கிழவனும் கடலும்  

புத்தகம்: கிழவனும் கடலும் - எர்னெஸ்ட் ஹேமிங்வே
கிழவனும் கடலும்  
Published on
Updated on
2 min read


கிழவனும் கடலும்  - எர்னெஸ்ட் ஹேமிங்வே    


நோபல் பரிசு பெற்ற  எர்னெஸ்ட் ஹெமிங்வேவின்  “ தி ஓல்ட் மேன் அன்ட் தி சி” என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம்தான்  கிழவனும் கடலும் என்ற நூல். எம்.எஸ். இதை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீன் பிடிக்கும் ஓர் எண்பது வயதுக்கு மேற்பட்ட  கிழவனும், புதிதாக மீன் பிடிக்கக் கற்றுக்கொள்ள விரும்பும் ஓர் இளைஞனும்தான் இக்கதையின் முக்கிய கதை மாந்தர்கள். இது ஆங்கிலத்தில் வெளிவந்து அரை நூற்றண்டுக்கு மேல் ஆனாலும் இன்றும் அதைப் படிக்கும்போது திரையங்கில் இருக்கையின் நுனியில் உட்கர்ந்து படம் பார்க்கும், படத்தின் சுவையையும் விறுவிறுப்பையும் பெற்றுள்ளது இந்நூல். 

இந்த நாவலின் கதைப்படி ஓர் அனுபவமிக்க கியூபாவின் மீனவக் கிழவன், தன் வலையில் சிக்கிக்கொண்ட ஒரு பெரிய முரல் மீனுடன் போராடிய கதையே இந்த நாவல். சாண்டியாகோ என்ற வயதான மீனவர், மனொலின் என்ற ஓர் இளம் மீன் பிடிக்க பயிற்சிபெறும் இளைஞனுடன் பல நாட்களாக கடலுக்குள் மீன் பிடிக்கப் போகிறான். மீன் கிடைக்கவில்லை. இவ்வாறு மீன் பிடிக்க இயலாமல் ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தொடர்ந்து 84 நாட்கள் சென்றும் ஒரு நாளும் மீன் சிக்கவில்லை. எனவே அந்த இளைஞனின் பெற்றோர்கள் வயதான சாண்டியாகோ என்னும் கிழவன் அதிர்ஷ்டம் இல்லாதவன்  என்று எண்ணி, வயதான மனிதருடன் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்து மற்ற மீனவர்களுடன் தன் மகனை மீன்பிடிக்க அனுப்பினார்கள். எந்த கடுமையான சூழலிலும் நம்பிக்கை இழக்காமல், நான் வளைகுடா நீருக்குள் நீண்ட தூரம் பயணித்து மீன் பிடித்து அந்த இளைஞனின் பெற்றோர்களின் எண்ணத்தை மாற்றுவேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் அந்த பெரியவர். 
 
எண்பத்தி ஐந்தாவது நாளில், சாண்டியாகோ என்னும் முதியவர்  வளைகுடா நீரோடையில் செல்வதற்கு, அவருடைய லேசான சிறு படகை  எடுத்து, தனியாக புறப்பட்டார். முதல் நாள் நண்பகலில் அவர் தூண்டிலை வீசியபோது, ஒரு பெரிய மார்லின் என்ற மீன் அவரது இரையை எடுத்துக்கொண்டது, என்பது அவருக்குத் தெரிகிறது. ஆனால் அவரால் அந்த பெரிய மார்லின் என்ற மீனை இழுக்க முடியவில்லை. மாறாக அவரது லேசான சிறு படகையும் மீன் இழுப்பதை சாண்டியாகோ உணருகிறார். இவ்வாறு வயதான மனிதன் தன் உடலால் தூண்டிலின் அழுத்தத்தை தாங்கியவாறு இரண்டு பகல் மற்றும் இரண்டு இரவுகள் போராடுகிறார். அவருக்கு, போராட்டத்தின் மூலம் வலியும் காயமும் ஏற்பட்டிருப்பினும் சாண்டியாகோ ஒரு அண்ணனைப்போல் தனக்குத் தானே ஆறுதலையும் பாராட்டுக்களையும் கூறிகொண்டார். மேலும் மீனின் பெரும் கண்ணியத்தை எண்ணி, மார்லினை உண்ணத் தகுதியானவர் எவருமில்லை என்று தீர்மானிக்கிறார். மிகப்பெரும் போராட்டத்தின் மூன்றாவது நாளில் மீன், லேசான சிறு படகை வட்டமிட தொடங்குகிறது. சாண்டியாகோ, பக்கத்தில் மீனை இழுக்க அவரிடம் இருந்த அனைத்து உடல் மற்றும் மன வலிமையையும் பயன்படுத்தி, ஒரு ஈட்டி கொண்டு மார்லினை குத்தி, களைப்படைந்த வயதான மனிதர் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதுதான் கதை. 

இது ஹெமிங்வே எழுதி அவரது வாழ்நாளில் வெளியிட்ட முக்கிய நாவலாகும். அவரது தி ஓல்ட் மேன் அண்ட் சீக்காக 1953ல் புனைவுக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டதோடு 1954ல் இலக்கியத்திற்கான பங்களிப்பை வழங்கிய ஹெமிங்வேவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த கதையை மையப்படுத்தி பல மொழிகளில் திரைப்படங்களும் எடுக்கப்பட்டன. இது ஆங்கிலத்தில் 38 பக்கத்தில் எழுதப்பட்டுள்ள நாவல் தற்பொழுது தமிழில் “கிழவனும் கடலும்” என்ற புத்தகமாக கிடைக்கிறது. இந்த ஊரடங்கு நேரத்தில் படித்து பயன் பெறக்கூடிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.

- கு. முருகேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com