உணவுதானிய உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரிக்கும்: மத்திய வேளாண் அமைச்சகம்

உணவுதானிய உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரிக்கும்: மத்திய வேளாண் அமைச்சகம்

நாட்டின் உணவுதானிய உற்பத்தி காரீப் பருவத்தில் கடந்தாண்டைக் காட்டிலும் அதிகரிக்கும் என மத்திய வேளாண் துறை இணையமைச்சர் புருஷோத்தம் ரூபலா  தெரிவித்தார்.


நாட்டின் உணவுதானிய உற்பத்தி காரீப் பருவத்தில் கடந்தாண்டைக் காட்டிலும் அதிகரிக்கும் என மத்திய வேளாண் துறை இணையமைச்சர் புருஷோத்தம் ரூபலா  தெரிவித்தார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய வேளாண் துறை மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
காரீப் பருவத்தில் எதிர்பார்த்ததை விட மழைப்பொழிவு சிறப்பாக இருந்தது. அதன் காரணமாக, ஒரு சில மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காரீப் பயிர்கள் பாதிக்கப்பட்டது. ஆனால், இது ஒட்டுமொத்த உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், நடப்பாண்டில் காரீப் பருவ உற்பத்தி கடந்தாண்டு உற்பத்தியான 14.17 கோடி டன்னைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும்.
ஒட்டுமொத்த அளவில் 12 மாநிலங்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. ஆனால் ஏனைய மாநிலங்களில் ஒழுங்கான இடைவெளியில் மழை பெய்ததையடுத்து காரீப் பருவ பயிர்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. ரபி பருவ சாகுபடி பெரும்பாலும் பாசன வசதி கொண்ட இடங்களில்தான் நடைபெறுகிறது. இந்தப் பருவத்தில் மக்காச்சோளம் மற்றும் கடுகு பயிரிடும் பரப்பு கணிசமான அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருப்பு வகைகளில் ஏறக்குறைய நாம் தன்னிறைவு நிலையை அடைந்து விட்டோம். அதேசமயம்,  நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைக்க ஏதுவாக, எண்ணெய் வித்துகள் சாகுபடியை அதிகரிக்க மாநிலங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை வேகமாக வழங்குவதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசு மற்றும் வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர். 
நடப்பு 2019-20 பயிர் பருவத்தின் (ஜூலை-ஜூன்) காரீப் பருவத்தில் இதுவரையில் 1,054.13 லட்சம் ஹெக்டேரில் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெல் பயிரிடும் பரப்பு 5.25 லட்சம் ஹெக்டேர் குறைந்து 378.62 லட்சம் ஹெக்டேராகவும், பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பு 2.41 லட்சம் ஹெக்டேர் சரிந்து 132.99 லட்சம் ஹெக்டேராகவும் உள்ளது.
அதேசமயம், முக்கிய தானியங்கள் பயிரிடும் பரப்பு 3.1 லட்சம் ஹெக்டேர் உயர்ந்து 178.12 லட்சம் ஹெக்டேராகவும், எண்ணெய் வித்துகள் பயிரிடும் பரப்பு 178 லட்சம் ஹெக்டேராகவும் இருந்தது என மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com