அறிவியல் புதையல்

புத்தகம்: அறிவியல் புதையல்    ஆசிரியர்: டாக்டர் குமார் கணேசன்
அறிவியல் புதையல்


அறிவியல் புதையல் - டாக்டர் குமார் கணேசன்

அறிவியல் புதையல் என்னும் புத்தகம் டாக்டர் குமார் கணேசன் எழுதியுள்ள ஓர் அற்புதமான அறிவியல் கட்டுரை நூல். இந்த நூலில் 20 அறிவியல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரையின் ஒவ்வொரு தலைப்பையுமே ஒரு கவிதையைப்போல சிந்தித்துள்ளார் ஆசிரியர்.  நூலாசிரியரைப் பற்றிய குறிப்பை பார்க்கும்போது வேதியியல் துறையில் முனைவர் பட்டத்தை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடியில்) பயின்று, அமெரிக்காவிலுள்ள ப்ருடே பல்கலைக்கழகத்தில் உயர் முனைவர் பட்டம் பெற்று ஆங்கிலத்திலும் அறிவியலிலும் நல்ல புலமையும் நிபுணத்துவமும் பெற்றிருந்தும் தமிழில் அவர் இந்த கட்டுரைகளை எழுதியிருப்பது தமிழின் மீது அவருக்குள்ள ஈடுபாடும், மொழிநடையும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பறவை என்னதான் உயர உயர பறந்தாலும் அதற்கு இரை என்னவோ பூமியில்தான் என்பது போல எந்த தேசத்திற்குப் போனாலும் தன் தாய்மொழியான தமிழில் அறிவியல் கட்டுரைகளை எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார் டாக்டர் குமார் கணேசன்.

இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளும் புதுமையாக இருக்கிறது. உதாரணமாக “எட்டுக்கால்களா.... எண்ணற்ற மூளையா" என்னும் கட்டுரையில் சிலந்தி என்னும் எட்டுக்கால் பூச்சி மற்றும் அதன் வலையைப் பற்றிய அறிவியல் செய்திகள் நமக்கு புதுமையாக இருப்பதோடு நல்ல மொழிநடையில் எழுதியிருப்பது வாசகர்களை கவருகிறது. இந்த கட்டுரையில் “சிலந்தியின் வலையானது, சூரியனின் புறஊதா கதிர்களின் வெளிச்சத்தில் பார்க்கும் போது, அது பூச்சி இனங்களுக்கு பூ போல தெரியுமாம் ... அதனால்தான் அதில் தேனீ, வண்டுகள் போன்றவை தேனெடுக்கப் போய் மாட்டிக் கொள்கின்றனவாம்”.  அடடா! என்ன கவிதை நடை. மேலும் “பூச்சியைப் பிடிக்கும் அந்த வலையின் பசை, எட்டுக்கால் பூச்சியை ஏன் பிடிப்பதில்லை என்றால், அதன் நெடுக்கு வாட்டில் உள்ள இழையில் பசைத் தன்மை இல்லாமலும், குறுக்கு வாட்டில் உள்ள இழையில், பசைத் தன்மையுடனும் இருப்பதுதான் காரணமாம். அதாவது சிலந்தி தன் உடலில் சுரக்கும் சுரப்பியைக்கொண்டு வலையைப் பின்னுகிறது. ஆனால், இதற்கு இரண்டு சுரப்பிகள் உண்டு. ஒன்றில் சுரப்பது மட்டும் ஓட்டும் தன்மை கொண்ட பசை உள்ளது, மற்றொன்றில் சுரப்பது பசை இல்லாதது. நேர்கோடு போல நெய்த நூலில் பசை கிடையாது, ஆனால், குறுக்காக,  வட்ட வடிவமாகப் பின்னப்படும் நூலில் பசை இருக்குமாம். சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியைப்  பிடிக்க, தான் போட்ட ஒட்டாத நேர் சாலையில் செல்கிறது,. அப்படியே குறுக்கு நூலில் கால் பட்டாலும், அது ப்ரோட்டீனால் ஆனது  என்பதால், அதனை உணவாக சிலந்தி சாப்பிட்டு விடுமாம்”. இப்படி பல புதிய அறிவியல் புதையல்களை இந்த நூல் முழுவதும் வைத்திருக்கிறார். மேலும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் இந்த கட்டுரைகளை நேரலை.காம் என்னும் இணைய தளத்தில் தொடராக எழுதியுள்ளார். அவருடைய எழுத்து நடை அவரே நம்மோடு பேசுவது போல இருக்கிறது.

இதே போல் கூட வீடா அல்லது நாடா? என்னும்  கட்டுரையில் தேனீக்களைப் பற்றியும் அதன் கூட்டையும், வீட்டையும் நாட்டையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் ஒப்பீடு மிக அருமை. உலகத்தில் தேனீக்கள் மட்டும் இல்லை என்றால் உலகமே நான்கே ஆண்டுகளில் அழிந்து போகும் என்று கூறிய ஐன்ஸ்டீன் கருத்தையும் இங்கு நினைவுபடுத்தி இருக்கிறார். மின்மினி தூண்டும் மின்விடு தூது, கலங்காமல் கலக்கும் கரப்பான் பூச்சி, அசைவம் உண்ணும் தாவரம், சைவமா? என்று  பல்வேறு (கவிதை) தலைப்புகளில் எழுதியிருக்கும் ஒவ்வொரு கட்டுரையையும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். மாணவர்களே இதுபோன்ற புத்தகங்களை தூங்காமல் படிக்காதீர்கள் ஆனால் படிக்காமல் தூங்காதீர்கள். பொதுவாக,  தூங்காமல் படித்தால் தேர்வில் தூங்கி விடுவீர்கள், படிக்காமல் தூங்கினால் வாழ்வில் ஏங்கி விடுவீர்கள். எனவே இதுபோன்ற புத்தகங்களை மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் படிக்கலாம்.

- கு. முருகேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com