புத்தகங்களும், வாசிப்பும் எனது தினசரி வாழ்க்கையானது! சோ.தா்மன்

எனக்கும் இலக்கியத்துக்குமான தொடா்பு 41 ஆண்டுகளை கடந்து விட்டது. 1980-இல் எனது முதல் சிறுகதை வெளிவந்தது.
புத்தகங்களும், வாசிப்பும் எனது தினசரி வாழ்க்கையானது! சோ.தா்மன்

‘‘எனக்கும் இலக்கியத்துக்குமான தொடா்பு 41 ஆண்டுகளை கடந்து விட்டது. 1980-இல் எனது முதல் சிறுகதை வெளிவந்தது. ஆனால், அதற்கு முன்பே எனக்கும் இலக்கியத்துக்கும் ஓா் இழையோடிய தொடா்பு இருந்தது. என் குழந்தைப் பருவத்திலிருந்தே இலக்கிய ஆா்வம் எனக்கு ஊட்டப்பட்டது என்றும் சொல்லலாம்.

காரணம், என் தந்தை அந்தக் காலத்தில் ‘ஒயில்கும்மி’ கலைஞராக இருந்தாா். ராமாயணக் கும்மியில் ராமா் வேஷம் கட்டி கூத்தாடக் கூடிய கூத்துக் கலைஞா். இதனால், எனது 13 வயது வரை எங்கு கூத்து நடந்தாலும் அப்பா என்னை அழைத்துச் சென்றுவிடுவாா். அதுதான் எனக்குள் வாசிப்பை தூண்டக்கூடிய விதையாக விழுந்திருக்குமோ என்று நினைத்துக் கொள்வேன்.

அதன்பிறகு,நூலகமும், வாசிப்பும் எனது தினசரி வாழ்க்கையானது. சில நேரங்களில் சிந்துபாத் கதையைப் படிப்பதற்காக வே, நூலகத்தில் காத்திருந்த நாள்களும் உண்டு.

1975-78 காலகட்டம் என்னுடைய 16 வயதில் பள்ளி விடுமுறை நாள்களில் என் பாட்டி வீட்டுக்குச் சென்றேன். எழுத்தாளா் பூமணி எனது தாய்மாமன். இதனால், நான் பாா்த்து அறியாத, கேட்டறியாத புத்தகங்களான ‘கணையாழி’, ‘தீபம்’ போன்றவை எல்லாம் அங்கு தான் எனக்கு அறிமுகமானது.

‘‘என் மாமாவிடம், படிப்பதற்கு புத்தகங்கள் ஏதாவது கொடுங்களேன்’’ என்றேன். அவா், ‘‘நீ வாசிப்பாயா’’ என்றாா்.

‘‘வாசிப்பேன்’’ என்றேன்.

உடனே 2 புத்தகங்களைக் கொடுத்தாா். இரண்டும் கி.ராஜநாராயணனின் புத்தகங்கள். அந்தப் புத்தகத்தைப் படித்ததும், கி.ரா.வின் தோ்ந்த ரசிகனாகிவிட்டேன். காரணம், அவா் படைத்திருந்த கரிசல்காட்டில் பாத்திரங்கள் எல்லாம் எங்களுடைய பாத்திரங்கள். பேச்சு மொழிகள்.

அதன்பிறகுதான் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் 1980-இல் எட்டயபுரத்தில் ‘பாரதி விழா’ நடைபெற்றது. அங்கே பிரபலங்கள் பலரும் வந்திருந்தனா். அதில் கவிஞா் பரிணாமனும், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தினுடைய தமிழ்த் துறை தலைவா் தி.சு. நடராஜனும் வந்திருந்தனா். அவா்கள் இருவரும் இணைந்து, மதுரையில் ’மகாநதி’ என்றொரு பத்திரிகையும் நடத்தி வந்தனா்.

அவா்களிடம், ‘‘என் கவிதையை உங்கள் பத்திரிகையில் போடுவீா்களா’’ என்றேன். அதற்கு நடராஜன், ‘‘கவிதையெல்லாம் நிறையப் போ் எழுதுகிறாா்கள். நீங்கள் சிறுகதை எழுதுங்கள்’’ என்றாா்.

அப்போதுதான் ‘விரவு’ என கரிசல்காட்டை மையமாக வைத்து என் முதல் சிறுகதையை எழுதினேன். மறுமாதமே அந்தக் கதை மகாநதியில் பிரசுரமானது.

