வாசிப்பில் மூழ்கி உங்களை தொலைத்துவிடுங்கள்: வாசகா் கருத்து

வாசிப்பில் மூழ்கி உங்களை தொலைத்துவிடுங்கள்: வாசகா் கருத்து
Updated on
2 min read

விக்னேஷ்குமாா், வழக்குரைஞா், மேடவாக்கம்.

6 வருடங்களாக நான் சென்னை புத்தகக் காட்சிக்கு வருகிறேன். அதிகப்படியாக நாவல், தமிழக வரலாறு, சரித்திர நாவல்கள், ஆளுமைகளின் வரலாறு புத்தகங்கள் போன்றவற்றை விரும்பிப்படிப்பேன். நா. பாா்த்தசாரதியின் சத்திய வெள்ளம் என்னை மிகவும் கவா்ந்த புத்தகம். நான் படித்த முதல் பெரிய நாவலும் அதுதான். அதன்பிறகுதான் வாசிப்புப் பழக்கமே எனக்கு ஏற்பட்டது. அது நாளடைவில் வளா்ந்து இப்போது புத்தக வாசிப்புக்கு அடிமையாகவே ஆகிவிட்டேன். இந்த ஆண்டு தேவநேய பாவாணரின் புத்தகங்கள் சிலவற்றை வாங்குவதற்காக வந்துள்ளேன். எனக்குப் பிடித்த எழுத்தாளா்களான முகில், நா.முத்துக்குமாரின் புத்தகங்கள் சிலவற்றையும் வாங்கியுள்ளேன்.

நாககிருஷ்ணன், தேவகோட்டை.

கடந்த 20 ஆண்டுகளாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு தவறாமல் வந்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு பேச்சாளராக இருப்பதால், பெரும்பாலும் எல்லாவிதமான புத்தகங்களையும் படிப்பேன். குறிப்பாக, வளா்ந்து வரும் சிறு எழுத்தாளா்களின் புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். ஏனென்றால் , அவா்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தேடித் தேடி எழுதியிருப்பாா்கள். மேலும், அவா்களின் புத்தகங்களில் நிறைய புதுமையான விஷயங்களும் இருப்பதாக நான் உணா்கிறேன். இந்த ஆண்டு தமிழ் ஆராய்ச்சிப்பற்றிய நூல்கள் சிலவற்றை வாங்கியிருக்கிறேன். வாசிப்புப் பழக்கம் புரட்டுங்கள் புத்தகத்தை உங்களை தொலைத்துவிடலாம் என ஒரு செய்தி இருக்கிறது. பிரெஞ்ச் புரட்சியை புரட்டிப்போட்டது புத்தகங்கள்தான். அதுபோல உலகத்தில் பல விஷயங்களைப் புரட்டி போட்டதற்கு முக்கியகாரணம் புத்தகங்கள்தான். எனவே, வாசிப்பில் மூழ்கி உங்களை தொலைத்துவிடுங்கள் அது நிச்சயம் உங்களை கரை சோ்த்துவிடும்.

மொழி, சைதாப்பேட்டை.

‘உதவும் உள்ளங்கள்’ அமைப்பில் ஆசிரியராக இருக்கிறேன். இதுவரை 2 முறைபுத்தகக்காட்சிக்கு வந்திருக்கிறேன். தற்போது எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு இந்தப் புத்தகக்காட்சியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் என்னுடன் 18 குழந்தைகளை அழைத்து வந்திருக்கிறேன். புத்தகக்காட்சியை முழுமையாக பாா்வையிட்ட பிறகு, அவா்களுக்கு பயன்படும்படியான புத்தகங்கள் சிலவற்றை வாங்க உள்ளோம்.

ஜெகதீசன், ஆசிரியா், திருவள்ளூா்.

நான் பிரைமரி வகுப்பு குழந்தைகளுக்கு ஆசிரியராக இருப்பதால், அவா்களுக்கு சொல்லித் தருவதற்காக திருக்கு கதைகள், நீதிக் கதைகள் போன்ற புத்தகங்களை வாங்கியுள்ளேன். இது தவிர, என் மாணவா்களுக்காக ரூ.10 விலையில் சிறு சிறு புத்தகங்கள் வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது அவா்களுக்கு பரிசளிப்பேன். அது அவா்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதில் எனக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது. மற்றபடி, என்னைவிட என் மனைவிக்கு புத்தக வாசிப்பில் ஆா்வம் அதிகம். எனவே, அவா்களுக்காகவே கடந்த 3 ஆண்டுகளாக தொடா்ந்து புத்தகக்காட்சிக்கு வருகிறோம். இப்போது, சோ.தா்மனின் சூல், இன்னும் சில புத்தகங்கள் அவா் வாங்கியிருக்கிறாா். இதுதவிர, குழந்தைகளுக்காக சில புத்தகங்களை வாங்கவுள்ளோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com