அவன் சரவணபவ ஹோட்டலை விட்டு வெளியே வரும்போதுதான் பார்த்தான். அதோ அந்த மூலை டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவது…நரசிம்மன் போலவே இருந்தது. பில் கொடுத்தாகிவிட்டாலும் சொந்த ஊர் ஞாபகம் இழுத்தது.
மலையன் குளம்!
சங்கரன்கோவிலுக்கு கிழக்கே நீண்டு போகுமே கழுகு மலை ரோடு, அதில் ரொம்ப தூரம்போன பிறகு, புளியங்குடி வரையெல்லாம் போகக்கூடாது, அதற்கு முன்பே தெற்குப்பக்கம் திரும்பினால் சில கிலோமீட்டர்களிலேயே வந்துவிடும் அழகான கிராமம், மலையன் குளம். நினைத்தவுடன் மனக்கண்ணில் தெரிவது படாகலிங்கஸ்வாமி கோவிலும் வண்டல் ஓடை அணைக்கட்டும்தான்.
வீரப்ப மிடில் ஸ்கூலில் படித்த, படிக்காத சாகச வருடங்கள்.
ஒன்பதாம் வகுப்பு வாத்யார் இசக்கிமுத்துவை பின்பக்கமாக குட்டையில் தள்ளிவிட்டு ஓடின முத்துவேலனைக்காட்டிக்கொடுத்ததற்காக மூன்று நாட்களுக்கு முப்பிடாத்திஅம்மன் கோவிலைச்சுற்றிக்கொண்டு போன பயந்த தினங்கள்.
“எங்கலே போய்டுவான் அந்தப்பய! மாட்டுவான்ல அப்ப பாரு டிராயரை உருவி திரிவெச்சு கொளுத்திப்பிடறேன்!”
தாளாளர் தெரு முனையில், கூம்பாக இருக்கும் கட்டிடத்தின் முனை ஒடிந்து கருங்கற்கள் தெரியுமே, அந்த சர்ச்சில் ஒரு ஞாயிற்றுக்கிழமை கேக் இலவசமாகத்தருகிறார்கள் என்றூ யாரோ சொல்ல, அந்த க்யூவில் நிற்கும்போது செவிட்டு சாமா பார்த்து வீட்டில் போட்டுக்கொடுத்துவிட, அப்பா துரத்தி துரத்தி அடித்த, அழுகையிலேயெ கரைந்த அந்த ஞாயிறு.
ரோசம்மாவின் பிள்ளைக்கு அங்கு நடந்த கல்யாணத்தில் கிடைத்த சேப்பு பலூன் கொத்து
சுகுணா அரவை மில்லில் அரிசி, மிளகாய்த்தூள் அரைக்கப்போகும்போது கூடவே சாமான் தூக்கிவரப்போனால் வரும்போது அம்மா வாங்கித்தரும் வெள்ளையாக சொர சொரவென்று நாக்கில் பரவும் க்ரீம் வைத்த பன் தரும் இனிமை.
“என்னலே நல்ல படிக்கியா? இல்லேன்னா நம்ம கடைக்குதான் பொட்ணம் கட்ட வரோணும் தெரியும்லா!”
பேண்ட் வாத்யமெல்லாம் வைத்து தாசில்தார் தயாநிதி வீட்டு கிருஷ்ணக்கா கல்யாணம். மூன்றூ நாள் அல்லோலகல்லோலப்பட்டது. ஊருக்கே சாப்பாடு அங்குதான். அவர் ஆளூம் கட்சியில் ஏதோ வட்டமோ ஒன்றீயமோ அதுக்கு செயலாளராக இருந்து சம்பாதித்தார் என்று அப்பா, பக்கத்து தெரு குருராஜ நாய்க்கர், கோவில் சாமிநாத சாஸ்திரி எல்லோரும் பேசிக்கொள்வார்கள். ஆனால் அவரை நேரில் பார்த்தால், .”ங்க, .ங்க” என்று பம்மி அசட்டு சிரிப்புடன் நகருவார்கள்.
பஞ்சாயத்து போர்டு எலக்ஷனுக்கு வாக்கு கேட்க வரும்போது எல்லார் வீட்டுக்கும் வெங்கடேச ரமணா ஸ்டோர்ஸ் சாமி படம் போட்ட மஞ்சள் பையில் ஒரு கிலோ அரிசி, பருப்பு அப்புறம் மஞ்சப்பொடி கொடுத்துக் கொண்டே போவார்கள் சிஷ்ய கோடிகள். திருமங்கலம் ஃபார்முலாவுக்கெல்லாம் தாத்தன் இந்த மலையன்குளம் ஃபார்முலா!
