'லாங் வாக் டூ ஃபிரீடம்': கறுப்புச் சூரியனைப் பார்ப்பேனோ! -கவிஞர் புலமைப்பித்தன்

அண்மைக்காலத்தில் நான் படித்ததும் – எனக்குப் பிடித்ததும், மாவீரன் கறுப்புச் சூரியன் நெல்சன் மண்டேலா எழுதிய தன்வரலாற்று நூலாகும். ‘Long Walk To Freedom’ என்பது அந்த நூலின் தலைப்பு.
'லாங் வாக் டூ ஃபிரீடம்' / கவிஞர் புலமைப்பித்தன்
'லாங் வாக் டூ ஃபிரீடம்' / கவிஞர் புலமைப்பித்தன்

நான் ஒரு சாதாரணத் தொழிலாளியாக இருந்து வாழ்க்கையைத் தொடங்கியவன். ஆனா;, படிப்பதும் – படைப்பதுமே என் ஆயுள் நான் எத்தனையோ நூல்களைப் படித்திருக்கிறேன். அத்தனை நூல்களையும் என் நெஞ்சில் பதித்திருக்கிறேன்.

அந்தவகையில் ஆண்டுக்கு இருமுறையாவது நான் படிக்கும் புத்தகம் ’மார்க்சும் ஏங்கல்சும்’ என்பதாகும்.!

அண்மைக்காலத்தில் நான் படித்ததும் – எனக்குப் பிடித்ததும், மாவீரன் கறுப்புச் சூரியன் நெல்சன் மண்டேலா எழுதிய தன்வரலாற்று நூலாகும். ‘Long Walk To Freedom’ என்பது அந்த நூலின் தலைப்பு. வாழ்க்கையில் போராட்டங்களைச் சந்தித்தவர் – சந்திகிறவர்கள் நிரம்பப் பேர் இருக்கிறார்கள். வாழ்க்கையே போராட்டமாக அமைந்தது மண்டேலா வாழ்க்கைதான்.

‘Struggle is my life’ என்று நான்காம் பகுதிக்கு மண்டேலா பெயரிட்டிருக்கிறார்!. 770 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை நான் நான்கைந்து நாள்களில் படித்து முடித்தேன்.

பல இடங்களில் திரும்பத் திரும்பப் படிக்கவேண்டி இருந்தது. ஒரு மாபெரும் விடுதலைப் போராளியின் உள்ளம் எப்படி இருக்கும் – உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதைப் படித்துக்கொண்டு வரும்போது பல நேரங்களில் நான் மிகுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்க நேர்ந்தது.

சின்னப் பையனாக இருந்த அவரது இளமைப் பருவத்தில் தந்தையை இழந்து தாயைப் பிரிந்து செல்ல நேர்ந்தது. அப்படி பிரிகிற சூழ்நிலையில் ‘My Mother and my first friend’ என்று குறிப்பிடுவது என்னைக் கலங்க வைத்தது.

‘We were slaves in our own country, we were tenents of our own soil’ என்று அவர் வெளிப்படுத்திய வேதனை வரிகள் என் விலாவைத் துளைத்தன. அவர் முதன்முறையாக ஓராண்டு சிறைத்தண்டனையும் பிறகு இருபத்தொரு ஆண்டுகள் தொடர் சிறைத் தண்டனையும் பெற்றார்.

சிறையைப் பற்றி, ‘The prison is designed to break one’s spirit and destroy one’s resolve’ என்று குறிப்பிடுகிறார். தன் இனத்தின் மீட்சிக்காக, விடுதலைக்காகத் தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்திருக்கிறார்.

‘During my life-time, I have dedicated myself to this struggle of the African people. I have fought against black domination.

I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I Hope to live for and to achieve. But if needs be, t is an ideal for which I am prepared to die’

இந்த வரிகளைப் படிக்கும்போது நான் மெய்சிலிர்த்துப்போனேன்.  ஒரு கட்டத்தில் அவர் நீதிமன்றத்தில் நின்று கேட்கிறார்: ‘Why is it that in this courtroom, I am facing a white magistrate, confronted by a white prosecutor, escorted by white orderlies? Can anybody Honestly and seriously suggest that in this type a atmosphere the scales of jusitice are evenly balanced?’

ஓர் உண்மையான விடுதலைப் போராளியாக இருக்கிற எல்லாருக்கும், அவர் எந்த நாட்டில், எந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களாக – வாழ்கின்றவர்களாக இருந்தாலும் இத்தகைய உணர்வுகள்தான் வெளிப்படும்.

இந்த ‘Long Walk to Freedom’ என்கின்ற இந்த நூல் என் இதயத்தில் என்றும் எப்போதும் இருக்கும். அந்த மாவீரன் மண்டேலாவை என் வாழ்நாளில் ஒருமுறை நேரில் பார்க்க ஆசை. நிறைவேறுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com