'மனிதன் எண்ணுவது போல': வாழ்வாக மலரட்டும்! -எம்.எஸ்.உதயமூர்த்தி

முக்கியமான புத்தகத்தை குறிப்பிடுங்கள் என்று நீங்கள் கேட்டீர்கள். ஆனால் ஜேம்ஸ் ஆலன் எழுதிய ’மனிதன் எண்ணுவது போல’  (AS A MAN THINKETH) என்ற நூலைப் படியுங்கள் என்றுதான் சிபாரிசு செய்வேன்.
'மனிதன் எண்ணுவது போல' / எம்.எஸ்.உதயமூர்த்தி
'மனிதன் எண்ணுவது போல' / எம்.எஸ்.உதயமூர்த்தி

நான் படிக்க வேண்டிய ஒரே ஒரு முக்கியமான புத்தகத்தை குறிப்பிடுங்கள் என்று நீங்கள் கேட்டீர்கள். ஆனால் ஜேம்ஸ் ஆலன் எழுதிய ’மனிதன் எண்ணுவது போல’  (AS A MAN THINKETH) என்ற நூலைப் படியுங்கள் என்றுதான் சிபாரிசு செய்வேன்.

இந்த ஒரு புத்தகம் போதும். ஏனெனில் இவ்வுலகில் யாரும் எடுத்துக் கூறாத பல விஷயங்களை எடுத்துக் கூறுகிறார்.  இந்த யுகத்திலே ஒளிபெற்ற விஷயங்களில் ஆத்மாவைப் பற்றிய நாம் இங்கு பிறந்ததை பற்றிய உண்மை இதுதான் மனிதன் தான் அவன் வாழ்வை அமைக்கும் சிற்பி. சூழ்நிலையை உருவாக்கும் ஓவியம் அவனது விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டிகர்த்தா அவன் தான். அவன் தான் அவன் மனதில் எழும் .’ எண்ணங்களின் தலைவன்’ என்று எழுதுகிறார் ஜேம்ஸ் ஆலன்

அவர் ஆத்ம அறிவை பெற்றதே ‘ஆசிய ஜோதி’ என்ற பெயரில் புத்தரைப் பற்றி எழுதப்பட்ட நூலை படித்ததிலிருந்து தான். புத்தர் தனது கடைசி உபதேசமாக சீடர்களுக்கு சொன்னது நல்லதை நினை நல்லதை செய் என்கிற வார்த்தைகள்தான் அதையே பல உதாரணங்களைக் காட்டி எண்ணங்கள் உபயோகப்படும் படி விளக்குகிறார்

உங்கள் மனதில் எழும் எண்ணங்களின் நான் பார்க்க முடியாது கேட்க முடியாது உணர முடியாது ஏதோ ஒரு இல்லாத உலகம் அது. அப்படிப்பட்ட நம் பார்வைக்கு அப்பாற்பட்ட நம் புலன்களால் கண் காது மூக்கு வாய் உடல் ஸ்பரிசம் என்ற இவற்றினால் கூட உணரமுடியாத வை எண்ணங்கள் அப்படி புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகில் நம் எண்ணங்கள் தான் நாம் லட்சியங்கள் ஆக மலர்கின்றன. நம்மைச் செயல்பட வைக்கின்றன. படிப்பதும் பட்டங்கள் பெறுவது நம் எண்ணங்களினால் ஆசைகளினால் தான். வீடு, வாசல், கடை, கார், விமானம் என்று விண்வெளி கோள் வரை நம் உலகமே மனித எண்ணங்களால் உருவாக்கப்பட்டவை. ஆகவே நீ சரியானதை எண்ணு – நீ அடைவாய்; என்று விளக்குகிறார்.

அதை எவ்வளவு ஆழமாக சொல்கிறார் கவனியுங்கள். ‘’மிகப்பெரிய ஆலமரம் சிறிய விதைக்குள் உறங்குகிற.து வானில் பறக்கும் வல்லூறு ஒரு சிறிய முட்டைக்குள் காத்திருக்கிறது.’’

