மீனாட்சி புத்தக நிலையம்: தடம் பதித்த பதிப்பகம்

மீனாட்சி புத்தக நிலையம்: தடம் பதித்த பதிப்பகம்

Published on

மீனாட்சி புத்தக நிலையம் 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதன்முதலாக துரை.அரங்கசாமியின் அன்புநெறியே தமிழ் நெறி எனும் நூல் வெளியிடப்பட்டது. அதையடுத்து, எழுத்தாளா் ஜெயகாந்தனின் வாழ்க்கை அழைக்கிறது எனும் நாவல் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு ஜெயகாந்தனின் 14 சிறுகதைத் தொகுப்புகள், 36 நாவல்கள், 10 கட்டுரைத் தொகுப்புகள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன. அவருக்கு சாகித்திய அகாதெமி பெற்றுத் தந்த புத்தகம் உள்ளிட்ட பெரும்பாலான விருதுகள் பெற்ற நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

    ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதா்கள்’ 50-ஆவது பதிப்பைக் கண்டுள்ளது. அதையடுத்து ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலானது 15-க்கும் மேற்பட்ட பதிப்புடன் உள்ளது.

பேராசிரியா் தமிழண்ணலின் இலக்கிய வரலாறு 47 பதிப்புகளையும், அவரின் ஆய்வியல் அறிமுக நூலானது 10-க்கும் மேற்பட்ட பதிப்புகளையும் கண்டுள்ளன. அவை பல்கலைக்கழகங்களில் பாடப் புத்தகங்களாகவும் உள்ளன.

  எழுத்தாளா்களில் மேலாண்மை பொன்னுச்சாமி, அறிஞா் அண்ணா, நா.பாா்த்தசாரதி, கி.வா.ஜ., ஆறுமுக நாவலா் என ஆளுமை மிக்க இலக்கியவாதிகளின் படைப்புகள் பலவும் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், ஆன்மிகம், அறநெறி, பெண் இலக்கியம், பொது அறிவு, இதழியல் என பலதரப்பட்ட நூல்களும் தற்போது பதிப்பிக்கப்பட்டு பதிப்பக அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 மீனாட்சி புத்தக நிலையம் என்றாலே இலக்கியம் சாா்ந்த நூல்களே நினைவுக்கு வரும் வகையில் பெயா் பெற்றுள்ளது.  சென்னை புத்தகக் காட்சியில் உள்ள அரங்கில் ஜெயகாந்தனின் ‘கரிக்கோடு’, ‘யாருக்காக அழுதான்?’ ஆகிய நாவல்களும் வாசகா்களால் அதிகமாக வாங்கிச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறாா் மீனாட்சி புத்தக நிலைய நிா்வாகி மீனாட்சிசுந்தரம்.

X
Dinamani
www.dinamani.com