தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய 'என் சரித்திரம்'

தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய 'என் சரித்திரம்'
தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய 'என் சரித்திரம்'


தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய 'என் சரித்திரம்' 

தமிழ் மக்களும் தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியலிட்டால், அதில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரம்’ நூல் முதல் மூன்றில் ஒன்றாக இருக்கும். 

சமீபத்தில் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். சரித்திர வாழ்க்கை வாழ்ந்த ஒரு மேதையின் சரித்திரத்தைப் படிப்பது, அவருடனே பயணிப்பது போன்ற பிரமிப்பைத் தந்தது.

உ.வே.சா. அவர்களின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. 19-ஆம் நூற்றாண்டின் இணையற்ற தமிழறிஞர். படித்தால் இவரிடம்தான் தமிழ் படிக்க வேண்டும் என்று தவமிருந்து, அந்த நல்வாய்ப்பும் அமையப்பெற்றதால் ஆசிரியரிடம் மிகுந்த பக்தி கொண்டிருக்கிறார். ‘ஆசிரியப்பிரான்‘ என்றே அவரைக் குறிப்பிடுகிறார். இருவருக்கும் இடையே ஒரு நல்ல ‘கெமிஸ்ட்ரி‘ இருந்திருக்கிறது. பிள்ளை அவர்கள் இறக்கும் தருவாயில் இவரது மனநிலையும், கடைசி மூச்சின்போது இவர் வாயால் தேவாரம் பாடக் கேட்டு அவர் கண்ணீர் மல்கியதும் உணர்வுப்பூர்வமானது. இவற்றைப் படிக்கும்போது, நமக்கு இப்படி ஒரு ஆசிரியர் அமையவில்லையே என்ற ஏக்கம் வருகிறது. உ.வே.சா. போன்ற மாணவராக நாம் இல்லையே என்ற நினைவு வந்ததும் ‘வார்த்தை முட்டுது‘.  
 
எல்லோரும் படிப்பது போலவே செய்யுள்களைப் படிக்காமல், அவற்றின் அமைப்புக்கு ஏற்ற ராகத்துடன் இவர் படித்தமை கேட்போர் உள்ளதைக் கவர்ந்திருக்கிறது. செய்யுள்களின் இலக்கிய நயத்தைப் பாராட்டும் திறனோடு அவற்றின் இலக்கண விதிமுறைகளும் இவருக்கு அத்துப்படி. எனவே செய்யுள் இயற்றுவதும் கைவந்த கலை. நல்ல ரசனையும் சேர்ந்துகொண்டது. எல்லோருக்கும் இப்படி அமைவதில்லை. 
 
டாக்டர். உ.வே.சா.வின் வாழ்வின் திருப்புமுனை என்றால், அவர் சேலம் ராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்தத்தைச் சொல்லலாம்.

“சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம்?”

இந்தக் கேள்விதான் உ.வே.சா. அவர்களின் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. ஏனெனில் அச்சமயத்தில் இந்நூல்களை இவரது ஆசிரியர்கூடப் படித்ததில்லை. இதன்பொருட்டு இவர் எடுத்த முயற்சிகளாலேயே நமக்குச் சங்க நூல்களைப் பற்றியும் தமிழின் இலக்கியத் தொன்மை பற்றியும் இன்றைய புரிதலில் ஒருவித மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பது தனி வரலாறு. இவ்வளவு பெரிய ஆராய்ச்சியைச் செய்து ஒரு துறையின் நிலையையே மேம்படுத்தியிருக்கும் தமிழ்த் தாத்தா ஆங்கிலம் கற்கவில்லை. வடமொழியும் கற்கவில்லை! அன்றைய ஆங்கிலேய அரசாங்கம் சமஸ்கிருதத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கே அளித்து வந்த ‘மகாமகோபாத்யாய‘ என்கிற உயரிய பட்டத்தைத் தமிழ் மட்டுமே கற்றிருந்த இவர் பெற்றமை தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
 
திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், தனி ஆசிரியரிடமும் பயின்ற இவர் பின்னர் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனதே இவரது திறமையும் பெருமையும் சொல்லும். ஆசிரியர் பணியில் கிடைத்த வருமானத்தையும் (மாதம் 50 ரூபாய்) தமிழார்வம் கொண்ட புரவலர்கள் தந்த பணத்தையும் கொண்டே தாம் கண்டெடுத்து ஆராய்ந்த பல தமிழ் நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். 
 
பல சாதனைகளைச் செய்தவர். இத்தகையவர் இன்னும் சில ஆண்டுகளாவது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் அப்போது இருந்திருந்தால் சுவடிகளைத் தேடி இவரது அலைச்சல் வெகுவாகக் குறைந்திருக்கும். அதேபோல், இன்றைய மருத்துவ வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் அப்போது இருந்திருந்தால் அவரது ஆரோக்கியம் இன்னும் நல்ல முறையில் இருந்திருக்கக்கூடும். என்ன செய்வது?
 
இவரது மாணவர்களில் ஒருவரும், அப்போதைய மாகாண அரசின் அமைச்சருமான சுப்பராயலு என்பவர் இவரிடம் வந்து “இன்றைய நிலையில் ஹிந்தி படித்தால் மாணவர்களுக்கு நல்லது. இதை நீங்கள் சொன்னால் பலரும் ஏற்றுக்கொள்வார்கள்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு நம் தாத்தா அவர்கள், “ஹிந்தி படிப்பது நல்லதுதான். அனால் அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது“ என்று சொல்லியிருக்கிறார். இவரே உண்மையான திராவிடர். தமிழர்.
இறுதி மூச்சு வரை தமிழ் தமிழ் என்றே வாழ்ந்திருக்கிறார். 

ஓலைச்சுவடியையோ எழுத்தாணியையோ நான் இதுவரை பார்த்ததில்லை. சுவடிகள் எழுதும் முறை பற்றி இந்நூலில் தமிழ்த் தாத்தா சொல்லியிருக்கிறார். 

இணையத்தில் இந்தப் புத்தகத்தை என்ற முகவரியில் படிக்கலாம்.

- R. விஜய் சங்கர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com