வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான் !
1323ஆம் ஆண்டு சங்கராந்தி தினம்:
” கோமளீ! கோமளவல்லீ!”
…………………..
”காதுல விழரதா பாரு! மங்கை, அடீ மங்கா!”
“ஏண்டீ கத்தற காலம்பர? சங்கராந்தியும் அதுவுமா ஒரு பாசுரம் ஒழுங்காச்சொல்ல விடாம..”
“உங்களுக்கென்ன, கண்ண மூடிண்டு பாசுரஞ்சொல்றேனு என்னத்தையோ முணுமுணுக்ககறேள்! எனக்குன்னா ஆத்து ஆத்துப்போறது! உள்ள கண்ணமுது வெச்சிருக்கேன் கும்மட்டில. இந்தக்குட்டிக்கு தலய்ல எண்ணைய வெச்சுவிடுவோம்னா வந்தாத்தானே! எங்கடீ போய்த்தொலஞ்ச?”
”வந்துட்டேம்மா! இஞ்ச உப்பிலியோட வெளையாடிண்டு இருந்தென்மா!”
“அவன் எங்கடீ காலம்பரயே வந்தான் இங்க? அவாத்துல சங்கராந்தி இல்லியோ இன்னிக்கி?”
“நாந்தாண்டி கோதய இஞ்ச சாப்பிட வரச்சொல்லியிருக்கேன், அதான் உப்பில்லி காலம்பரயே வந்துட்டான்!”
நன்னாச்சொன்னேள்! என்னாண்ட ஒரு வார்த்த சொல்லப்டாதா? அக்காளுக்கும் தம்பிக்கும் அதென்ன அப்படி ஒட்டோ?
“போடீ! சும்மா இரு! அந்தச்சண்டாளன் மாலிக் காபூர் நாசம் பண்றச்செ இந்த மனுஷன் நடுவுல் போய் மாட்டுவாரோ? அக்கா விதந்துவானாலும் தனியாவே இருக்கறப்ப நாளு கெழமைன்னா நாம்தானேடி சீராட்டணும்! ஒண்ணு நெனவுல வெச்சுக்கோ! நம்ம கல்யாணத்த நடத்தி வெச்சதே அத்திம்பேர்தானேடி!”
“தெரியும்னா, அதுக்கு சொல்லலை! கூட ஒரு கைப்பிடி அரிசி வெக்கணுமோன்னோ!”
“ அதென்ன பெரிய காரியமா?”
“நாஞ்சொல்றேனு தப்பா நெனக்காதேயுங்கோ! இந்த உப்பிலி….”
“போடி! குழந்த வந்துட்டா பாரு! எண்ணை வெச்சு விடு. குளிக்கட்டும்!”
”கோமளிக்குட்டி! வாடி அலங்கார முண்டைச்செல்லம்! மேலத்தெரு தாசி மாதிரி கன்னம் என்ன பள பளப்பான்னா இதுக்கு! எப்பிடிறீ இஞ்ச வந்து பொறந்தே?”
“போறுண்டி! காலங்காத்தால குழந்தயக்கொஞ்சற அழகு!
“என்னக்கொறச்சலாம்! மேலத்தெருலேர்ந்து சர்வ அலங்காரமா அவோ வந்தா, அதான் அந்த தாசி, உங்க எல்லொருக்கும்தான் கண்ணு எண்ணைல போட்ட பட்சணமா பிதுங்கறதே! சொன்னா மட்டும் ரோசம் வருதே உங்களுக்கு! போன ஏகாதசிக்கி அவ கோவில்ல வந்தபோது பாட்ராச்சரியாரே வாயதொறந்து தொறந்து மூடிண்டிருந்தாரே, நாந்தான் பாத்தேனே!!”
“அசமஞ்சம் போறுண்டி!” சீக்கிரமா திருக்கண்ணமுது ஆயிடுத்தானு பாத்து, நைவேத்யத்துக்குகொண்டு வா!”
”கையினார் சுரிசங்கனலாழியர்! நீள்வரைபோல் மெய்யனார்………”
”கொழந்தயக்கூப்பிடு! முதல்லா அதுக்கு ஒரு கிண்ணில குடு, ரொம்ப பிடிக்கும்! வாடா உப்பிலி! இந்தா நீயும் சாப்டு! அம்மா எங்கேடா?”
