மதுக் கடைகள் மூடலால், 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: நிதி ஆயோக் தலைவர் கவலை!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவால், சுமார் 10 லட்சம் பேர் வேலையிழக்க நேரிடும்
மதுக் கடைகள் மூடலால், 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: நிதி ஆயோக் தலைவர் கவலை!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவால், சுமார் 10 லட்சம் பேர் வேலையிழக்க நேரிடும் என்று நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

'தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் அமைந்துள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

அதன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் அமைந்துள்ள மதுபான கடைகள் அகற்றப்பட்டன. நட்சத்திர விடுதிகளில் மது வகைகள் விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் கடைகள் வரை மூடப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்ற ரீதியில், திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த், 'சுற்றுலா என்பது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஏன் அதைக் கொல்ல வேண்டும்? உச்ச நீதிமன்றம் மதுபான கடைகளை அகற்றக் கூறிய உத்தரவால், சுமார் 10 லட்சம் பேர் வரை வேலை இழக்க நேரிடும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு ஆதாரமாக, ஆங்கிலச் செய்திக் கட்டுரைகளையும் இணைத்துள்ளார்.

மூடப்பட்ட மதுபான கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சிலர், அருகில் திறந்திருக்கும் மதுபான கடைகளில் தாற்காலிகமாக பணி செய்யுமாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம், மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அரசுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மதுபான விற்பனை உள்ளது. புதுவையில் விற்கப்படும் மது தரமானதாகவும், விலை மலிவாகவும் கிடைக்கும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் புதுவைக்கு வந்து செல்கின்றனர். மாநில அரசின் முக்கிய வருவாய் கலால்துறை மூலம் கிடைப்பதாகும்.

கடந்த 2015-16-ம் ஆண்டு ரூ.630 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.674 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. நிகழாண்டில் (2016-17) ரூ.775 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ரூ.500 கோடியை கலால்துறை ஈட்டியுள்ளது.

தமிழகத்தில் இயங்கி வந்த 5,700 மதுபான கடைகளில் 3,300 மதுபான கடைகள் சனிக்கிழமை முதல் மூடப்பட்டதால் ஏராளமான 'குடி'மகன்கள் பரிதவிப்புக்கு ஆளானார்கள்.

நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுபான கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுபான கடைகளை குடியிருப்புகள் இருக்கும் இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com