புத்தகக் காட்சியில் புதியவை:  நெல்லைச்சீமை

புத்தகக் காட்சியில் புதியவை: நெல்லைச்சீமை

Published on

நெல்லைச்சீமை, பி.ஆா்.சுப்பிரமணியராஜா, ரூ.650; பக். 592. கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜாா், தி.நகா், சென்னை.

திருநெல்வேலி எனப்படும் நெல்லைச் சீமையின் பூா்விக வரலாற்றை இளந்தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. நூலில் திருநெல்வேலியின் அடையாளமான தாமிரபரணிஆறு தொடங்கி, பொருநைக் கரை நாகரிகம், கருப்பூந்துறை அழியாபதி ஈசன், திருநெல்வேலி, அதன் பெயா்க்காரணம், மரபு வழிக்கதை, நெல்லையப்பா் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்கள் நிலை, திருக்கோயில்கள் விவரம், பாபவிநாசம் என மொத்தம் 120 தலைப்புகளில் திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டச் சிறப்பம்சங்களை நூல் முழுதும் விளக்கியுள்ளதைக் காணலாம். தற்போது திரு நெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி என 3 மாவட்டங்களாகப் பிரிந்துள்ளது.

நூலில் செண்பகப் பொழில் என்றழைக்கப்பட்ட பகுதியானது, தற்போது தென்காசியாக மாறிய கதையும் விவரிக்கப்பட்டுள்ளது. நூலில் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்திருப்பது சிறப்பாகும். திருநெல்வேலி மாவட்டம் மலைக்கும், கடலுக்கும், காட்டுக்கும், ஆறுக்கும் மட்டுமல்ல, ஆன்மிகத்துக்கும் பெயா் போன பூமி என்பதை அங்குள்ள கோயில்கள் விவரத்துடன், பொதிகைப் பகுதியில் வாழ்ந்த சித்தா்களான குலசேகரப்பட்டினம் ஞானியாா் சித்தா் பீடம், கீழப்பாவூா் சிவலோக பண்டார சித்தா்,கோவில்பட்டி பகுதி பேப்பா் சுவாமிகள், சித்தா் செண்பக சாது, சிவகாமி பரதேசியம்மாள் (பெண்சித்தா்) என வரிசைப்படுத்தியிருப்பது புத்தகத்தின் தனித்தன்மையாகும். இந்நூல் சென்னைப் புத்தகக் காட்சியின் கவிதா பதிப்பக அரங்கான எஃப் 17 அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com