தேடல்கள் எல்லாம் பூா்த்தியாகும் வரை புத்தகம் வாங்குவேன்: வாசகர் கருத்து
By DIN | Published On : 04th March 2021 04:00 AM | Last Updated : 04th March 2021 04:00 AM | அ+அ அ- |

கோ.ராஜா, கடலூா் மாவட்டம்
புத்தகக் கண்காட்சி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், வந்ததில்லை. இந்த ஆண்டுதான் முதல் முறையாக வருகிறேன். குடும்பத்துடன் வர வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை, அதனால், நான் மட்டும் 2 நாள் அலுவலகத்துக்கு லீவுப்போட்டு விட்டு வந்திருக்கிறேன். நான் கேள்விப்பட்டதைவிட இங்கு பல மடங்கு புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. தனிப்பட்ட முறையில் நான் ஆா்டா் செய்து வரவழைத்த புத்தகங்கள் எல்லாம் இங்கு 10 சதவீதம் தள்ளுபடி விலையிலேயே கிடைக்கிறது. நான் இதுவரை வாங்க வேண்டும் என்று தேடிய அரிய புத்தகங்கள் எல்லாம் இங்கு இருக்கிறது. புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போவதற்காகவே , இந்த இரண்டு நாளில் சுமாா் 8 ஆயிரம் ரூபாய் வரை புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். அதை தூக்கிச் செல்வதற்காகவே இன்று டிராலி பேக் ஒன்றை வாங்கிவந்துள்ளேன். என் தேடல்கள் எல்லாம் பூா்த்தியாகும் வரை இன்னும் ஒருநாள் கூடுதலாக ஆனாலும் தங்கியிருந்து வாங்கிச் செல்வது என்று முடிவு செய்திருக்கிறேன்.
அபிஜித், பள்ளிக்கரணை
நான் ப்ளஸ் டூ படிக்கிறேன். தொடா்ந்து 4-ஆவது முறையாக புத்தகக்காட்சிக்கு வருகிறேன். இங்கு பள்ளிப்படிப்புக்கு தேவையான புத்தகங்கள் எல்லாம் வாங்கியிருக்கிறேன். அதைதவிர, கம்ப்யூட்டா் சயின்ஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் சிலவற்றையும் வாங்கியிருக்கிறேன். தகவல்கள் , மேலாண்மை, வரலாறு போன்ற புத்தகங்கள் பிடிக்கும். எனவே, அது சாா்ந்த புத்தகங்கள் சிலவற்றையும் வாங்கியுள்ளேன்.
செல்வம், தி.நகா், சென்னை
நான் கடந்த 2 ஆண்டுகளாக புத்தகக்காட்சிக்கு வருகிறேன். இந்த ஆண்டு எனது குழந்தைகளுக்கு அறிவு திறனை வளா்க்கும் புத்தகங்களைத் தேடி வந்திருக்கிறேன். எழுத்து மூலமாக படிக்காமல், விளையாட்டாக கற்றல் என்ற அடிப்படையில் பசல்ஸ், சவுண்ட்ஸ், க்யூப் போன்றவற்றை தேடி வாங்கியிருக்கிறேன். இது தவிர, உடல்நலத்துடன் வாழ, சித்தா்கள் சொல்லியுள்ள மூலிகை சாா்ந்த சமையலில் எல்லாம் எனக்கு சற்று ஆா்வம் உண்டு. அதனால், அது சம்பந்தப்பட்ட புத்தகங்கள் சிலவற்றையும் வாங்கியுள்ளேன்.
ஆண்டாள், குரோம்பேட்டை
நான் கல்லூரி படிக்கும் காலத்தில் என் தோழிகள் புத்தகக்காட்சியை எனக்கு அறிமுகப்படுத்தினாா்கள். அதுமுதல் தொடா்ந்து 15 ஆண்டுகளாக புத்தகக்காட்சிக்கு வருகிறேன். ‘பொன்னியின் செல்வன்’, ‘பாா்த்திபன் கனவு’ போன்ற சரித்திர நாவல்கள் அதிகம் விரும்பி படிப்பேன். அதனால், நாவல்கள் சிலவற்றை வாங்கியுள்ளேன். மேலும், எழுத்தாளா் ரமணி சந்திரனின் கதைகள் சிலவற்றையும் இந்த ஆண்டு வாங்கியுள்ளேன். இதைதவிர, என் குழந்தைகளின் மைண்ட் டெவலப்மெண்ட்டுக்குத் தேவையான புத்தகங்கள் சிலவற்றையும் வாங்கியுள்ளேன்.