‘’ எப்படி நாளை வானில் பறக்கும் வல்லூறு இன்று சிறிய முட்டைக்குள் இருக்கிறதோ, அதுபோல உன் மனதில் இன்றிருக்கும் லட்சியம் தான் உன் எதிர்காலத்தை உருவாக்குகிறது என்கிறார். இதே கருத்தை மனதைப்  பற்றியும் எண்ணங்களைப் பற்றியும் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களைப் பற்றியும் அட்டமா சித்திகள் பற்றியும் பதஞ்சலி யோக சூத்திரத்தில் பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.

ஒரு பொது அலட்சியத்தால் ஒரு மனிதன் தூண்டப்படும்போது எல்லாத் தளைகளும் உடை படுகின்றன. மனிதன் எல்லா எல்லைகளையும் மீறுகிறான் என்கிறார் பதஞ்சலி.

மனத்தவிப்பு,  மனநெருக்கடி போன்ற எண்ணங்கள் உடலுக்கு ஊறு செய்கின்றன. நோயை விளைவிக்கின்றன என்றும்,  சந்தோஷமான  நல்ல எண்ணங்கள் நம் நோயை குணப்படுத்துகின்றன என்றும் கூறுகிறார்.  இன்றைய மருத்துவ உலகம் இதைத்தான் கூறுகிறது. வாழ்வின் மூன்று ஞானங்கள் இருக்கின்றன. உலக ஞானம் எப்படி வாழ்வது வாழ்க்கை நெறிகள், நேர்மை, சமத்துவம், சுதந்திரம், உண்மை, நல்லெண்ணம், அழகு, ஒழுங்கு என்பன.

மெய்ஞானம் ’நான் யார்?’ ’நான் ஆன்மா’ என்று தன்னை அறியும் அறிவு.

விஞ்ஞானம் நாம் வாழும் உலகின் பொருள் பற்றிய அறிவும் ஆய்வும். இந்த மூன்றிலும் எப்படி எண்ணங்களை சரி படுத்துவதன் மூலம் நாம் வெற்றி பெற முடியும், சாதனை புரிய முடியும், மன நிறைவு பெற முடியும், வாழ்க்கை பயனுள்ளதாக அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை எழுதுகிறார்.

இதை எல்லாம் விட தான் எழுதியதை வாழ்ந்து காட்டியவர் அவர். ‘’ ஆத்ம ஞானத்தின் மிகப்பெரிய பொக்கிஷம் கிழக்கிந்திய நாடுகள்தான்’’ என்று எழுதுகிறார் ஜேம்ஸ் ஆலனின் இயல்புகளை கவனியுங்கள்.

 கடுமையாக உழைப்பவர். எல்லாவற்றையும் மன ஈடுபாட்டுடன் செய்பவர். இயற்கையை ரசிப்பவர். மதிப்பவர். காட்டு மிருகங்கள் கூட அவரிடம் பணியும் என்று அவரைப் பற்றி எழுதுகிறார் கப்பலோட்டிய தமிழன் வ .உ. சிதம்பரம் பிள்ளை

இந்தப் புத்தகம் தமிழில் வ.உ.சி.யால் எழுதப்பட்டு பாரி நிலைய வெளியீடாக ’’மனம்போல் வாழ்வு’’என்ற தலைப்பில் வந்திருக்கிறது. ’வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்’ என்ற தலைப்பில் நான் மொழிபெயர்த்த இந்நூல் கங்கை புத்தக நிலையம் வெளியீடாக கிடைக்கிறது. இதை பேராசிரியர் கா அப்பாத்துரையும், சுயமுன்னேற்ற நூல்கள் எழுதிய அப்துல்ரஹீமும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பதிப்பாளர் நினைவிலில்லை. படியுங்கள் பலமுறை அது உங்கள் வாழ்வாக மலரட்டும்! உங்களை உயர்த்தட்டும்!

            தினமணி கதிரில் 17.2.2000 அன்று வெளியானது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com