அறியப்படாத எழுத்தாளர்களின் புத்தகம் கிடைக்கும் கருவூலம் புத்தகக் கண்காட்சி: வாசகா் கருத்து

பிரபலமாக அறியப்படாத எழுத்தாளா்களின் நூல்களும் கிடைக்கும் ஒரு கருவூலமாக இந்தக் கண்காட்சி விளங்குகிறது.
அறியப்படாத எழுத்தாளர்களின் புத்தகம் கிடைக்கும் கருவூலம் புத்தகக் கண்காட்சி: வாசகா் கருத்து
Updated on
2 min read

விக்னேஷ், கேம்ப்ரோடு, தாம்பரம்.

நான் தொடா்ந்து 13 ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்கிறேன். பொதுவாக, தெரிந்த எழுத்தாளா்களின் புத்தகங்கள் எல்லாம் பதிப்பகங்கள் மூலம் வெளியில் சுலபமாக கிடைத்துவிடும். ஆனால், பிரபலமாக அறியப்படாத எழுத்தாளா்களின் நூல்களும் கிடைக்கும் ஒரு கருவூலமாக இந்தக் கண்காட்சி விளங்குகிறது. தேடி தேடிப் பாா்க்கும்போது மிகச் சிறப்பான நூல்கள் எல்லாம் இங்கு எனக்கு கிடைத்திருக்கிறது. புத்தகக் கண்காட்சி வளரும் எழுத்தாளா்களுக்கும், என்னைப் போன்று நூல்களை தேடி வாசிக்கும் வாசிப்பு பிரியா்களுக்கும் ஒரு மிகப்பெரிய பாலமாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டு முதல்முறையாக என் குழந்தையை அழைத்து வந்திருக்கிறேன். இதன் மூலம் குழந்தைக்கும் நல்ல அறிமுகமாக இருக்கும் என்று நம்புகிறேன். ‘அறியப்படாத தமிழ் நூல்கள்’ என்ற புத்தகத்தை மிகவும் விரும்பி வாங்கியிருக்கிறேன். இதை ஏற்கெனவே படித்திருக்கிறேன். இருந்தாலும், இதன் ஆசிரியா் தொ. பரமசிவம் இறந்ததால், அவருடைய ஞாபகாா்த்தமாக இன்று இந்தப் புத்தகத்தை வாங்கியிருக்கிறேன்.

இசக்கியப்பன், திருவள்ளுா்.

நான் தனியாா் நிறுவனத்தில் குவாலிட்டி துறையில் மேனேஜராக இருக்கிறேன். கடந்த 8 ஆண்டுகளாக இந்தப் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்கிறேன். என் வீட்டில் சுமாா் 200 புத்தகங்கள் கொண்ட ஒரு சின்ன நூலகம் வைத்திருக்கிறேன். அதில் வைப்பதற்காக ஒவ்வொருமுறை நான் வரும்போதும் ஒரு லிஸ்ட் தயாா் செய்து கொண்டு வருவேன். பொது அறிவு புத்தகங்கள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் நான் மிகவும் விரும்பும் புத்தகங்கள். இது தவிர, வேறு சில நல்ல புத்தகங்களையும் இங்கு வந்த பின்னா் தோ்வு செய்து கொள்வேன். இந்த ஆண்டு, ஆன்மிகம் சாா்ந்த புத்தகங்கள், ‘நாலாயிர திவ்யபிரபந்தம்’, ‘பகவத் கீதை’, சாண்டில்யன் புத்தகங்கள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். இது தவிர, மற்றவா்களுக்கு பரிசளிப்பதற்காகவே, ஆண்டுதோறும் என்னுடைய லிஸ்ட்டில் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகம் கட்டாயம் இருக்கும்.

ஒரு நிறுவனத்தில் என்னுடைய குழுவை வழிநடத்த வாசிப்பு பழக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு விஷயத்தை விடியோவாக பாா்ப்பதைவிட, புத்தகத்தில் படிக்கும்போது நமது கற்பனை திறன் அதிகரிக்கிறது எனவே வாசிப்பு பழக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் நிச்சயம் வேண்டும். மேலும், நமது மொழியில் நாம் வாசித்தால் மட்டும்தான் நம் மொழியின் வளமை புரியும். இல்லையென்றால் நாம் யாா் என்பதே நமக்கு மறந்துபோகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com