”கோவிலுக்குப்போய்ட்டு வரேன்னா மாமா! வாடி கோமளி, வெளையாடலாம்!”
”ஏன்னா கொஞ்சம் சொல்லப்டாதா? கோமளிக்கு ஆறு வயசாய்டுத்து! இன்னும் உப்பிலியோட வெளையாடிண்டு… நன்னாவா இருக்கு?”
“என்னடி சொல்ற? அது கொழந்தைடீ!”
” ஆறு வயசுக்கு என்ன கொழந்தை? எங்க அப்பா எனக்கு அஞ்சானதுமே தளிப்பண்ற உள்ள விட்டு வெளியே வரப்டாதுன்னு கட்டம் போட்டா தெரியுமொன்னோ?”
”யாரு உங்கப்பாதானே! நல்ல மனுஷன்!”
”ஏன் எங்கப்பாக்கு என்ன? என்ன சிரிப்பு வேண்டிக்கெடக்கு?”
“ஒண்ணுமில்ல! அவர் திருப்பாவை சொல்றத நெனச்சுப்பார்த்தேன்!”
“கணீர்னு வெங்கலக்குரல்ல சொல்லுவாரே, அதுக்கு என்னவாம்?”
“அதெல்லாம் சரிதான் குரலுக்கென்ன, அதான் எட்டூருக்கு கேக்குமே?. மேல் தெருவுல உங்கப்பா கொரல் கேட்டாலே எங்கப்பா சொல்லுவர்,” ஆரமிச்சுட்டான் கோதண்டம்! இனிமே கண்ணமுது ஏப்பத்தோட தான் நிக்கும்”ம்பார்!”
”உங்கப்பாதானே? கிழத்துக்கு நிஷ்டூரம் ஜாஸ்தி!”
”சும்மா ஏதானும் சொல்லாத! நீயே சொல்லிருக்க! பாதி பாசுரஞ்சொல்லும்போதே” அடீ! கண்ணமுது ஆயிடுத்தா பாரு பாருன்னு நாலு தரம் உங்கம்மாவ வெரட்டுவார். ஆயிடுத்துன்னா, “ இன்னும் பாசுரம் பாக்கி சொல்ல இருக்குடீ, இப்பவே இஞ்ச கொண்டு வந்து வெச்சுராத. நைவேதய்ம் பண்றத்துக்குள்ள ஆறி அவலாப்பொய்டும்”னு அது மேலயே குறி!!
“போறும் சங்கராந்தியும் அதுவுமா எங்கப்பாவ கேலி பண்ணிண்டு! இதப்பாருங்கோ, நாஞ்சொல்றத கேக்கறேளா?”
”அதுக்குத்தானேடி என்ன பகவான் படைச்சே இருக்கான்! சொல்லு சொல்லு!”
“ கோமளி இப்படி உப்பிலியோட வெளையாடரது நன்னாவா இருக்கு? நாலு பேர் ஏதானும் சொல்ல மாட்டாளா? உங்கக்கா புள்ளதான்னாலும் நாம பொண்ணுனா பெத்து வெச்சிருக்கோம்!”
”போடி பைத்யம்! கோமளி உப்பிலிக்குத்தானு அத்திம்பேர்கிட்டயே வாக்கு குடுத்தாச்சு!”
அது சரின்னா, ஆனா ஆகணுமே! உப்பிலி நல்ல புள்ளதான். அழகா வாட்ட சாட்டமா இருக்கான். நிச்சயம் பண்ணனுமே, ஆச்சு உப்பிலிக்கும் பன்னண்டு வயசு!”
”இதோ தை பொறந்தாச்சு! ராமநவமி அன்னிக்கி நிச்சயம் பண்ணிடுங்கோன்னு தேசிகர் ஸ்வாமியே என்னாண்ட சொன்னாரே!”
“அவாளையே கேட்டேளா?
”பின்ன? அன்னிக்கி பாத பூஜைக்கி போனேனோனொ, அப்ப ஒரு சந்தர்ப்பம் கெடச்சுது! கேட்டுட்டேன்! பேஷாப்பண்ணும்! நிச்சயம் பண்ணிடும்! கல்யாணம் ரங்கன் பாத்துப்பன்”ன்னார்”
”ஆனாலும்…”
”சும்மா இழுக்காதடீ! அக்கா வந்தா கேட்டுடப்போறது! மனசு கஷ்டப்படுவோ! இன்னிக்கி போகட்டும்! கொழந்தைகிட்ட நயமாச்சொல்லு, கேட்கும்!”
