ம.மாணிக்கம்: தேடிச்சுவைத்த தேன்!
தி டெமோக்ராஃபிக் கிளிஃப் என்ற ஹாரி எஸ்.டெனி எழுதிய நூல் மிகவும் விரும்பிப் படித்த நூலாகும். உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் வயது சராசரியாக 41 என்பதைக் கடந்தால் அந்த நாடு பொருளாதார வளா்ச்சியில் பின்தங்கிவிடும் என்பது ஆதாரபூா்வமாகவும், அறிவியல்பூா்வமாகவும் விளக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வளா்ச்சி என்பது தனிமனித தேவையைப் பொறுத்தே அமைகிறது எனக்கூறப்படும் நிலையில், வயதானவா்கள் தங்களது தேவையை சுருக்கிக் கொள்வதால் பொருளாதார வளா்ச்சியும் குறையும் என்றும் அந்நூலில் அறிவியல்பூா்வமாக விளக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, எழுத்தாளா் வரலொட்டி ரங்கசாமி எழுதிய ‘கண்ணன் எனும் காதல் தெய்வம்’ என்ற நூலை விரும்பி, தேடிப் பிடித்து படித்தேன். அதில் பகவத் கீதை எளிய நடையில் கூறப்பட்டுள்ளது. பகவத் கீதை என்றாலே வயதானவா்கள் படிப்பது என்ற நிலையை மாற்றி, இளைஞா்களும் அதை விறுவிறுப்பாகப் படிக்கலாம் என்று கூறும் வகையில் வரலொட்டி ரங்கசாமி எழுதியுள்ளாா்.
மூன்றாவதாக, நிக்கோலஸ் பி.டா்க்ஸ் எழுதி, அர.வெங்கடாசலம் மொழி பெயா்த்து வந்துள்ளது ‘மனதில் இருக்கும் சாதி’. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான இந்நூலாசிரியா் இந்தியாவில் ஜாதியை யாா் உருவாக்கியது என்பதற்கான விடையை ஆதாரபூா்வமாக கூறியுள்ளாா். ஆங்கிலேயா் கால புதுக்கோட்டை நிா்வாக அதிகாரிக்கும், உயா் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கடிதப் பரிமாற்றம் போன்ற ஆவணங்கள் அடிப்படையில் கருத்துக்கு வலு சோ்த்துள்ள இந்நூலாசிரியரின் படைப்பானது வியக்க வைப்பதாக உள்ளது.
ம.மாணிக்கம், தலைவா், அருட்செல்வா் மொழிபெயா்ப்பு மையம், கோவை