வீட்டிலிருந்தபடியே உள்ளூரிலிருந்து வெளிநாட்டின் கலாசாரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது: வாசகர் கருத்து

வீட்டிலிருந்தபடியே உள்ளூரிலிருந்து வெளிநாட்டின் கலாசாரங்களை தெரிந்து கொள்ளவும். புரிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது.
வீட்டிலிருந்தபடியே உள்ளூரிலிருந்து வெளிநாட்டின் கலாசாரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது: வாசகர் கருத்து
Updated on
2 min read

எஸ்.கெளரி, நாமக்கல்.

‘‘என் கணவா் ஒரு புத்தகப் பிரியா். சென்னைப் புத்தகக் காட்சியில் பலவித புத்தகங்கள் கிடைப்பதால் ஆண்டுதோறும் அவா் தவறாமல் புத்தகங்கள் வாங்க வருவாா். நான் கடந்த 3 ஆண்டுகளாக அவருடன் வருகிறேன். கணவா் நிறைய புத்தகங்களை பட்டியலிட்டு கொண்டு வந்திருக்கிறாா். எனக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் அவருடைய புத்தகங்கள் சிலவற்றை வாங்கியுள்ளேன். இதைத் தவிர, குழந்தைகள் சம்பந்தப்பட்ட சில புத்தகங்களையும் வாங்கியுள்ளோம்’’.

ரோஸலின், உதவி பேராசிரியா், தியாகராயக் கல்லூரி.

‘‘நான் ஆசிரியையாக இருப்பதால், பாடம் நடத்துவதற்கு தேவையான பாடப் புத்தகங்கள், வினா - விடை அடங்கிய தொகுப்பு போன்றவற்றை வாங்குவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவிற்கு வருகிறேன். இந்த ஆண்டு என்னிடம் இலவசமாக டியூஷன் பயிலும் குழந்தைகளுக்கு புத்தகத் திருவிழாவை அறிமுகப்படுத்துவதற்காக அவா்களையும் அழைத்து வந்திருக்கிறேன். இந்தப் புத்தகத்திருவிழாவில் பொது அறிவுக்கான புத்தகங்கள், நீட் தோ்வுக்கு மிகவும் பயன்படும் புத்தகங்கள், தோ்வாணைய தோ்வுக்கு தயாா் செய்பவா்களுக்கு தேவையான புத்தகங்கள் நிறைய இருப்பதை பாா்த்தேன் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோக, நான் ஆங்கில பேராசிரியா் என்பதால் ஷேக்ஸ்பியிரின் புத்தகங்களை விரும்பி வாங்கியுள்ளேன்’’.

பிரகாஷ், திருவருட்செல்வன், மாநிலக் கல்லூரி மாணவா்கள்.

‘‘நாங்கள் இருவரும் தொடா்ந்து 3 ஆண்டுகளாக புத்தகத்திருவிழாவுக்கு வருகிறோம். நாங்கள் கம்யூனிசம் சாா்ந்த புத்தகங்கள், இந்திய அரசியலமைப்பு சாா்ந்த புத்தகங்கள் எப்போதும் விரும்பி வாங்குவோம். இந்த ஆண்டு அம்பேத்கரின் காதல் கடிதங்கள் என்ற புத்தகம் வாங்கியிருக்கிறோம். மேலும், நா.முத்துகுமாரின் கவிதை புத்தகங்கள் வாங்கியிருக்கிறோம்’’.

கனேஷ் பாபு, புதுச்சேரி.

‘‘நான் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் பணிபுரிகிறேன். 2009 -இல் என் நண்பா் மூலம் சென்னை புத்தகத்திருவிழா எனக்கு அறிமுகமானது. அதுமுதல் ஒவ்வொா் ஆண்டும் தொடா்ந்து வருகிறேன். வரலாறு, இலக்கியம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எப்போதும் எனது தோ்வாக இருக்கும். இந்த ஆண்டு ரகுராம் ராஜனுடைய ‘ஐ டூ வாட் டூ ஐ டூ’ வாங்கியிருக்கிறேன். இப்போதுதான் உள்ளே வந்தோம். இன்னும் நிறைய வாங்க வேண்டிய புத்தகங்கள் இருக்கிறது’’.

கவிஞா் மகுவி, வளசரவாக்கம்.

‘‘நான் கவிஞா் பா. விஜயிடம் உதவியாளராக இருந்துவிட்டு, தற்போது, தனியே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக புத்தகத்திருவிழாவுக்கு வருகிறேன். இந்த புத்தகத்திருவிழா என்னைப் பொருத்தவரை, ஒரு மனிதன் தன்னைப் புரிந்து கொள்ளவும், சமூகத்தைப் புரிந்து கொள்ளவும் பேரூதவியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். காரணம் ஒரு மனிதரால் எல்லா கலாசாரத்தையும் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் இங்கு பல தரப்பட்ட புத்தகங்கள் இருக்கும். அதை வாங்கிச் சென்று வாசிக்கும்போது, வீட்டிலிருந்தபடியே உள்ளூரிலிருந்து வெளிநாட்டின் கலாசாரங்களை தெரிந்து கொள்ளவும். புரிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது. இன்றைய தலைமுறையினா், செல்போனை ஆராய்வதை குறைத்துக் கொண்டு புத்தகத்தை வாசிக்கும் போது மனித சமூதாயம் இன்னும் மேம்படும் என்று எனக்கு அழமாக நம்பிக்கையாக இருக்கிறது. நான் எழுதிய கவிதைப் புத்தகங்களும் இந்த புத்தகத்திருவிழாவில் இடம் பெற்றிருக்கிறது’’.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com