

தனலட்சுமி, அண்ணாநகர், சென்னை.
நான் கடந்த 4-5 ஆண்டுகளாக புத்தகத்திருவிழாவுக்கு தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கிறேன். கரோனாவினால் இந்த ஆண்டு தள்ளி வைத்திருந்தாலும், நிறுத்தாமல் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வீட்டில் மாடித்தோட்டம் வைத்திருக்கிறேன். எனவே, மாடித் தோட்டம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும், என் மகளுக்குதேவையான கர்ஸிவ் ரைட்டிங், கணக்கு பாடம் சார்ந்த புத்தகங்கள், நீதிக்கதைகள் போன்றவற்றையும் வாங்கியுள்ளேன். இது கொவைட் நேரம் என்பதால், திங்கள், செவ்வாய்க்கிழமையில் அவ்வளவாக கூட்டம் இருக்காது என்பதால் இன்று வந்தோம். இங்கு வந்து பார்த்தால், எல்லோரும் மாஸ்க் அணிந்திருப்பதும், சானிடைஸர் வழங்குவது என பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. மேலும் ஸ்டால்களும் நிறைய இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பொதிகை மு.செல்வராஜன், பல்லாவரம்.
நான்கு ஆண்டுகளாக புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்கிறேன். நாவல், கட்டுரை புத்தகங்கள், கவிஞர்களுடைய பாடல் புத்தகங்கள் எல்லாம் எனக்குப் பிடித்தமானவை. பொதுவாக, புத்தகத் திருவிழாவில் பலவகையான புத்தகங்கள் இருப்பதால், சிறுவர் முதல் பெரியவர் வரை எந்த வயதினரும் தங்களுக்கு தகுந்த புத்தகங்களை வாங்கிக் கொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தங்களுக்குப் பிடித்த புத்தகங்களைத் தேடித் தேடி மகிழ்வோடு வாங்குவதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும். அந்த அனுபவத்தை ரசிப்பதற்காகவே நான் தவறாமல் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்கிறேன்.
சாரதா, சாலிகிராமம்.
6 ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவுக்கு வந்து கொண்டிருக்கிறேன். என் அம்மாவுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தது. அவரிடம் இருந்துதான் எனக்கும் வாசிப்புப் பழக்கம் தொற்றிக் கொண்டது. ஆரம்பத்தில் க்ரைம் நாவல் படிக்கத் தொடங்கி, அது மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது பகுத்தறிவு சார்ந்த புத்தகங்களில் வந்த நிற்கிறது. அதனால், இந்த ஆண்டு பெரியாரின் புத்தகங்கள், பொன்னியின் செல்வன் போன்ற புத்தகங்கள் வாங்கியிருக்கிறோம். இதுதவிர, பெண்ணியம் சார்ந்த புத்தகங்கள் சிலவற்றையும்
வாங்கியிருக்கிறோம்.
யுவஸ்ரீ, சென்னை பல்கலைக்கழக மாணவி.
இப்போது 44- ஆவது புத்தகக்காட்சி நடக்கிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகத்தான் எனக்கு இது போன்று புத்தகக் கண்காட்சி நடக்கிறது என்பதே தெரியும். இன்று இங்கே இவ்வளவு புத்தங்களை ஒரே இடத்தில் பார்க்கும்போது, படிப்பதற்கு ஆர்வமே இல்லையென்றாலும், சில புத்தகங்களின் அட்டைப்படமே அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. இதற்காகவே, புத்தகத் திருவிழாவைப் பற்றி அறிவிப்பு வந்ததுமே, புத்தகங்கள் வாங்குவதற்காக பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு ஃபிரண்ட்ஸுடன் ஒரு டீம்மாக வந்துதான் வாங்குவோம். சில நேரங்களில் ஸ்பான்ஸர் எல்லாம் யாரையாவது கூட்டிக் கொண்டு வருவோம். அப்படி வந்த பிறகு. ஒரு புத்தகத்தை வாங்கியதும் வரும் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.