
சங்கத் தமிழை சாமானியரிடையே கொண்டு செல்வதற்கான பணியை தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கவாதிகள் மேற்கொண்டனர். அதனடிப்படையில் பாவாணர் அச்சகம் இயங்கிவந்தது. இந்தப் பதிப்பகத்தை கடந்த 1998- ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்மண் பதிப்பகமாக்கி, பல அரிய புத்தகங்களை வெளியிட்டார் இளவழகனார்.
பாவாணரின் 30 நூல்கள் அடங்கிய மொத்தத் தொகுப்பே தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் நூலாக வெளியிடப்பட்டது. 25 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இரண்டாயிரம் தலைப்புகளில் சங்க இலக்கியம் முதல் தற்கால தமிழ் இலக்கியம் வரையிலான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சங்க இலக்கியக் களஞ்சியம் 20 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப்பகத்தின் தனிச்சிறப்பாக, 45,000 பக்கங்களில் அண்ணாவின் 123 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு வெளியீடு கடந்த 2019-இல் ஆரம்பித்து இரு பிரிவாக வெளியிடப்பட்டன.
தமிழ் நூல்கள் என்றாலே அது தமிழ்மண் பதிப்பக வெளியீடாக இருக்க வேண்டும் எனக் கூறும் வகையில், தி.வே.கோபாலையரின் இலக்கணப் பேரகராதி 17 தொகுதிகளாக கடந்த 2007- ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதனையடுத்து இளங்குமரனாரின் 1,300-க்கும் மேலான படைப்புகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளன. பல அரிய தமிழ் இலக்கியவாதிகளின் படைப்புகளும் தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மண் பதிப்பகம் தற்போது அறிவியல், நுட்பவியல், பொதுவியல் எனும் தலைப்பில் இலக்கண அகராதியை வெளியிட்டுள்ளது. தொல்காப்பியம் தொடங்கி இதுவரை 42 தொகுப்பு நூல்கள் வெளியிட்டிருப்பது பதிப்பகத்தின் தனிச்சிறப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.