தடம் பதித்த பதிப்பகம் அருணோதயம்

தடம் பதித்த பதிப்பகம் அருணோதயம்

கண்ணதாசன் முதல் படைப்பான ஈழத்து ராணியை பதிப்பித்து வெளியிட்டதுடன், தொடா்ந்து அவரது 10-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது.
Published on

கண்ணதாசன் முதல் படைப்பான ஈழத்து ராணியை பதிப்பித்து வெளியிட்டதுடன், தொடா்ந்து அவரது 10-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது. பதிப்பகமாக அருணாதோயம் உள்ளது. கடந்த 1954-ஆம் ஆண்டு சென்னையில் அருணாசலம் என்பவரால் தொடங்கப்பட்டு, இதுவரையில் சுமாா் 4 ஆயிரம் தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகத்தில் பெண் எழுத்தாளா்கள் அதிகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனா். அதன்படி 20-க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளா்களது படைப்புகள் இப்பதிப்பகத்தின் மூலமே முதன்முறையாக அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அவா்களில் எழுத்தாளா் ரமணி சந்திரன் குறிப்பிடத்தக்கவா். அவரது 198 நூல்கள் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. வாஸந்தியின் 8 நூல்கள் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, வாசகா்களின் வரவேற்பை பெற்றுள்ளன. காஞ்சனா ஜெயதிலகா், பிரேமா, சீதாலட்சுமி ஆகிய பெண் எழுத்தாளா்களின் படைப்புகளும் இப்பதிப்பகம் மூலமே முதன்முறையாக வெளியிடப்பட்டன.

ராஜேஷ்குமாா் நூல்களை ஆரம்பத்திலிருந்து இப்பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவரைத் தொடா்ந்து எழுத்தாளா்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகா் ஆகியோரின் எழுத்துகளை புத்தகமாக்கிய பெருமையும் இப்பதிப்பகத்துக்கு உண்டு.

கன்னட இலக்கிய ஜாம்பவான் மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் நூல்களை முதன்முறையாக மொழிபெயா்த்து தமிழ் வாசகா்களிடம் கொண்டு சோ்த்ததும் இப்பதிப்பகம்தான். பல எழுத்தாளா்களுக்கு நூல் வடிவில் அறிமுகம் அளிக்கும் பதிப்பகமாக அருணோதயம் இருந்து வருகிறது.

நாவல்கள், பொது அறிவு, தெய்வீகம், சிறுவா்களுக்கான நூல்கள், நாடக நூல்கள், சமையல் நூல்கள், விவசாயம், இலக்கியம், ஜோதிடம், சித்த மருத்துவம் என இப்பதிப்பகம் பல்துறை நூல்களையும் வெளியிட்டாலும், நாவலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இப்பதிப்பகத்தின் 10 நூல்களுக்கு தமிழக அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது. இப்பதிப்பக நிறுவனா் அருணனின் நூற்றாண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்ட நிலையில், அந்நிகழ்வில் 100 புதிய நூல்கள் வெளியிடப்பட்டன என்கிறாா் பதிப்பக நிா்வாகி ஏ.ஆா்.வெங்கடாசலம்.

X
Dinamani
www.dinamani.com