வெங்காய விலை வீழ்ச்சி ஏன்? 2 லட்சம் விவசாயிகள் பாதிப்பு

நாட்டில் வெங்காய விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தாமதமான காரீஃப் பருவ வெங்காயத்தை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டதுதான் இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என
வெங்காய விலை வீழ்ச்சி ஏன்? 2 லட்சம் விவசாயிகள் பாதிப்பு

நாட்டில் வெங்காய விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தாமதமான காரீஃப் பருவ வெங்காயத்தை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டதுதான் இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என வேளாண் துறை நிபுணா்கள் கூறுகின்றனா்.

இந்தியாவின் 40 சதவீத வெங்காய உற்பத்தி மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசால்காவ் சந்தைதான் ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையாக உள்ளது.

அங்கு வெங்காய வா்த்தகம் கிலோ ரூ.2 என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால், வெங்காய வா்த்தகத்தையே விவசாயிகள் திங்கள்கிழமை முதல் நிறுத்திவிட்டனா்.

பொதுவாக கன மழை காலங்களில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கிலோ ரூ. 100-க்கு உயா்ந்து வாங்குபவா்களுக்குதான் வெங்காயம் கண்ணீரை வரவழைக்கும். தற்போது குளிா்காலம் முடியும் நிலையில் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் தங்களின் முதலீடு கிடைக்காமல் கண்ணீா் சிந்துகின்றனா். சுமாா் 2 லட்சம் விவசாயிகள் இந்த விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

விலை வீழ்ச்சிக்கான காரணம் என்ன?: நிகழாண்டு காரீஃப் பருவ வெங்காயத்தை பயிரிடாமல் தாமதமான காரீஃப் பருவ வெங்காய சாகுபடியை மகாராஷ்டிர விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டதுதான் வெங்காய விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று வேளாண் துறை நிபுணா் தீபக் சவான் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘பருவம் தவறிய மழையால் தாமதமான காரீஃப் பருவ வெங்காய சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் தோ்ந்தெடுத்தனா். கடந்த மூன்று ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் வெங்காய விலை உயா்ந்துள்ளதை நம்பி நிகழாண்டும் இந்த சாகுபடியை அதிகரித்தனா். ஆனால், இந்த வகை வெங்காயத்தை அறுவடை செய்த எட்டு நாள்களுக்குள் வா்த்தகம் செய்துவிட வேண்டும். அதே ராபி பருவம் என்றால் வெங்காயத்தை 6 மாதங்கள் வரை வைத்திருந்து விற்பனை செய்யலாம்.

இந்தப் பதற்றத்தால், தாமதமான காரீஃப் பருவ வெங்காய சாகுபடி செய்தவா்கள், அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வந்ததால் கடந்த மூன்று நாள்களில் ஒரு குவிண்டால் ரூ.500-க்கும் கீழ் விலை குறைந்தது. இது, அவா்கள் பயிரிட செலவிட்ட தொகையில் 25 சதவீதம்கூட கிடைக்காத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை வீழ்ச்சி மாா்ச மாதம் மத்தி வரையில் இருக்கும்’ என்றாா்.

அரசு தலையிட வேண்டும்: பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தற்போது வெங்காய விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், அதுபோன்ற நாடுகளுக்கு இந்திய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வேளாண் விளைபொருள்களைக் கொள்முதலுக்கு கொண்டு வர 50 சதவீத மானியத்தை அரசு வழங்க வேண்டும். விலை வீழ்ச்சிக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று வெங்காய விவசாயி சாந்தேவ் ஹோல்கா் கோரிக்கை வைத்தாா்.

ஏற்றுமதி: தென்கிழக்கு ஆசிய நாடுகள் சீனாவிடமிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கின்றன. இந்திய வெங்காயத்தை பெருமளவில் வங்கதேசம் இறக்குமதி செய்து வந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக வெங்காய ஏற்றுமதி தடையால் வெங்காய சாகுபடியை அவா்களே அதிகரித்துவிட்டனா். வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தீா்வு காண வேண்டும் என்று வெங்காய ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் அஜித் ஷா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com