“ஏண்டீ! என்னக்கல்யாணம் பண்ணிக்கறயா?”
“ஒன்னதாண்டா பண்ணிப்பேன்! அப்பறம் ஒரே ஆத்துல நாம சேந்து வெளையாடிண்டே இருக்கலாம், இல்ல?”
”சமத்துடீ கோமளி நீ!”
1323 ஸ்ரீராமநவமி தினம்
”என்ன ஓய்! ராமநவமியும் அதுவுமா பலே சாப்பாடா?”
“என்ன சத்தாய்க்கிறீரா? உம்ம பக்கத்துல உக்காந்துண்டுதானே சாப்டேன்!”
”அதில்லைங்காணும்! மனசார சாப்டீரான்னேன்?”
”அதுக்கென்ன, பேஷா! நாரணனுக்கு நல்ல மனசு ஸ்வாமின்! அத்திம்பேர் போய்ட்டாருன்னு சும்மா விட்டுடாத அக்காவையும் மருமானையும் பாத்துக்கறதோட இல்லாம பேசினபடி நிச்சயமும் பண்ணிப்டானே!”
“சும்மாவா, மாலிக் காபூர் பட வந்தப்போ கோவில் கொடி மரத்தக்காப்பாத்த உசிர விட்டாங்காணும் உப்பிலியோடா தகப்பன். தேசிகர் ஸ்வாமி கையிலேர்ந்து தேர்த்தம் வாங்கிண்டு செத்துப்போனான். புண்ணியம் சும்மா போகுமாங்காணும்!”
”தேசிகர் ஸ்வமியேதான் இந்த நிச்சயதார்த்த முஹூர்த்தம் வெச்சுக்கொடுத்தாராம், தெரியுமோ?”
”கொடுத்து வெச்சிருக்கான் உப்பிலி! அந்தக்கோமளிதான் என்ன அழகுங்கற, துரு துருன்னு!”
”இப்பவே உப்பிலிய எங்காத்துக்கார்ங்கறது அந்தக்குட்டி! அந்த வெத்தலக்கட்ட இஞ்ச தள்ளுமேன்!”
“யார்ரா அது, ஓடி வரது?”
“மாமா மாமா! கோவில்ல கூட்டுண்டு வரச்சொன்னா! எல்லாரையும்!”
இர்ரா, ஏன் ஓடி வர? யாரு கூட்டுண்டு வரச்சொன்னா?”
”சுதர்சன பட்டர் மாமாதான் கூட்டுண்டு வரச்சொன்னா! தேசிகர் ஸ்வாமியும் லோகாச்சாருங்கூட இருக்கா! உடனே வாங்கோ! நா இன்னும் ஏழெட்டு தெரு போய் கூப்டணும்!”
ஏன்னடா இது? மத்யான வேளல? சரி வா போவோம்!”
“என்னவாம் ஓய் அவசரம் இப்ப?”
“டெல்லி சுல்தானோட படை வந்துடுத்தாம்!”
”அய்யோ! எங்க எப்போ?”
”இதோ இங்க காவேரிக்கு அப்பால இறங்கியிருக்காம்1 இன்னும் ரெண்டு நாழில உள்ள புகுந்துடணும்னு திட்டமாம்!”
“என்ன ஓய்! நாசமாப்போச்சு போலருக்கே!” ஏங்காணும் இப்படி நம்ம மதத்தும்பேர்ல இவ்ளோ த்வேஷமா வெச்சுண்டு அலையிரான்கள்? கோவில் கோவிலான்னா கொள்ளையடிச்சுண்டு போறா!”
” சொத்து நகை! அமைதியான வாழ்க்கை! இதெல்லாம் அவாளுக்குப்பொறுக்கல!”
கோவில் அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருந்தது. ஆட்கள் மதில் மேல் வில்லும் அம்பும் கட்டாரியும் பெரிய கொப்பரைகளில் சுடச்சுட எண்ணையுமாய் ஏற்றிக்கொண்டிருக்க இங்கே தேசிகர் ஸ்வாமியும், பிள்ளை லோகாச்சாரும் சுதர்சன பட்டரும் ஆலோசித்துக்கொண்டிருந்தனர்.
