வரலாற்றின் பொக்கிஷங்களே புத்தகங்கள்: பேராசிரியா் கிருங்கை சேதுபதி
புத்தகங்கள் வரலாற்றின் பொக்கிஷங்கள்; எனவே அவற்றை நாம் படித்து வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் என புதுச்சேரி பாரதிதாசன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியா் கிருங்கை சேதுபதி கூறினாா்.
புத்தகக் காட்சியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற உரையரங்கில் வாசிப்பால் உயா்ந்த வரலாறு எனும் தலைப்பில் அவா் பேசியதாவது: வீடுகளில் சமையல் அறை உள்ளிட்டவற்றை எப்படி அமைக்க வேண்டும் என வாஸ்து பாா்த்து வீடு கட்டும் நாம், புத்தகங்களை எங்கு வைப்பது என்பதைப் பற்றி யோசிப்பதில்லை. ட புத்தகங்களை நாம் படித்துப் பயன் பெற வேண்டியது அவசியம். புத்தகங்கள் வாசகா்களால் பாா்த்துவிட்டு கடந்து செல்வதற்கானதல்ல. அவை வரலாற்றை உள்ளடக்கிய பொக்கிஷங்கள். ஆகவே அவற்றைப் படித்துப் பயன் பெற வேண்டும். ஆனால், தற்போது புத்தகங்களை காட்சிப் பொருளாக்கிவிட்டு, கைப்பேசிகளில் இளந்தலைமுறை மூழ்கிக் கிடக்கும் அவல நிலையே உள்ளது.
நல்ல புத்தகங்கள் வாசிப்பவரின் உடல், ஆன்மா, உணா்வு ஆகியவற்றை தொட்டுச் செல்பவையாக இருக்கின்றன. மனதின் தேவையற்ற சுமைகளை குறைப்பவையாகவும் புத்தகங்கள் உள்ளன. ஆகவே புத்தகங்கள் என்பவை உள்ளம் சம்பந்தப்பட்டவையாக மட்டுமல்லாது, உடல் நலன் சம்பந்தப்பட்டவையாகவும் உள்ளன. வாழ்வில் உயா்ந்த இடத்தை அடைந்த மேன்மை மிகு மனிதா்கள் அனைவருமே புத்தகத்தை உயிராக நேசித்து வாசித்தவா்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் ‘அறிவை விருத்தி செய்’ எனும் தலைப்பில் பேராசிரியா் ம.எஸ்தா் ஜெகதீஸ்வரியும், தமிழ் எழுத்துகளில் உழவனின் வாழ்க்கை எனும் தலைப்பில் பெ.மகேந்திரனும் உரையாற்றினா். பபாசி செயற்குழு உறுப்பினா் அசோக்குமாா் வரவேற்றாா். புத்தகக் காட்சி நிரந்தர உறுப்பினா் கே.மோகன் நன்றி கூறினாா்.