நாராயண ஸ்வாமி கோவில் இருக்குமே அதுக்கு நேரே எதிர் பக்கம் ஒரு முட்டுச்சந்து தமிழ் ”பா”னா மாதிரி நேராகத்திரும்பி திரும்பி ஒரு சின்ன வளைவில் முடியும். அந்தத்தெருவின் கடைசி வீட்டு பெண்ணை, இல்லை இல்லை, கொஞ்சம் வயதான பெண்மணியை, ஊர் மேஞ்சி என்பார்கள், ஊரில் யாரும், முக்கியமாக மற்ற பெண்கள் மதிக்க மாட்டார்கள். அவள் கோவிலுக்கு வரும்போது ”விலுக் விலுக்”கென்று கழுத்துக்கள் ஒடிக்கப்பட்டு திரும்பி, வாய்கள் கோணி அழகு காண்பிக்கும். அவள் கண்டுக்கவே மாட்டாள். கனக்க கனக்க பட்டுப்புடவை கட்டிக்கொண்டு எட்டு முழம் மல்லிப்பூவைத்தலையில் வைத்து கையில் வெள்ளிக்கூடையோடு பூஜைக்கு வருவாள். பார்க்கும் ஒவொருவரையும் சத்தமாக விஜாரிப்பாள்
”என்ன அன்னம்மாக்கா! வூட்ல தேவலையா? தொடையில சுளுக்குன்னு சொல்லிகிண்டிருந்தாரே”,
“மங்களாக்கா! உங்களுக்கு பின் பக்கம் கட்டின்னாரே, நான் கூட மஞ்சள் அரச்சு தடவச்சொன்னேனே, இப்பம் சொஸ்தமாயிட்டா”
”என்ன சேர்வையாரே! வர்ரீரா இன்னிக்கு, ஒரு ஆட்டம் போடலாம், புது சீட்டுகட்டு வாங்கி வெச்சிருக்கேன்!”
ஆண்கள் தெறித்து ஓட, பெண்கள் பழிப்பு காட்டுவார்கள்.
பதினொண்ணாம் வகுப்பும்போது ஊருக்கு தார் ரோடு வருது வருதுன்னு ஒரே பேச்சு. கடைசில வந்துது. பெரிய ரோடு இஞ்சின், அப்புறம் லாரி நெறய ஜல்லி, மண்ணு எல்லாம் தயாநிதி வீட்டு வாசலில் குவித்திருந்தார்கள். அந்த மூணு நாலு வாரம் இவன் கூட்டளிகள் விளையாட்டு அங்குதான். கடைசியில் தயாநிதி வீட்டுத்தெரு திருப்பம் வரைக்கும் போட்டுவிட்டு போயே போய் விட்டார்கள்.
தயாநிதியே அவர் தம்பி பேரில் காண்ட்ராக்ட் எடுத்து எதோ பாவ்லா பண்ணி விட்டு காசை ஒதுக்கிகொண்டு விட்டார் என்று பேச்சும் இருந்தது..
ஊரின் கீழ்க்கோடியில் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் ஸ்கூலினுள் லீவு நாளில் போக அனுமதிக்க மாட்டார்கள். அப்படியும் சுவரேறிக்குதித்து சல சல வென்று எப்போதும் காற்றடித்துக்கொண்டிருக்கும் அரச மரத்தின் அடிக்கிளையில் தாம்புக்கயிறு கட்டி ஆடின ஊஞ்சல். ஒரு முறை கயிறு அறுந்து விழுந்த காளியப்பன் செங்குத்தாக மண்டையில் அடிபட்ட பயங்கர தினம்.
“ஆட்டாதடா! இவ்ளோ வேகவேகமா வாணாண்டா!”
காளி கத்தக்கத்த, இவனும் நரசிம்மனும் ஆளுக்கொரு பக்கமாய் வீசி வீசி ஆட்டினார்கள். அந்த வயதில், இல்லை இல்லை, எந்த வயதிலுமே சாதாரணர்கள் புரிந்துகொள்ள முடியாத Friction Co-efficient, tear propagation, dihedral of the cutting edge, falling traversal displacement போன்ற விற்பன்னர்களின் வார்த்தைகளை மதிக்காமல் அந்த அரசமரக்கயிறு பட்டென்று அறுந்து காளியப்பன் தலை குப்புற விழுந்த அதிர்ச்சி தினமும், சொட்டு சொட்டாய்க்கழிந்த ஆஸ்பத்திரி இரவும் தூரத்திலிருந்து பார்த்த நரசிம்மனின் தம்பி எட்டப்பனாய்க்காட்டிக்கொடுத்த சாட்சியும், அப்பாவின் கோபத்தைச்சமாளிக்க முடியாத அம்மாவும் கூடச்சேர்ந்து இவனை சென்னைக்கு மாமா வீட்டுக்கு அனுப்பிவிட்டதும், அம்மாவின் திடீர் மரணத்தினால் அவளின் அருகாமையை சீக்கிரமே இழந்துவிட்ட இன்றளவு தீராச்சோகமும்………..
அந்த மறக்க முடியாத ஞாபகங்களை சுமந்து கொண்டு கடைசி டேபிளுக்குப் போய் நின்றான்.