”ஸ்வாமி! நீங்க இங்க இருக்கேள்ங்கறேளே! கண்டந்துண்டமா வெட்டிப்பிடுவாளே! வந்துடுங்களேன் எங்களோட?”
வேண்டாம் லோகாச்சார்! நா இங்க மூலவரப்பாத்துக்கணும்னு உத்தரவாயிருக்கு!நமக்கு அழகிய மணவாளரும் தாயாரும் அதி முக்யம்! நீங்க கெளம்புங்கோ! சுதர்சன பட்டர் ! நீங்களுந்தான்! நல்ல திடகாத்திராளா இருவது பேரக்கூட்டிக்கோங்கோ!”
”நாப்பதுக்கு மேல தயாரா இருக்கா ஸ்வாமி!”
கையில் சின்ன மூட்டையோடு இன்னொரு கையில் உப்பிலியைப்பிடித்தபடி நாரணன் இன்னும் சிலரோடு தயாராய் வந்தார்.
“என்ன நாரணன் இது? நீர் வாண்டாம்! உம்மால பயணம் இயலாது!”
”இல்ல ஆச்சார்யார்! என்னால இந்த கோரத்தப்பாக்க முடியாது! பெண்டுகள்ளாம் நாசமாரது என்னை கொன்னே போட்டுடும்!”
”இல்ல, இல்ல! அவாளுக்கெல்லாம் பத்ரமா இருக்கா ஏற்பாடெல்லாம் ஆகரது. நீரும் போய் சேர்ந்துக்கும்! ஜாக்கிரதையா இரும்!”
” வேண்டாம்! நானும் வரேன்! வாடா உப்பிலி!
”குழந்த எதுக்கு?”
”வரட்டும். ஸ்வாமியைத்தூக்க, சின்ன சின்ன வேலைக்கு ஹேதுவா இருப்பன்!”
”ஆமா மாமா! நானும்வரேன்!”
”பாவண்டா! குழந்தைக்கு இன்னிதான் நிச்சயதார்த்தம் ஆச்சு!”
”புறப்படுங்கோ புறப்படுங்கோ! குதிரச்சத்தம் கேக்கறது!”
அடுத்த சில மாதங்களில் ஸ்ரீரங்கத்தில் நடந்த சண்டையும் சச்சரவும், கொலைகளும், காயங்களும், எழுந்த ஓலங்களும், விழுந்த பிணங்களும் ஒரு ஊருக்காகவா இல்லை, ஒரு ஆழ்ந்த நம்பிக்கைக்காகவா?
பதிமூன்றாயிரம் பேர் கொல்லப்பட்டு, பல ஆயிரம் பெண்டிர் நாசப்படுத்தப்பட்டு, உணர்வுகளும் உடல் கழிவுகளும் ஒன்றுதான் என்ற வகை மனித மிருகங்களின் வெற்றிக்கூக்குரல்.
“வா இன்பம் தா” என அலைக்கழிக்கப்பட்ட தாசிகளும் திட்டமிட்டு அரக்கர்களுடன் கூடி, நோய் கொடுத்து மெல்ல மெல்ல அந்த வெறிக்கூட்டத்தின் திமிரைக்குலைக்க, திருடிய சொத்துக்களுடன் பின் வாங்கிச்சென்ற உலுக் கான், வெற்றியின் பரிசுகளை தன் தந்தை கியாசுதீன் மன்னரிடம் ஒப்படைத்து முதுகில் கோடு பெற்ற கதையை இன்னொரு சமயம் பார்ப்போம்.
சிரிப்பும் குறும்புமாய் மையலான கண்களுடனும் ஓரப்புன்னகையுடனும் மிளிர்ந்த உலோக அழகிய மணவாளருடன் சடுதியில் ஊர்வலமாகப்புறப்பட்ட பிள்ளை லோகாச்சாரும் சுதர்சன பட்டரும் பக்தர் குழாமும் பதுங்கிபதுங்கி ராஜபாட்டையை ஒதுக்கி ஒற்றையடிகளிலும் மேடு பள்ளங்களிலும் சென்றனர். புதுக்கோட்டை தாண்டி, திருக்கோஷ்டியூர் வழியே திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோவிலைச்சேர்ந்தனர்.
