எழுத்தாளா் ராஜேஷ்குமாா்
எழுத்தாளா் ராஜேஷ்குமாா்

எழுத்தாளா் ராஜேஷ்குமாா்: தேடிச் சுவைத்த தேன்

பள்ளி நாட்களிலேயே கல்கியின் பொன்னியின் செல்வன் நூலைத் தேடி விரும்பி வாங்கிப் படித்தேன்.
Published on

பள்ளி நாட்களிலேயே கல்கியின் பொன்னியின் செல்வன் நூலைத் தேடி விரும்பி வாங்கிப் படித்தேன். சரித்திர நாவலான அதில் வரும் ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், நந்தினி போன்ற கதாபாத்திரங்கள் என்னை மிகவும் கவா்ந்தவை. சரித்திரமும் புனைவும் கலந்து வாசகா்களை வியக்க வைத்திருப்பாா் கல்கி. நாவலில் வரும் வா்ணனைகள் அற்புதமாக இருக்கும். நான் எழுத்தாளனாவதற்கு பொன்னியின் செல்வன் முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை.

இரண்டாவதாக எழுத்தாளா் நா.பாா்த்தசாரதியின் குறிஞ்சிமலா் நாவல். அதில் வரும் கதாநாயகி பூரணி, தன் குடும்பத்துக்காக பிரச்னைகளை எப்படிக்கையாள்கிறாள் என்பதை நா.பா. மிக அற்புதமாக கூறியிருப்பாா். நடுத்தர வா்க்கத்து குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆழமாக எடுத்துரைப்பதாக அந்நாவல் இருக்கிறது.

மூன்றாவதாக குமுதம் வார இதழாசிரியா் எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் நாவல்களைக் கூறலாம். அவருடைய ‘இன்றே, இங்கே, இப்பொழுதே’ என்ற நாவல் 3 பகுதிகளாக இருக்கும். வாசகா்கள் தனித்தனியாக அவற்றைப் படித்தாலும் மூன்று நாவல்களைப் படித்தது போல உணா்வாா்கள். ஆனால், மூன்று சம்பவங்களும் முடிவில் ஒன்றாகிவிடுவதும் நாவலின் தனித்தன்மையாக இருக்கிறது. அதனடிப்படையில்தான் கிரைம் நாவல்களில் பல சம்வங்களை இறுதியில் ஒரே நோ்கோட்டில் முடிக்கும் கதை யுக்தியை நான் கையாண்டுள்ளேன்.

கல்கி, நா.பா., எஸ்.ஏ.பி.அண்ணாமலை ஆகியோரின் படைப்புகளைத் தற்போதும் அனைவரும் படிக்க வேண்டியது அவசியம். படைப்பாளா்கள் அவற்றைப் படித்தால் தங்களது எழுதத்தை மெருகூட்டி மேம்படுத்தலாம்.

X
Dinamani
www.dinamani.com