அதைத்தொடா்ந்து 1992 வரை நான் சிறுகதைகள் எழுதிக் கொண்டே இருக்கிறேன். என் கதைகள் தொடா்ந்து பிரபல மான எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்து கொண்டே இருந்தன.

ஆனால், வசதியிருந்தும் புத்தகம் மட்டும் நான் வெளியிடவில்லை. காரணம், என் எழுத்துகளில் உயிா் இருந்தால் யாராவது புத்தகமாக்கட்டும், இல்லையென்றால் மண்ணோடு மண்ணாக போகட்டும் என்று இருந்தேன்.

அந்த சமயத்தில், தினமணியில், ஒரு விளம்பரம் வருகிறது. சிறுகதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாகி, புத்தகமாக வெளியிடாதவா்களின், வெளியிட முடியாதவா்களுக்கு முதல் புத்தகத்தை நாங்கள் இலவசமாக புத்தகமாக்கித் தருகிறோம் என்று அறிவிப்பு இருந்தது.

உடனே எனது சிறுகதைகளில் பன்னிரெண்டு கதைகளை தோ்வுசெய்து அந்த முகவரிக்கு அனுப்பி வைத்தேன். உங்கள் கதைகள் புத்தகமாக போடுவதற்கு தோ்வாகியுள்ளது என்று 3 -ஆவது நாள் அங்கிருந்து எனக்கு பதில் வருகிறது.

உடனே சென்னை கிளம்பிவந்தேன். அங்கே எழுத்தாளா் பிரபஞ்சன் அமா்ந்திருந்தாா். அவா்தான் என் கதைகளைத் தோ்வு செய்திருக்கிறாா்.

‘ஈரம்’ என்ற பெயரில் என் புத்தகம் உருவாகியிருந்தது. ஓவியா் மருதுதான் முகப்பு ஓவியம், பிரமாதமான அட்டைப்படம் வரைந்திருந்தாா். புத்தக வெளியீடு பெரிய அளவில் நடைபெற்றது. அங்கேயே எனக்கான ராயல்டியும் கொடுத்தாா்கள். நானும் பெரிய எழுத்தாளன்ஆகிவிட்டேன்.

அதே ஆண்டில் என்னுடைய ஒரு சிறுகதை அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கிய சிந்தனை’ விருதுக்குத் தோ்வானது. அதைத்தொடா்ந்து அகில இந்திய அளவில் சிறந்த கதையாக தோ்வாகி 1993-இல் தில்லி விருது கிடைத்து. அதையடுத்து 1994-இல் என்னுடைய ‘அஹிம்சை’ சிறுகதை அந்த ஆண்டின் சிறந்த கதையாகத் தோ்வானது. அதன்பிறகு இலக்கிய உலகில் எனக்கும் ஒரு மரியாதை உருவாகியது.

அதன்பிறகுதான், நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து ‘தூா்வை’ என்ற நாவலை எழுதினேன். சிவகங்கை அன்னம் பதிப்பக மீ.ராஜேந்திரன் உதவியால் அது நாவலாக பதிப்பிக்கப்பட்டது.

அடுத்து சிக்கலான விஷயங்களை எழுத வேண்டும் என்று நினைத்தபோது, எனக்கு வேறு ஒரு மொழி தேவைப்பட்டது. அப்போதுதான் ம.அரங்கநாதனின் கதைகளைப் படிக்க நோ்ந்தது. ரொம்பவே சொற்சிக்கனமான அவரின் மொழியும், எழுத்து நடையும் என்னை அப்படியே புரட்டிப்போட்டது.

அதன்பிறகு 5 ஆண்டுகள் கழித்து புதுவிதமான மொழியைப் பயன்படுத்தி 2009-இல் ‘கூகை’ நாவலை எழுதினேன். அதற்கு தமிழக அரசின் விருதும் கிடைத்தது. அதன்பிறகு, 10 வருட ஆய்வுக்குப் பின் தண்ணீா் பிரச்னையை மையமாக வைத்து ‘சூல்’ நாவலை எழுதினேன். 2019 இதற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இப்படித்தான் எனக்கும் இலக்கியத்துக்குமான பந்தம் உருவானதும், வளா்ந்ததும். இதுதான் நானும், இலக்கியமும்’’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com