பன்னிரெண்டு வயது உப்பிலிக்கு பயணம் ரசமாக இருந்தது. பயம் தெரியாத வயசு. பக்தர் குழாம் அவனை மாப்பிள்ளை என்றெ விளித்து தங்கள் உடலிலும் மனதிலும் ஊடுருவியிருந்த கிலியை அடக்க முற்பட்டுத்தோற்ற தினங்கள். ஓடியாடி வேலை செய்து சுதர்சன பட்டரின் சபாஷைப்பெற்றுக்கொண்டிருந்தான். விளையாடத்தான் கோமளி இல்லை.
“மாமா! கோமளி, அம்மா, மாமியெல்லாம் பத்திரமா இருப்பாளா?”
தெரியலைடா ! ரங்கன் பாத்துப்பன்!
நாரணன் பாரத்தைச்சுலபமாக இறக்கிவைத்தார்.
------------------------------------------------------------
வருஷம் 1342
”உப்பிலி! நேக்கு முடியலைடா!”
“ஒண்ணும் ஆகாது மாமா! ஆச்சு இதோ எடம் வந்துடுத்தாம். இப்பத்தான் சொல்லிட்டுப்போறான் நம்ம ஆழ்வான்”
”இந்தக்காட்லயே பதினஞ்சு இருவது வருஷம் ஆயிருக்குமேடா! நன்னாத்தானே இருக்கோம், இப்ப ஏன் இன்னும் பயணப்படணும்?”
“அங்கயும் ஆபத்தாம் மாமா! அதான் ஸ்வாமியோட கிளம்பிட்டோம்!”
”என்ன இடம்டா வந்திருக்கோம்?”
”மாமா! திருப்பதி போயிண்டுருக்கோம்! பெருமாள் ஸ்தலம். உங்களுக்கு நன்னா ஆய்டும்!”
”உப்பிலி! வேடிக்கை பண்ணாதடா! நாம ஸ்ரீரங்கத்த விட்டுக்கிளம்பி இருவது வருஷத்துக்கு மேல ஆயிடுத்து. பிள்ளை லோகாச்சார் போயிட்டார். சுதர்சன பட்டரும் பரமபதம் சேர்ந்துட்டார். நாம இன்னும் எத்தன நாள் இந்த ரங்கனோட ப்ரயாணம் பண்ணனும்னு விதிச்சிருக்கோ தெரியலையே!
”பாதுஷா படையெல்லாம் வடக்கே திரும்பிப்ப்போயிருப்பா! நாமா சுருக்க ஸ்ரீரங்கத்துக்குப்போய்டலாம்னு தோணறது!”
”இல்லேடா உப்பிலி! எனக்கு நா இன்னொருக்கா ஸ்ரீரங்கத்தப்பார்ப்பேன்னு தோணலைடா! உங்க அம்மா மாமி கோமளில்லாம் என்ன ஆனாளோ?”
“ஒண்ணும் ஆகியிருக்காது மாமா! எல்லோரையும் நம்ம தேசிகர் ஸ்வாமி பாத்துப்பர். ரங்கன் நம்மைக்கைவிட மாட்டார் மாமா!”
“ஒனக்கு இருக்கற நம்பிக்கை எனக்கில்லைடா! ஒரு வேளை நீ ஊருக்குப்போக நேர்ந்தா எல்லார்ட்டயும் சொல்லிடுறா!”
---------------------------------------------------------------------
வருஷம் 1371
“உப்பிலி ஐய்யா! வாங்க நீங்க உட்காருங்க! எத்தனதான் நீங்களே செய்வீங்க!”
“சின்னப்பையனா வந்தேன்! சந்தோஷம்மாச்செஞ்சுண்டு இருக்கேன்! உடம்பு முடியறமட்டும் செய்யறேனே!”
இல்ல உப்பிலி அய்யா! சேதி வந்துடுத்து! விஜயநகர நாயக்காள்ளாம் அவாள வெரட்டி அடிச்சிப்டாளாம். ராஜா கோபண்ண உடையார் நாளன்னிக்கி வர்ராராம்!”
”ஆஹா, அப்படியா? நல்லது நல்லது! ரங்கனுக்குத்தெரியும் எப்ப ஸ்ரீரங்கம் திரும்பணும்னு!”
