செவ்வி: பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள்

புத்தகம்: செவ்வி - பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள்
செவ்வி: பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள்


செவ்வி - பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள்

தமிழகப் பண்பாட்டு சூழல், நாட்டுப்புற சிறு தெய்வ வழிபாடு, பெருந் தெய்வங்களின் சமூக மரபுகள், திராவிட இயக்கம், பகுத்தறிவு இயக்கம் பொதுவுடைமை இயக்கம் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் என்று நாம் பார்க்கத் தவறிய பல்வேறு தளங்களில் பேராசிரியர் தொ.பரமசிவன் மேற்கொண்ட ஆய்வுகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இவர் டாக்டர் பட்டத்திற்காக ஆய்வு செய்த அழகர் கோயில் பற்றிய ஆய்வு பல்கலைக்கழக ஆளவில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இன்றும் தொடர்ந்து பல களஆய்வுகளை செய்துவருபவர் பேரா. தொ. பரமசிவன் என்பது தமிழ்த்துறையில் ஆய்வில் இருப்போருக்குத் தெரியும். ஒரு மனிதன் யார் என்று முடிவு செய்வது அவனுடைய வெளித்தோற்றம் அல்ல அவனுடைய எண்ணங்கள் அல்லது சிந்தனைகள்தான். செவ்வி என்ற இந்த புத்தகத்தை பேராசிரியர் பரமசிவனிடம் நடத்திய பல நேர்காணல்களைத் தொகுத்து,  கலப்பை பதிப்பகம் புத்தகமாக கொண்டுவந்திருக்கிறது. இந்தப்  புத்தகம் பேராசிரியரின் பரந்துபட்ட சிந்தனை ஓட்டத்தை அற்புதமாக பதிவு செய்திருக்கிறது. நம்மிடம் காலம் காலமாக தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள பல கருத்துகளுக்கு புது வெளிச்சம் பாய்ச்சுவதாக இவருடைய நேர்காணல் பதில்கள் அமைந்திருக்கின்றன. 

நாட்டார் மரபில் தெய்வங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்பது எதார்த்தமான ஒன்றாக உள்ளது. நாட்டார் மரபில் இழிவு என்று ஒன்று இல்லை. இறந்துபோன தந்தை மகன் உருவில் வருகிறார். அதாவது,  அப்பா, மகனாக வருகிறார். தந்தை பெயர்ந்து மகனாக வருவதால்தான் பெயரன் (பேரன்) என ஆயிற்று என்று அதற்கான காரணத்தையும் அவர்கள் வாழ்வில் புழங்கும் வார்த்தைகள் மற்றும் உறவு முறைகளில் இருந்தே சொல்லியிருப்பது நம் சிந்தனையையும் தூண்டும் விதமாக உள்ளது. 