தோசையில் மும்முரமாக இருந்த அவன் நிமிர்ந்து பார்க்க, இவன் நீ.. நீங்க ….என்று இழுக்க, அதற்குள் அவன் ”நீங்க தியாகரஜன் பிள்ளை ராஜகோபால் தானே?” என்று கேட்டுவிட, இவன் சந்தோஷமாக தலை ஆட்டினான்.
”உக்காருங்க, எவ்வளவு நாளாச்சு? என்ன சாப்பிடறீங்க?”
”இல்ல நான் இப்பம்தான் சாப்பிட்டு வாசலுக்கு போம் வழியில பார்த்தேன். தெரிஞ்ச முகம்மாயிட்டேன்னு, வந்தேன்”
”பரவால்ல. இன்னொரு காபி சாப்டலாம்! ந்தப்பா! இங்கன இன்னொரு காபி!”
”நீ இன்னும் ஊர்லதான இருக்க?”
”நமக்கு வேறெங்க போக்கிடம்”
”ரொம்ப சந்தோஷம்!. அப்பறம், ஊரு எப்பிடி இருக்கு?”
”ஊருக்கென்ன, நெறய மாறிடிச்சி”
”சொல்லு கேப்பம்! எனக்கு ஒண்ணும் மறக்கல தெரியுமா? அப்படியே பச்சுன்னு நெனப்புல வெளங்குது!”
”தயாநிதி போய்ட்டாரு ரண்டாம் வருஷம்!”
”எம் எல் ஏ ஆய்ட்டாரு இல்ல?”
”இல்ல, நின்னாப்ல, ஆனா தோத்துட்டாரு. கிருஷ்ணக்கா புருஷன் தான் இப்பம் அவரோட எல்லா நிலபுலங்கள பாத்துக்கிடறாப்பல. அவரும் வட்டச்செயலாளராய்ட்டாரே!”
அவன் சொல்லிக்கொண்டே போனான்.
முப்ப்பிடாத்தியம்மன் கோவிலுக்கு பெரிய கோபுரம் கட்டிட்டாங்களாம்.
சுகுணா அரவை மில் மூடியாச்சாம்.
பஞ்சாயத்து யூனியன் ஸ்கூல வாகைக்குளத்துக்கு மாத்திட்டாங்களாம்.
வசந்தா டீச்சரின் புருஷன் செத்துப்போய்ட்டானாம்.
அந்த ஊர் மேஞ்சி கிணற்றடியில் வழுக்கி விழுந்து இப்போ படுத்த படுக்கையாம். கவனிக்க ஒருத்தரும் இல்லியாம்.
சுவாமிநாத குருக்கள் தன் பையனோட மதுரைக்குப் போய்ட்டாராம்.
நெறய வீடுங்க இடிச்சி அடுக்கு மாடி குடியிருப்பாய்ட்டதாம்.
அக்ரஹாரத்துல முக்காவாசிப்பேர் துபாய்லேர்ந்து வந்த இஸ்லாமியருக்கு நெலத்த வித்துட்டு மெட்ராஸ் பக்கம் வந்துட்டாங்களாம்.
”அப்பா! அவ்ளோ மாறிட்டா! எனக்கு எதுவுமே மறக்கலை. எல்லாம் அப்படியே நெனப்புல நெறம்பி இருக்குப்பா. கேக்கேன்னு தப்பா எடுத்துக்காத, அந்தக்காளியப்பன்….?”
காளியப்பன் கடைசி வரைக்கும் பைத்தியமாவே திரிஞ்சானாம். போன மாசம்தான் வண்டல் ஓடை டேமில் விழுந்து பாடியே கிடைக்கலியாம்
கொஞ்சம் நிம்மதியாக இருந்தது இவனுக்கு.
”ஒன்ன பாத்ததுல ரொம்ப சந்தோஷம் நரசிம்மா! உன் தம்பி ஒர்த்தன் இருப்பானே, ராமசாமிதானே அவன் பேரு, எனக்கு மறக்கவேயில்ல, அவன் இப்போ எங்கே இருக்கான்?”
தோசையை முடித்து சாம்பாரை கிண்ணத்தோடு வாயில் கவிழ்த்த அவன் கொஞ்சம் நிதானமாக இவனைப்பார்த்தான். கிளாஸிலிருந்து தண்ணிரைக் குடித்தான். சின்ன ஏப்பம் விட்டு அழுக்கு கர்ச்சீப்பால் வாயைத்துடைத்துக் கொண்டு சொன்னான்.
”நாந்தான் ராமசாமி!. எங்கண்ணன் நரசிம்மன்தான் உன் க்ளாஸ்மெட்டு! விபத்துல ரெண்டு காலும் பொயிட்டு. இப்பா என்னோட ஊர்லதான் இருக்காப்ல!”
இவன் காபிக்கு நன்றி சொல்லிவிட்டு விடு விடுவென புறப்பட்டான்.
சென்னையில் வழக்கம்போல வெக்கை, கழுத்தருகில் கசகசவென வேர்த்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.