”அது சரி! ஆமா உங்களுக்கு என்ன வயசு இப்போ?”
”நா ஸ்ரீரங்கத்துலேர்ந்து கிளம்பும்போது எனக்கு பன்னண்டு வயசுன்ன இப்ப எவ்வளவு, நீயே கணக்கு போட்டுக்கோ!”
”இத்தன வருஷமும் ரங்கனோடவே இருந்தேளா?”
”ஆமா! மாமாவோட வந்தேன்!”
”எத்தன நாள் ஆச்சு?”
”இஞ்சவே முப்பது வருஷம் ஆய்டுத்துங்கறா! முன்னால சத்தியமங்கல காட்ல கிட்டத்தட்ட இருவது வருஷம் இருக்கும்! அங்கதான் மாமா போனார்!”
”ஊர்ல குடும்பமெல்லாம் இருக்கா?”
”தெரியல தெரியல!”
கேவல். கண்ணில் நீர். தொண்டையில் அடைப்பு. மஞ்சளும் சந்தனமுமாய் ரோஜா மாலையுடன் கோமளியின் அருகாமை இன்னும் காய்ந்து போன சருகின் மணமாய் மனசுக்குள்.
“இருப்பா உப்பிலி மாமா! இருப்பா! நன்னா இருப்பா! உங்க பக்தி,ஸ்ரத்தைக்கு எல்லாம் மனசுப்படிதான் நடக்கும்”
அதெல்லாம் அப்புறம்! ரங்கனக்கொண்டபோய் தேசிகர் ஸ்வாமிட்ட சேக்கணும். அவனுக்கு ஸ்ரீரங்கம் கோவில்ல மறுபடி உற்சவம் பண்ணனும்!”
”என்ன ஓய்! பெரிய ஏப்பமா விடறீர்?”
”சாப்பாடு பலம்னா! அக்காரவடிசலே ரெண்டு கை நெறயச்சாப்டேன்!”
”என்ன கோவில்ல போஜனமா? எனக்குத்தெரியாதே!”
”ஒய்! கிட்டத்தட்ட எழுவது வருஷத்துக்கப்றம் அழகிய மணவாளர் மறுபடி வந்துட்டாருங்காணும்! இன்னிக்கு உற்சவரைப்பாக்கணுமே!”
”சும்மா இரும் ஓய்! அது எனக்குத்தெரியாதா? நாந்தான் கிட்ட இருந்து சேவிச்சேனே! ”ப்ரசாதம் கொடுத்தார் ஆச்சாரியாரே அவர் கையால! நீர் என்னடான்னா பெரிய போஜனம் பண்ணிப்டு வராப்லன்னா ஏப்பம் விடறீர்?”
“ஆமாம் ஸ்வாமின்! போஜனந்தான்! கல்யாண போஜனம்!”
”கல்யாண போஜனமா? இன்னிக்கு என்ன ஓய் முஹூர்த்தமே இல்ல, கல்யாணங்கறீர்?”
“அழகிய மணவாளர் கோவிலுக்கு வந்ததுதாம்யா முஹூர்த்தம்! தேசிகரே மாங்கல்யதாரணம் பண்ணிவெச்சார்னாபாத்துக்கும்!”
யாருக்கும்யா இன்னிக்கு கல்யாணம்! எனக்குத்தெரியாம எப்போ நிச்சயம் ஆச்சு?”
” நீரும் நானும் பொறக்கறதுக்கு முன்னாலயே நிச்சயமாச்சுய்யா!”
1371, மே மாதம் 13ஆம் தேதி கோடை வெப்பத்துக்கிடையிலும் லேசாகத்தூற்றல் போட்டுக்கொண்டிருந்த ஒரு முன் பகல் நேரத்தில் காட்டிலும் மேட்டிலும் நடை நடையாய் அலைந்து, உற்சவ அரங்கனைத்தொட்டுத்தொட்டுச்சேவை செய்த உப்பிலியும் மற்றும் காவேரிக்கரையில் 48 வருடங்கள் வெட்டவெளியைப்பார்த்துக்காத்துக்கிடந்த கோமளி என்னும் கோமளவல்லியலர்மங்கையும் கண்ட கனவு பலித்த கதை இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.