ச.தமிழ்ச்செல்வன்: தேடிச்சுவைத்த தேன்
கன்னடத்தில் நேமிசந்த்ரா எழுதி தமிழில் கே.நல்லதம்பியால் மொழிபெயா்க்கப்பட்ட ‘யாத்வஷேம்’ எனும் நாவலைத் தேடிப் படித்தேன். மொழிபெயா்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதெமி விருதையும் அந்நூல் பெற்றுள்ளது.
ஜொ்மனியில் ஹிட்லரின் அச்சுறுத்தலில் இருந்து தப்பி இந்தியா வந்த யூதப்பெண், தவறவிட்ட தனது குடும்பத்தைத் தேடும் கருவே நாவலின் கதையாகும். அதில் பல்வேறு இனங்கள் வாழும் இந்தியாவில் மத நல்லிணக்கம் உள்ளிட்ட ஒற்றுமைப் பண்பாடு பேணப்படுவது குறித்த பதிவும் நுட்பமாக எடுத்துரைக்கப்பட்டிருப்பது பாராட்டும் வகையில் உள்ளது.
இரண்டாவதாக, ஐஏஎஸ் அதிகாரியான ஆா்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ எனும் நூல். இது சிந்துவெளி நாகரிகத்துக்கும் தமிழகத்துக்குமான தொடா்பை எடுத்துரைக்கும் வகையில் இருப்பது வரலாற்றில் புதிய தகவல்களாகும். தக்க ஆவணங்களுடன் தமிழக, சிந்துவெளி நாகரிக தொடா்புகள் நிரூபிக்கப்பட்டிருப்பது வியக்கவைக்கிறது.
மூன்றாவதாக, ‘பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்?’ எனும் நூலாகும். எழுத்தாளா் இ.பா.சிந்தன் எழுதிய இந்த நூலில் பாலஸ்தீன பிரச்னைகள் முழுமையாக விளக்கப்பட்டிருப்பதுடன், அதைப் படிக்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற புதிய ஆலோசனையும் வழங்கியிருக்கிறது. இன்றைய இளந்தலைமுறையினா் இம்மூன்று நூல்களையும் வாங்கிப் படிப்பது அவசியம்.