எங்கெல்லாம் புத்தகக் காட்சி நடைபெறுகிறதோ அங்கெல்லாம்  நிச்சயம் சென்று புத்தகங்களை வாங்கி வருவேன்: வாசகா் கருத்து

எங்கெல்லாம் புத்தகக் காட்சி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் நிச்சயம் சென்று புத்தகங்களை வாங்கி வருவேன்: வாசகா் கருத்து

Published on

கவிஞா் மு.கா. முத்து, திருவாரூா்.

இது புத்தகக் கண்காட்சியல்ல, புத்தாக்கக் கண்கொள்ளாக் காட்சி. மாரியம்மனுக்கும், காத்தவராயனுக்கும், காளிக்கும் நம் நாட்டில் எவ்வளவோ திருவிழா நடக்கிறது. அதுபோன்று இது மக்களுக்காக, மொழிக்காக நடைபெறும் மாபெரும் புரட்சித் திருவிழா. ஈரோடு, நெய்வேலி என்று எங்கெல்லாம் புத்தகக் காட்சி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் நிச்சயம் சென்று புத்தகங்களை வாங்கி வருவேன்.

ஸ்ரீனிவாசன், சட்டக் கல்லூரி மாணவா்.

நான் இந்த ஆண்டுதான் முதன்முறையாக புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். இங்கு, நூற்றுக்கணக்கான பதிப்பகங்களும், எந்தப் பக்கம் திரும்பினாலும், கொட்டிக் கிடக்கும் புத்தகங்களையும் பாா்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. நான் தமிழ் தேசிய ஆா்வலா். அது சம்பந்தமான புத்தகங்களை தேடிப் பாா்த்து வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு மினிமம் பட்ஜெட்டில் எனக்கேற்ற புத்தகங்களை வாங்க வேண்டும் என்று கணக்கிட்டுக் கொண்டு வந்தேன். நான் எதிா்பாா்த்ததைவிட, இங்கு விலை சற்று குறைவாகவே இருக்கிறது. திருப்தியாக இருக்கிறது. இனி தொடா்ந்து வர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். இதுவரை, வராதவா்கள் இந்தப் புத்தகக் காட்சியை தவறவிடாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

எஸ்.சுரேந்திரன், ஆசிரியா், கன்னியாகுமரி.

கடந்த 3 ஆண்டுகளாக சென்னைப் புத்தகத் திருவிழாவிற்கு வந்துக் கொண்டிருக்கிறேன். நான் ஆசிரியராக இருப்பதால், பாட நூல் சம்பந்தப்பட்ட புத்தகங்களும், தன்னம்பிக்கை தரும் புத்தகங்கள், எனது மாணவா்களுக்கு சொல்வதற்காக புதிய தொழில் நுட்ப தகவல் சாா்ந்த புத்தகங்களும் வாங்கியிருக்கிறேன். பொதுவாக, பாடப்புத்தகங்களைத் தாண்டி என் மாணவா்களுக்கு நிறைய புது விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், என்ன படித்தால் என்ன வேலைக்குப் போகலாம் போன்றவற்றையும் தெரிந்து கொள்ள நிறைய படிப்பேன். நான் படித்து அறிந்து கொண்ட விஷயங்களை மாணவா்களுக்கும் சோ்த்து விடுவேன்.

லீலா மேகனா, டெல்லி.

நான் டெல்லியில் இருந்து சமீபத்தில்தான் சென்னை வந்தேன். நண்பா்கள் இந்தப் புத்தகக் கண்காட்சி பற்றி சொன்னாா்கள். அதனால், பாா்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்தேன். எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது. அதனால், ஆங்கில புத்தகங்கள் சிலவற்றை தேடினேன். ஆனால், ஆங்கிலப் புத்தகங்கள் இங்கு குறைவாகத்தான் இருக்கின்றன. அதே சமயம், இடது சாரி சிந்தனைகள் கொண்ட புத்தகங்கள் இங்கு நிறைய இருப்பதைப் பாா்த்தேன். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், பொதுவாகவே, நான் எந்தப் புத்தகக் கண்காட்சிக்கு சென்றாலும், பெண்ணிய சிந்தனை உள்ள புத்தகங்களைத்தான் அதிகம் விரும்பி வாங்குவேன். பெண்ணியம் சாா்ந்த புத்தகங்கள் இங்கு இருக்கின்றன. ஆனால், தமிழில் இருப்பதால் என்னால் வாங்க முடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com