கார்ல் மார்க்ஸ் - வாழ்வும் சிந்தனையும்

புத்தகம்: கார்ல் மார்க்ஸ் - வாழ்வும் சிந்தனையும்; ஆசிரியர்:  அருணன்
கார்ல் மார்க்ஸ் - வாழ்வும் சிந்தனையும்
Published on
Updated on
1 min read


கார்ல் மார்க்ஸ் - வாழ்வும் சிந்தனையும் -  அருணன்

பேராசிரியர் அருணன் எழுதிய காரல் மார்க்ஸ் - வாழ்வும் சிந்தனையும் என்னும் நூல் காரல் மார்க்சைப் பற்றி முதன்முறையாகப் படிக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த புத்தகம். இந்த புத்தகத்தை வாசிக்கும்போது 19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிஞர், சிந்தனையாளர் மற்றும் படிப்பாளி என பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான காரல் மார்க்சைப் பற்றி படிக்கும்போது கண்ணீர் சிந்தாமல் கடந்துவிட முடியாது. இதுபோன்ற மகத்தான மனிதர்கள் மறைந்து 120 ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாறு தன் பக்கங்களில் வைத்து அழகு பார்க்கிறது என்றால் அவர் வாழ்க்கையும் கொள்கையும் மகத்தானவை என்பதை அறிந்துகொள்ளலாம்.

வரலாறு என்பது சுகமான கடற்கரை சாலை அல்ல. அது கடினமான மலையேற்றப் பாதை. அங்கே பல விபத்துகளை ஏற்படுத்தும்  மேடு பள்ளங்களும் எதிர்பாராத வளைவுகளும் திடீர் திருப்பங்களும் இருக்கும். அதையெல்லம் தன் கொள்கைகளால், சாதனைகளால் செப்பனிட்டுக்கொண்டே முன்னோக்கிச் சென்றவர் கார்ல் மார்க்ஸ் என்பதை தெரிந்துகொள்ளலாம். வரலாற்றில் இடம்பெற்ற மார்க்சின் நண்பரான ஏங்கல்சும், அவரது மனைவியான ஜென்னி மார்க்ஸும் இது போன்ற ஒரு நண்பன் கிடைக்கமாட்டானா, ஒரு மனைவி கிடைக்கமாட்டாளா என்று நம்மை ஏங்க வைக்கிறார்கள்.

23 ஆண்டுகாலம் நூலகத்திலேயே வாழ்க்கையை கழித்து, நாற்பதாயிரம் புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்து, தான் புகைத்துப்போடும் போடும் சுருட்டுக்குக்கூட தான் எழுதும் புத்ககத்தின் வருவாய் போதாது எனத் தெரிந்தும் மூலதனம் என்னும் நூலை உலக மக்களுக்குத் தந்த காரல் மார்க்ஸ், உறவுகளை நிர்ணயிப்பதே பொருளாதாரம்தான் என்று சொன்னவர், வாழ்நாள் முழுக்க பொருளாதாரச் சிக்கலில் இருந்ததை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த நூல். சிலர் வாழ்வில் படிப்பார்கள், ஆனால் மார்க்ஸ் வாழ்க்கையை எழுதுவதற்கும், படிப்பதற்கும், வறுமையும் அரசாங்கமும் தன்னை பந்தாடுவதற்குமே வாழ்ந்த கொள்கைப் பிடிப்புள்ள மாமனிதன் என்பதை வாசகனுக்கு சொல்லும் அற்புதமான புத்தகம் இது.

மூலதனம் என்பது சேர்த்து வைக்கப்பட்ட உழைப்பே என்றும் ஓர் உழைப்பாளி தான் உருவாக்கியது தனக்கு கிடைக்காமல் போகிற துரதிஸ்டத்தை அந்நியமாக்கப்பட்ட உழைப்பு என்றும் முதலாளிகளின் தனிச்சொத்தே அந்நியமாக்கப்பட்ட உழைப்பால் வந்தது என்றும் தன் கருத்தை தைரியமாக பதிவுசெய்தார் மார்க்ஸ். ஆளும் வர்க்கம் அவரை பல நாடுகளில் இருந்து துரத்தினாலும் அவர் எவ்வாறு அவற்றையெல்லாம் எதிர்கொண்டு வரலாற்றில் நீங்க இடம்பிடித்தார் என்பதையும் நல்ல மொழிநடையோடு நூலாசிரியர் 396 பக்கத்தில் எழுதியிருக்கிறார். இந்த நூலைப் படித்தால், எந்த வறுமை நிலைக்கும் தளர்ந்து போகாத நம்பிக்கையை நீங்கள் பெறுவீர்கள். ஊரடங்கு தொடரும் இந்த நேரத்தில் இந்த புத்தகம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் படித்துப் பயன் அடையுங்கள்.

- கு. முருகேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com