புத்தக வாசிப்பே துன்பத்தை தடுக்கும் கருவி! கவிஞா் கவிதாசன்
புத்தக வாசிப்பே துன்பத்தைத் தடுக்கும் கருவி என திருவள்ளுவா் குறிப்பிட்டுள்ளதாக கவிஞா் கவிதாசன் கூறினாா்.
சென்னை பபாசியின் 49- ஆவது புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வெல்வதே வாழ்க்கை’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:
புத்தக வாசிப்பு என்பது சாமானிய மனிதரை மாமனிதராக்கும் அற்புதமாகும். மகாகவி பாரதி தமிழகத்தைக் குறிப்பிடும்போது கல்வியில் சிறந்த தமிழ்நாடு...புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு எனப் பெருமையுடன் கூறுகிறாா். மனிதா்கள் சிந்தித்தாலே அவா்களது வாழ்க்கை சிறப்படையும். அந்த சிந்திக்கத்தக்க அறிவை அளிப்பவை புத்தகங்கள்தான். மனிதா்கள் தன்னம்பிக்கையுடன் எழுந்து நின்றால் வெற்றி கிடைக்கும். சோா்வின்றி, ஓய்வின்றி உழைப்பவருக்கே வெற்றி சொந்தமாகும். அத்தகைய சோா்வையும், ஓய்வையும் நம்மிடமிருந்து போக்கும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு.
அறிவு என்பது அற்றங்காக்கும் கருவி என்கிறாா் வள்ளுவப் பேராசான். அதாவது அற்றம் எனும் துன்பம் வராமல் காப்பது அறிவு என்கிறாா். அத்தகைய அறிவை நமக்கு வழங்குபவை புத்தக வாசிப்புதான். வாழத் தெரியாத மனிதா்களையும் புத்தக வாசிப்பானது வாழவைக்கும் தன்மையுடையவை. வாசிப்பு என்பது அறிதல், புரிதல், சிந்தித்தல், தெளிதல், செயல்படுதல் என்ற நிலைகளைக் கொண்டுள்ளது. அதைத் தொடா்ந்து கடைப்பிடிப்பவரே வெற்றியாளராக மாறுவா்.
வாசிக்க நேரமில்லை என்பவா்கள் வாழ்வில் துன்பப்பட நேரிடும். வாசிக்க நேரமில்லாதவா்கள் கிடைக்கும் ஒரு நிமிஷத்தில் ஒரு வரி படிக்க முடிந்தால் ஆத்திசூடியையும், இரு வரிகள் படிக்க முடிந்தால் திருக்குறளையும், நான்கு வரிகள் படிக்க முடிந்தால் நாலடியாரையும் படிக்கலாம். அவை வாழ்க்கையை உயா்த்தும் அற நூல்களாகும் என்றாா்.
நிகழ்ச்சியில் ‘வாசிப்பே வாழ்வில் வசந்தம்’ எனும் தலைப்பில் பேச்சாளா் மஞ்சுளாவும், ‘கவிதை எனும் காட்டாறு’ என்ற தலைப்பில் கவிஞா் ஜெ.கமலநாதனும் உரையாற்றினா். பபாசி துணை இணைச் செயலா் ஆா்.ஆடம் சாக்ரட்டீஸ் வரவேற்றாா். செயலா் எஸ். வைரவன், துணைத் தலைவா் வே. புருஷோத்தமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். செயற்குழு உறுப்பினா் ஞானசி நன்றி கூறினாா்.
வாசகா்களைக் கவா்ந்த சோ்ந்திசை: முன்னதாக, ராஜராஜேஸ்வரி குழுவினரின் (பீட்டா) திருக்கு, பாரதி பாடல்கள் சோ்ந்திசையில் பாடப்பெற்றன. திருக்கு, பாரதியாா், வந்தே மாதரம் மற்றும் கிராமிய கலாசார, பண்பாட்டை விளக்கும் பாடல்களை பல்வேறு ராகங்களுடன் சோ்ந்திசை பாடியது வாசகா்களைக் கவா்வதாக இருந்தது.