இவரது ‘தெய்வங்களும் சமூகமரபுகளும்’, ‘அறியப்படாத தமிழகம்’ மற்றும் ‘பண்பாட்டு அசைவுகள்’ போன்ற நூல்கள் மக்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்ற நூல்கள் என்றாலும், செவ்வி என்ற நூல் முழுக்க முழுக்க நூலாசிரியரின் மீது முழு கவனத்தையும்  செலுத்தியுள்ளது. அவரைப் பற்றி அறிமுகம் செய்யச்சொல்லி கேட்டபோதுகூட ,” என்னுடைய சொந்த ஊர் பாளையங்கோட்டை, பெரும்பாலும் கிறிஸ்துவ நகரம் என்று அறியப்பட்டிருந்த இந்நகரில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வைஷ்ணவக் கோயில்கள் எல்லாம் இங்குண்டு,  அதன் பெயர் ஸ்ரீ வல்லப மங்கலம் என்று” ஆய்வுக் கண்ணோட்டத்தோடு தன்னை அறிமுகப்படுத்திகொண்டது, ஆய்வில் அவருக்கு  இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. மேலும் அது கல்வித்தரமுடைய நகரம் என்றும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கண் தெரியாதவர்கள், காது கேளாதோர் பயிலும் பள்ளியும், கைதிகளும் படிக்கும் வசதியும் நூலகமும் இருந்ததால் அன்றைய  மாணவர்களிடம் இயல்பாகவே வாசிப்புப்பழக்கமும் இருந்தது என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே வேளையில், தற்போதைய சூழலில் பெருகிவரும் தொலைக்கட்சி மற்றும் இன்டர்நெட் போன்ற சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் வாசிப்புப் பழக்கம் தற்போதைய மாணவர்கள் மத்தியில்  குறைந்துள்ளதாக வருத்தப் படுவதையும் அவர் பதிலில் இருந்து காணமுடிகிறது. இப்பொழுது பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோர்கள் எண்ணிக்கை பெருகி இருக்கின்றன, ஆனால் புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்கிற புள்ளிவிவரம் சமூக நலனுக்கு ஏற்றதல்ல. தற்பொழுது கல்வி நிலையங்கள் எல்லாம் மதிப்பெண்களை வாரிக் குவிக்கும், சொன்னதையே திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகளைத்தான் உருவாக்குகின்றன. சிந்தனையாளனை உருவாக்குவதில்லை. புத்தக வாசிப்புதான் சிந்தனையாளனை உருவாக்கும். நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்,  “புத்தகத்திலிருந்து நமக்கு புத்தி வந்தால் நாம் படிப்பாளி, நம் புத்தியிலிருந்து புத்தகம் வந்தால் நாம் படைப்பாளி”. யார், வாழ்கையில் உச்சம் தொடவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களுக்கெல்லாம் ஒன்று படிப்பாளியாகவோ அல்லது படைப்பாளியாகவோ இருப்பது அவசியம்.

பேராசிரியர் தொ.ப.விற்கு முன் கோயிலைப் பற்றி ஆய்வு செய்தவர்களின் ஆய்வுகள் எல்லாம் கோயிலின் கலைநுட்பத்தைப் பற்றிய ஆய்வாகவே இருந்துள்ளது. இவர்தான் ஆய்வை கோயிலுக்கும் மக்களுக்கும் உள்ள உறவுகளைப் பற்றிய ஆய்வாக மாற்றியுள்ளார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு ஒன்று, அழகர் கோயில் பகுதியில் உள்ள சில கிராமங்களில் வீட்டுவேலை செய்வதற்கோ, ஆடு,மாடுகளை மேய்ப்பதற்கோ ஆட்களை அமர்த்தினால், சித்திரை மாதம் அழகர் ஆற்றில் இறங்கும் அன்று வேலையை விட்டுச் சொல்லிக்கொள்ளாமலேயே நின்றுகொள்ளலாம். அதற்குமுன் அவ்வாறு நிற்க முடியாது. அதற்கு ‘சித்திரை விடுதி’ என்றே பெயர். சித்திரையில் ஒருவன் தனைத்தானே விடுதலை செய்துகொள்ளலாம். அப்படியொரு எழுதப்படாத சட்டம் மக்கள் வரலாறாக, அதே சமயம் கோயில் சார்ந்ததாகவும் இருக்கிறது என்பதை  நாம் அறிந்துகொள்ள முடிகிறது. 
சிறு தெய்வங்கள் உள்ள கோயில்கள் எல்லாம் சொத்துடமையுள்ள நிறுவனங்களாக மாறுவதில்லை. ஆனால் அரசின் ஆதரவு பெற்ற எல்லாக் கோயில்களும்  சொத்துடமை நிறுவனங்களாக மாறிவிடுகின்றன என்ற ஆன்மிக நுட்பத்தையும் நமக்கு உணர்த்துகிறார். 

மேலும் இதுபோன்ற பல மக்கள் வாழ்வோடு இணைந்த மிக நுட்பமான விஷயங்களை இந்தப் புத்தகத்தில் பேராசிரியர் தொ.ப. பகிர்ந்துள்ளார். அவற்றையெல்லாம் படித்து இந்த ஊரடங்கு காலத்தைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

- கு. முருகேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com