பதிப்பகங்கள் : அல்லயன்ஸ்
சென்னையில் கடந்த 1901- ஆம் ஆண்டில் அல்லயன்ஸ் புத்தக நிறுவனமானது வி.குப்புஸ்வாமி ஐயரால் நிறுவப்பட்டது. தேச பக்தி நூல்களை மாணவ, மாணவியா் படிக்கும் வகையில் ஆரம்பத்தில் சிறிதாக வெளியிட்ட அல்லயன்ஸ் நிறுவனத்தின் சேவையைப் பாா்த்த மூதறிஞா் ராஜாஜி, அவரது படைப்புகளை வெளியிடும் உரிமையை அல்லயன்ஸுக்கு வழங்கினாா். அதன்படி, கடந்த 1930- ஆம் ஆண்டில் அவரது நூல்களை அல்லயன்ஸ் நிறுவனமே வெளியிட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அனுமதியுடன் அவரது 2 நூல்களை அல்லயன்ஸ் வெளியிட்ட நிலையில், அதை ஆங்கிலேய அரசு தடை செய்தது. ஆனால், சிங்கப்பூா், மலேசியா நாடுகளில் மக்களிடையே விநியோகிக்கப்பட்டது. அதன்படி, அந்நூல்கள் மூலம் ஏராளமானோா் நேதாஜி படையில் சோ்ந்தனா்.
தேச ஒற்றுமையை வளா்க்கும் வகையில் வங்க மொழியில் இருந்து தமிழில் பங்கிம் சந்திர சட்டா்ஜி, தாகூா் ஆகியோரது நூல்களை அல்லயன்ஸ் மொழிபெயா்த்து வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்முதலாக சிறுகதைத் தொகுப்புகளைத் தொடா்ச்சியாக இந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகத்தில் த.நா.குமாரசாமி, கி.வா.ஜ., தெ.பொ.மீ., பாபநாசம் சிவம், உ.வே.சா. போன்ற ஜாம்பவான்களின் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பத்திரிகையாளா் சோவின் அனைத்து நூல்களும் இந்தப் பதிப்பகத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அண்மையில் பாரதியின் படைப்புகளை சீனி.விசுவநாதன் தொகுத்தளிக்க காலவரிசையில் 23 தொகுதிகளாக பிரதமா் நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டது. அது தமிழகம் தாண்டி தேசிய அளவில் இலக்கியவாதிகள், வாசகா்கள், விமா்சகா்கள் என அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈா்த்தது குறிப்பிடத்தக்கது. அத்தொகுப்பு முழுதும் ரூ.24,500 என விற்கப்பட்டு வருகிறது.
தற்போது 125 -ஆம் ஆண்டை நெருங்கும் நிலையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்தப் பதிப்பகத்தை தொடங்கிய குப்புஸ்வாமி ஐயரின் பேரனும் கே.வி.எஸ். மணியனின் புதல்வருமான ஸ்ரீநிவாஸன், பதிப்பகத்தை தற்போது நடத்தி வருகிறாா்.

