொகுப்பில் ‘தபால்கார அப்துல்காதர்’ என்ற கதை எவராலும் எளிதில் மறக்க முடியாத உயரிய படைப்பு. தபால்காரரின் மனிதநேயத்தை விவரிக்கும் மென்மையான மனிதநேயமும் பின்னிப் பிணைந்திருக்கும் முதல்தரமான படைப்பு இது. 1934-ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ நடத்திய ஒரு போட்டியில் இக் கதை பரிசு பெற்றதோடு ஆசிரியர் அமரர் கல்கியின் பாராட்டையும் பெற்றது.

’வெற்றியில் கிலேசம்’ என்ற கதையில் கற்பனை வளம் மிகுந்த ஒரு படைப்பாளி. அவருக்கு ஒரு பரிசுப் போட்டிக்கு நடுவராக இருக்கும் வாய்ப்பைத் தவிர்த்து, வறுமை காரணமாகப் போட்டியின் பரிசுத் தொகையைக் கருதி அதில் கலந்துகொள்ள வேண்டிய அவல நிலை. கதை முடிவில் அவரது ஆத்மார்த்தத் தவிப்பினை வார்த்தைகளில் வடித்திருப்பார் ஆசிரியர். நெகிழ வைக்கும் அந்த வரிகள்: ‘’தராசு பிடித்துச் சீர்பார்க்க வேண்டியவன் புளி உருண்டையாகத் தராசுத் தட்டில் உட்கார்ந்து விட்டேன்.’’

சிகரம் வைத்தாற்போல் இறுதிக் கதையாகிய ’விடுதலை எப்போ?’ என்ற படைப்பில் ஒரு பழுத்த ஞானியினுடைய சொற்களின் வலிமையை விளக்கியிருக்கும் பாங்கு மிக அருமை. இத் தொகுப்பிலுள்ள சில கதைகளைப் பற்றி மட்டுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் தொகுப்பின் அனைத்துக் கதைகளுமே என்றும் மனதை விட்டு அகலாப் படைப்புகள், இந்த நூல் எழுத்துலகுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்றால் மிகையல்ல.

                   தினமணி கதிரில் 04.08.2002 அன்று வெளியானது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com