'நள்ளிரவில் சுதந்திரம்': வாசகர்களை உருவாக்கும் புத்தகம்! -தென்கச்சி கோ.சுவாமிநாதன்

‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்கிற பெயரில் அலைகள் வெளியீட்டகம் 'பிரீடம் அட் மிட்நைட்' என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.
நள்ளிரவில் சுதந்திரம் / தென்கச்சி கோ.சுவாமிநாதன்
நள்ளிரவில் சுதந்திரம் / தென்கச்சி கோ.சுவாமிநாதன்

சில ஆண்டுகளுக்கு முன்னால் அலுவலகப் பணி காரணமாகப் புதுதில்லி சென்றபோது அந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. அதற்கு முன்பாகவே அதைப் பற்றிக் கேள்விபட்டிருந்தேன். உடனே அதை வாங்கி வைத்துக் கொண்டேன். ஊருக்குத் திரும்பியதும் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை வேளையில் அதைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்த அந்தச் சூழலில் விடமுடியாமல் அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.

பொதுவாக ஆங்கிலப் புத்தகங்களை என்னால் ஆழ்ந்து படிக்க முடியாது. பாதியில் மூடி வைத்து விடுவேன்.

இந்தப் புத்தகத்தை அப்படிச் செய்ய முடியவில்லை. சரி….அப்பேர்ப்பட்ட அந்தப் புத்தகம்தான் எது என்று கேட்கிறீர்களா?

'Freedom at Midnight'

டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ் என்கிற சர்வதேச எழுத்தாள இரட்டையர்களின் படைப்பு அது. மூன்று நாள்கள் ஆயிற்று அதை நான் படித்து முடிக்க.

இந்தியச் சுதந்திர வரலாற்றின் இறுதி நாள்களை இயல்பாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். ஏறத்தாழ மூன்றாண்டுக் காலம் முயன்று 6,000 மைல் தூரம் பயணம் செய்து, பல்வேறு மக்களைச் சந்தித்து இந்த நூலை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகம் தமிழில் வந்தால் நன்றாக இருக்குமே என்று அப்போதே நினைத்தேன். இப்படி வேறு சிலரும் நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. இப்போது ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்கிற பெயரில் அலைகள் வெளியீட்டகம் அதை வெளியிட்டிருக்கிறது.

வி.என்.ராகவன், மயிலை பாலு என்கிற நம்ம ஊர் இரட்டையர்கள் அதை அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இது தமிழில் வெளிவந்த விவரத்தை ஒரு பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.

உடனே அலைகள் வெளியீட்டகத்தைத் தேடி அலைந்து கோடம்பாக்கத்தில் தெற்கு சிவன் கோவில் தெருவில் அதைக் கண்டுபிடித்துப் புத்தகத்தை வாங்கினேன். 680 பக்கங்கள், 250 ரூபாய் விலை.

அலைகள் வெளியீட்டகத்தின் பெ.நா.சிவம் சொல்கிறார்: ''வாசகர்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. வாசகர்களை நாம்தான் உருவாக்குகிறோம்!''.

இந்தப் புத்தகமும் வாசகர்களை உருவாக்கும் என்று நம்பலாம். 1947 புத்தாண்டு நாளில் – லண்டன் மாநகரின் – கடும் குளிரான சூழலில் தொடங்கி – ஓராண்டுக் காலம் கடந்து…. காந்திஜியின் சாம்பல் கங்கையில் சங்கமமாவதோடு முடிகிறது இந்த வரலாறு.

வரலாற்று நிகழ்வுகளைச் சுவையான நாவல் மாதிரி எழுதியிருப்பது இதன் சிறப்பு. எப்படி எழுத வேண்டும் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களும் இந்நூலைப் படிக்கலாம். இந்தச் சுதந்திரம் எப்படிக் கிடைத்தது என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறவர்களும் இதைப் படிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com