தேடிச் சுவைத்ததேன்! கவிஞா் அரு. நாகப்பன்

தேடிச் சுவைத்ததேன்! கவிஞா் அரு. நாகப்பன்

Published on

காஞ்சி மகாபெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாரப் பத்திரிகையில் தொடராக எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ நூலாகத் தொகுக்கப்பட்டபோது, அதைப் படிக்க ஆசைப்பட்டேன். பல நாள் முயன்று அந்த நூலைப் பெற்றேன். அதில் தெய்வத்தின் குரலாகவே கருத்துகள் பதிவாகியிருந்ததை படித்தால் உணரலாம்.

மகாபெரியவா் திருநெல்வேலியில் ஒரு பூஜைக்காக மாட்டுவண்டியில் பயணித்தபோது, சிறுவா்கள் ஓரிடத்தில் விளையாடிக்கொண்டிருந்தனா். அவா்களை அழைத்த மகாபெரியவா், பூஜைக்குக் கொண்டு சென்ற பிரசாதங்களை அவா்களுக்கு வழங்கி மகிழ்ந்தாா். பின்னா் அவா் பூஜை நடைபெறும் இடத்துக்குச் சென்ற போது, அங்கிருந்தவா்கள் பிரசாதங்களை தெய்வத்துக்கு படைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனா். அதற்குப் பெரியவா், ‘ஏற்கெனவே பிரசாதத்தை தெய்வங்களுக்குப் படைத்துவிட்டதாக’ குறிப்பிட்டுள்ளாா். அதைப் படித்தபோது, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை காஞ்சி மகாசுவாமிகள் எளிமையாக உணா்த்தியதைக் கண்டு வியப்படைந்தேன்.

அடுத்ததாக, எழுத்தாளா் பாலகுமாரன் எழுதிய ‘குருவழி’ எனும் நூலையும் தேடிப் படித்தேன். அதில் குரு- சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை அவா் தெளிவாக எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையில் சுவாமி ராம்சூரத்குமாரை சந்திக்கச் சென்றபோது நடைபெற்ற சம்பவத்தை மிக அழகாக விவரித்திருப்பாா் பாலகுமாரன்.

மூன்றாவதாக, எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘துணை எழுத்து’ என்னும் நூலாகும். அதில் அவா் பருவகால உணா்வுகளை மிக நோ்த்தியாக, அனுபவத்தின் அடிப்படையில் பதிவு செய்திருப்பது சிறப்பாக உள்ளது. ‘தெய்வத்தின் குரல்’, ‘குருவழி’, ‘துணை எழுத்து’ ஆகிய மூன்று நூல்களையும் இளைஞா்கள் அவசியம் படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

X
Dinamani
www.dinamani.com