ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்: தரையிலேயே கிடப்பதா வாழ்க்கை? - வெ. இறையன்பு
By வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ். | Published On : 27th February 2021 12:16 PM | Last Updated : 27th February 2021 12:20 PM | அ+அ அ- |

ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல் / வெ.இறையன்பு
சுவையாக ஒரு கோப்பைத் தேநீர். வெப்பம் தகிக்கையில் வீசுகின்ற தென்றல். செவியில் படரும் மெல்லிய இசை. ஒவ்வொரு வரியாய் படித்து மகிழும் நல்ல புத்தகம். இவை யாவும் காலங்கடந்து மனதில் நினைக்குந்தோறும் இன்பம் பயக்கும் இனிய அனுபவங்கள்.
ஒரு நல்ல புத்தகம் வாசிப்பவனுக்கு ஆசிரியரின் அனுபவங்களை மட்டும் உருட்டித் தருவதோடு நின்றுவிடாமல், கால நீட்சியைத் தாண்டி அவனது தேடுதலைத் தொடங்கி வைக்கிறது.
சிறந்த புத்தகங்கள் பல உண்டு. மானுடம் இருக்கும் வரை வாழப்போகின்ற 'திருக்குறளில்' இருந்து வாழ்க்கையை நுகரச் சொல்லித் தருகின்ற ’தீர்க்கதரிசி’ வரை நம் உயரத்திற்கேற்ப இவற்றின் உயரத்தையும் நம் அனுபவங்களால் அளந்து அளவெடுத்துக் கொள்ளுகிறோம்.
என் வாழ்க்கையில் 'இந்தப் புத்தகத்தை வாசித்திருக்காவிட்டால்...' என்று எண்ணத் தூண்டுகிற ஒரு புத்தகம் உண்டு. அது முலாம் பூசிய புத்தகம் அல்ல. மாறாக எனக்குள் ரசவாதம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் புத்தகம்.
நல்ல புத்தகத்தை அடிக்கடி வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். நம் புரிதல்கள் ஒவ்வொருமுறையும் வெவ்வேறு முறையாக வெளிப்படும்.
நான் அப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து 17 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. என் கைவசம் இருந்தாலும், புத்தகக் கடையில் அதைப் பார்க்கிற போதெல்லாம் வாஞ்சையாய் எடுத்து வருடவும், புரட்டவும் செய்யும் புத்தகம்.
கடற்காகங்கள் பற்றிய நூல் அது. உணவுக்காக மட்டுமே இறகுகள் என்று திருப்திப்பட்டுக்கொண்டு வானத்தைக் கிழித்துப் பறக்க ஆர்வம் இல்லாத கடற்பறவைகள் மத்தியில் அந்த ஒரு கடற்காகம் மட்டும் பறப்பதை நேசிக்கிறது; பறப்பதற்காக தன்னை எலும்பும் சிறகுகளுமாய் உருக்கிக் கொள்ளுகிறது. கழுகின் சிறு இறகுகள் பறப்பதற்குத் துணை புரிகின்றன என்பதால், பறக்க ஏதுவாக அது தன் சிறகுகளை மடக்கிக் கொண்டு பறக்க எத்தனிகிறது.
'வேகம் சக்தி', 'வேகம் மகிழ்ச்சி', 'வேகம் அழகு' என்று தன்னை ஆக்கிக் கொள்கின்றது. உலர்ந்த மீன்களுக்காகவும், தவளைகளுக்காகவும் கரையையே சுற்றிக் காலந்தள்ளும், கடற்பறவைகளுக்கு மத்தியில் 214 மைல் வேகத்தில் அந்தக் கடற்காகம் பறகின்றது. அது பறகின்ற காரணத்தாலேயே தன் இனத்துக்குள்ளேயே தள்ளி வைக்கப்படுகிறது.
அறியும் ஆர்வத்தால் அதன் சிறகடித்தல் தொடருகிறது. அது கண்டுபிடிக்கிறது; ''அயற்சியும், பயமும், கோபமும்தான் ஒரு கடற்காகத்தின் ஆயுளைக் குறைகின்றன'' என்று. எதையும் கற்றுக்கொள்ளாவிட்டால் அடுத்த உலகமும் இதைப் போலவே இருக்கும் என்பதை அறிந்ததனால் அதன் கற்றல் தொடர்கிறது.
சொர்க்கம் என்பது இடம் அல்ல, அது நேரமும் அல்ல. பூரணத்துவத்தை அடையும் முயற்சி என்பதை அறிந்து வேகமாய் பறக்க வேண்டுமானால் ஏற்கெனவே இலக்கை அடைந்ததாகக் கருத வேண்டும் என்று தெரிந்து வைத்துக்கொண்டு ஆயிரம் வருடங்களாக மற்ற பறவைகளால் முடியாத பறத்தலைச் சாதித்துக் காட்டுகிறது.
அதன் எலும்பும், சிறகுகளுமான தோற்றம் பறப்பதையும், உயரச் செல்லுவதையும், உணர்த்துவதாய் உள்ளது. அது தலைமையை விரும்பாவிட்டாலும், அதைத் தொடர்ந்து பறக்கும் ஆர்வத்தில் ஒரு கடற்காகக் கூட்டம் பின்தொடருகிறது.
உண்மையை நோக்கிச் செல்லுகிற சட்டமே உண்மையான சட்டம் என்பதை உணர்ந்ததால், தான் வாழுகிற காலத்திலேயே ஆயிரம் வருடங்கள் முந்தி இருந்தது, அந்த 'ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்' (Jonathan Livingston Seagull) பறவை. ரிச்சட் பேக் (Richard Bach) எழுதிய இந்நூல் ஒவ்வொரு வரியிலும் உந்துதலைத் தருகிற நூல், உற்சாகத்தை அளிக்கிற நூல், தேடக் கற்றுக் கொடுக்கிற நூல்.
வாழக்கை என்பது தரையிலே கிடப்பது அல்ல. வானவீதியிலே பறப்பது. மலை, கடல்களைத் தாண்டி, காற்று மண்டலங்களைக் கடந்து இன்னும் உயரமாய்ச் சிறகுகளை விரித்து, தொடர்ந்து பறப்பது; பறக்கிற சுகத்திற்காகவே பறப்பது; உணவினும் பறப்பதை நாடி உயரத்தில் செல்வது; படகுகளும், கப்பல்களும் சின்னப் புள்ளியாகத் தெரியும் வரை வான வீதியில் வலம் வருவது; தன்னைச் சார்ந்தவர்களை அந்த உயரமான இடத்திற்கு அழைத்துச் செல்வது.
சாதாரணமாக பூமியில் நடந்து தன் நிழல்கள் அங்கு இருக்கும் எலும்புக்கூடுகளின் மீது விழாமல், மேகங்களின் மீது கால்தடங்களைப் பதிப்பதற்காக இன்னும் உயரமாய் மேலே செல்ல எனக்கு கற்றுக்கொடுத்தது இந்தப் புத்தகம்.
அதை வாசிக்கிற போதெல்லாம் எனக்குச் சிறகுகள் முளைத்த மாதிரி ஒரு அனுபவம். எப்படியாவது ஒருநாள் 'ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல்' ஆக ஆவோம் என்ற நம்பிகையில் தொடர்ந்து அந்தப் புத்தகத்தை நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்; பறக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...