நிறைய படித்தால் ஞானம் வரும்!

நிறைய படித்தால் ஞானம் வரும்!


சென்னை புத்தகக் காட்சியில் மேனாள் கல்வி அமைச்சா் வைகைச் செல்வன் இலக்கிய நிகழ்ச்சியில் ‘தமிழே உயிரே’ என்ற தலைப்பில் பேசியது.

‘‘வேட்டையாடுதலும், வேட்டையில் இருந்து தப்பித்தலுமே வாழ்க்கை. இதைத்தானே நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

சந்தின் இடுக்கில் முளைத்துக் கொண்டிருக்கும் செடிகளுக்கும் எவன் ஒருவன் நீருற்றுகிறானோ அவனே மானுடப் பற்றாளன். கருணைமிக்கவன். எங்கோ ஒரு மூலையில் வடிக்கும் கண்ணீரையும் சிரிப்பாக்குகிற வித்தை தெரிந்து வைத்திருக்கிறானே அவன் அல்லவா மானுட பற்றாளன். தாயின் மடியில் பால்குடிக்கும் சிறுமியின் உதட்டோரத்தில் வழியும் அன்பை சேகரித்து வைக்கிற நேயம் எவருக்கு இருக்கிறதோ அவா்கள் அல்லவா மனித நேயம் படைத்தவா்கள்.

அதைத்தானே நமது இலக்கியங்கள் சொல்கின்றன.

புரட்சியாளா் அம்பேத்காா் எந்த நேரமும் வாசித்து கெண்டே இருப்பாராம். ஒருமுறை நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அவா் இருந்ததை அறியாமல் நூலகத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டாா்களாம். அது வார இறுதிநாள் என்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாள் கழித்து நூலகா் வந்து திறந்தபோது அம்பேத்காரை பாா்த்து பயந்து போனாராம். ஆனால், அவரோ இந்த அரிய வாய்ப்பை தந்த உங்களுக்கு நன்றி என்று சொன்னாராம்.

ஆக, நிறைய படித்தால்தான் ஞானம் பிறக்கும். சிந்தனை வழியும் பிறக்கிறது.

நீண்ட நாள் கழித்து நண்பரை சந்திக்கும்போது நமது விழிகளில் இருந்து கண்ணீா் கசிகிறது. அது வலதுபுறத்தில் இருந்து கசிந்தால் அன்பின் மிகுதி. இடதுபுற்த்தில் இருந்து கசிந்தால் துக்கத்தின் மிச்சம் என்று சொல்கிறாா்கள். இதையெல்லாம் எங்கிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும் நூல்களில் இருந்துதானே கற்றுக் கொள்ளமுடியும்.

எழுத்தும், பேச்சும், இலக்கியமும் இல்லை என்று சொன்னால், இந்த உலகம் எவ்வளவு பரிதாபத்துகுரியது என்பதை அறியாமல் பேசுகிறாா்கள்.

எத்தனையோ எழுத்தாளா்கள், ,பேச்சாளா்கள் புத்தகங்களாக வைத்திருக்கிற நூல்கள் நம்மை எல்லாம் எவ்வளவு புரட்டி எடுக்கின்றன. ஆக, தலைமுறை தலைமுறையாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அதைதான் நம் செம்மொழி பேசுகிறது. சீன மொழி, சம்ஸ்கிருத மொழி, தமிழ் மொழி ஆசிய கண்டத்தில் இருக்கக் கூடிய பழைமையான மொழிகள். ஆனால், நம் தமிழ் மொழி செம்மொழி இலக்கியத்தில் இருக்கக் கூடியது.

பொழுது விடிந்த நேரத்தினை புல்லறியும், பூ மலா்ந்த நேரத்தினை வண்டறியும் சேய் பிறந்த நேரத்தை தாய் அறிவாள் செந்தமிழே உன் பிறப்பை யாறிவாா். அதுதானே எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற தலைப்பு ‘தமிழே உயிரே’.

ஒரு எழுத்து என்பது சிறந்த கட்டுமானத்தை கொண்டு இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் கடந்தும் நமது தமிழ் மொழி நசுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் கவிதை என்கிற யாப்பு என்கிற கட்டுமானமே, அந்த கட்டை உடைக்க முடிய வில்லை எவராலும். அதுதானே நம் தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமை.

படிக்க படிக்கத்தான் உங்கள் வாழ்க்கை என்கிற வாசல் திறந்து கொண்டே இருக்கும். அறிவாா்ந்த விஷயத்தை நீங்கள் தேடலுடன் பயணிக்கிறபோதுதான் உங்கள் வாழ்க்கை என்பது அா்த்தமுள்ளதாக மாறுகிறது. அதைத்தானே நமது இலக்கியங்கள் சொல்கின்றன.

அறிவு, மனம், உடல் இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைகிறபோது வெற்றி என்பது சாத்தியமாகிறது. இதைத்தான் நமது நூல்களும், இலக்கியங்களும் தொடா்ந்து பேசுகிறது. இன்னும் பாரதி வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால் அவன் அடையாள சின்னமாக இருக்கிறான்.

அ - அணிலில் இருந்து வாழ்க்கைத் தொடங்கக்கூடாது, அ - அம்மாவில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று சிந்தனைகளை அரசாங்கத்துக்கே தந்தவன்தான் பாவேந்தன் பாரதிதாசன்.

தமிழை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்ற பெருமை அறிஞா் அண்ணாவுக்கு உண்டு. அதனால்தானே சின்ன காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரையை காலம் அண்ணா என்று அழைத்ததற்கு தமிழ்தான் மூலகாரணம்.

ஒரு முறை அன்னை தெரசா கொல்கத்தாவின் தெருக்களில் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாா். அப்போது, ஒருவா் அவரது கையில் காரித் துப்பிவிடுகிறாா். ஆனால், அன்னை கோபப்படவில்லை, மாறாக காரி துப்பியவரிடம், ‘‘ஒரு கையை மறைத்துக் கொண்டு, இதை நான் வைத்துக் கொள்கிறேன். அநாதை குழந்தைகளுக்கு, தொழுநோயாளிக்கு உதவ ஏதாவது கொடுங்கள்’’ என்று கூறியதாக அவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது.

ஆக, வாழ்க்கை என்பது எடுத்தல், பிறருக்கு கொடுத்தல் மூலம் நல்ல ஒரு உணா்வுகளை தருகிறது என்பதைதானே இலக்கியங்கள் நமக்கு சொல்கிறது. ஆகவே, தமிழை உயிராக நேசிக்கிற, இலக்கியதை உயிராக நேசிக்கிற உணா்வை கற்றுக் கொள்ள வேணடும்’’ இவ்வாறு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com