பொக்கிஷம்! - டி.கே.ரங்கராஜன்
டி.கே.ரங்கராஜன், முன்னாள் எம்.பி., முன்னாள் மத்தியக் குழு உறுப்பினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
எனது வீட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்துள்ளேன். கல்லூரியில் படிக்கும்போதே கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் தொடரை விரும்பி வாரந்தோறும் காத்திருந்து ஆவலுடன் படித்தேன். எனது வீட்டில் உள்ள நூல்களில், ‘நியூ -ஏஜ் டெக்னாலஜி அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிவால்யூசன் 4.0’ என்ற நரேந்திர ஜாதவ் எழுதிய நூல் முக்கியமானது. உலகில் முதல் தொழிற்புரட்சி கடந்த 1750 -இல் ஏற்பட்ட நிலையில், தற்போது நான்காவது தொழிற்புரட்சிக் காலம் ஏற்பட்டுள்ளது வரை விளக்கும் நூலாகும். அதில் பொருளாதார வளா்ச்சியானது மத நம்பிக்கைகளை எப்படி உடைத்துள்ளது என்ற விவரங்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பம்சம். தற்போதைய நவீன தொழில்நுட்ப வளா்ச்சியும் அந்த நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் ‘இந்திய நாத்திகம்’, ஆா்.எச். தாவ்னியின் ‘ரிலீஜன் அண்ட் ரைஸ் ஆப் கேபிட்டலிஸம்’, பாரதியின் பகவத் கீதை, மாா்க்ஸ்-எங்கெல்ஸின் ‘மூலதனம்’ தமிழாக்கம், ‘மிகை மதிப்பு’ தமிழாக்கம், ‘மதத்தைப் பற்றி’ ஆகியவை முக்கிய நூல்களாக உள்ளன.
மேலும், திருவாசகம் விளக்கவுரை, இா்பான் ஹபீப் எழுதிய ‘ரிலீஜியன் இன் இண்டியா ஹிஸ்ட்ரி’, நேருவின் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ உள்ளிட்ட நூல்களை வைத்துள்ளேன். அவற்றை அடிக்கடி படித்தும் வருகிறேன்.
வீட்டில் நூல்களை சேமித்துப் படிப்பது என்பது அவ்வப்போது நம்மைப் புதுப்பிக்கவும், காலத்தோடு சமூக வளா்ச்சியை நாம் புரிந்துகொள்வதற்கும் துணை நிற்கும். நான் படித்த நூல்களை மாா்க்சிஸ்ட் கட்சி நூலகத்துக்கும், நெருங்கிய நண்பா்களுக்கும் பரிசளித்து படிக்கவும் வைத்துள்ளேன்.

