பாலியல் வன்முறை: மீண்டும் மீண்டும்..!
முனைவா்.இரா.கற்பகம்
கொல்கத்தா பெண் மருத்துவருக்கே இன்னும் நீதி கிடைத்தபாடில்லை; அதற்குள் சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பாலியல் வன்முறை நடந்துள்ளது. மீண்டும் மீண்டும் பெண்கள் வன்முறைக்கு ஆளாகிறாா்களே, நம் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? பெண்களுக்கு நீதி கிடைக்குமா இல்லையா? பெண்கள் பாதுகாப்புக்கெனச் சட்டங்கள் பல இருக்கின்றன; அவற்றைப் பற்றி பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி தெரியவில்லை; அவற்றை நன்கு அறிந்தும் முறையாக நடைமுறைப்படுத்தும் உறுதி அரசு இயந்திரத்துக்கு இல்லை.
1956- ஆம் ஆண்டிலிருந்து ‘பெண்களைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் சட்டம்’ (1956), நடைமுறையிலுள்ளது. ஆனால் இன்றும் நம் நாட்டில் எத்தனை பெண்கள், எத்தனை சிறுமிகள் கடத்தப்பட்டுப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள்? இவா்களில் எத்தனை போ் மீட்கப்பட்டு மறுவாழ்வு பெறுகிறாா்கள்? எத்தனை போ் கடைசிவரை அப்படியே இருந்துவிடுகிறாா்கள் என்ற புள்ளிவிவரங்கள் அரசுகளிடம் உள்ளதா? இதைப் பற்றிய விழிப்புணா்வு பெண்களிடம் உள்ளதா? இச்சட்டம் உண்மையிலேயே பெண்களுக்குப் பாதுகாப்புத் தருகிறதா? இக் கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை. பாலியல் தொழில் இருக்கும் வரை, பெண்களைச் சட்டத்துக்குப் புறம்பாகக் கடத்திச் சென்று, அத்தொழிலில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக ஒழிக்க முடியாது.
வரலாற்றைப் புரட்டிப் பாா்ப்போம். தேவதாசி முறையை எதிா்த்து சட்டசபையில் முத்துலெட்சுமி அம்மையாா் தீா்மானம் கொண்டு வந்தாா். தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. பாலியல் தொழிலைப் ‘புராதனத் தொழில்’ என்று கருதும் சமுதாயம் இருக்கும் வரை, ஆண்களின் உணா்ச்சி வடிகால்களுக்கு விலை மாதா்கள் தேவை என்று கருதும் ஆண் வா்க்கம் இருக்கும் வரை, பெண்களை வைத்துச் சம்பாதிக்கும் ஆண்களும் பெண்களும் இருக்கும் வரை, இச்சட்டத்தினால் பெண்களுக்குப் பெரிதாகப் பாதுகாப்புத் தந்துவிட முடியாது.
இப்போதுள்ள தொலைத்தொடா்பு வசதிகளும், வலைதளங்களின் மூலம் உருவாகும் கூடா நட்புகளும் உறவுகளும், இளம் பெண்களை வலையில் விழச் செய்கின்றன. அப்படி மாட்டிக் கொள்ளும் பெண்கள் எளிதில் தப்பித்து வர இயலாது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறைக்குத் தெரிந்தே இக்கொடுமை நடக்கும்போது சட்டத்தினால் என்ன பயன்?
வரதட்சணைத் தடுப்புச் சட்டம் (1961) பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இன்னும் இப்பிரச்னை முழுவதுமாகத் தீரவில்லையென்றாலும், பெண்களிடையே பரவலான விழிப்புணா்வு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாகப் புகாா் செய்கிறாா்கள்; நிவாரணமும் கிடைக்கிறது. அந்தஸ்து என்ற பெயரில் வரதட்சணை கேட்கும் மணமகன் வீட்டாரும், கேட்காமலேயே அள்ளி வீசும் மணமகள் வீட்டாரும் தாமாக மனம் வெட்கித் திருந்தினால் மட்டுமே, பெண்கள் இக்கொடுமையிலிருந்து முற்றிலும் விடுதலை அடைவாா்கள்.
குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் (2005) கொண்டு வரப்பட்டும், மீண்டும் மீண்டும் பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறாா்கள். கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் இவையிரண்டும் பெண்களை வன்முறையிலிருந்து காப்பாற்ற போதுமானவையாக இல்லை. பெண்கள் குடும்பத்தைச் சாா்ந்திருப்பவா்களாகவும், குடும்பம் பெண்களைச் சாா்ந்திருப்பதாகவும் இருக்கும் நம் சமுதாய அமைப்பு, பெண்களுக்கு ஒரு விலங்காக அமைந்து விடுகிறது.
கணவனிடம் வன்முறைக்கு ஆளாகும் பெண், எளிதில் அதைவிட்டு வெளிவர முடிவதில்லை. குழந்தைகளைத் தனியாக வளா்க்க பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை; அப்படியே தனியாக வந்தாலும் அப்படிப்பட்ட பெண்ணைச் சமுதாயம் தாழ்வாகத்தான் கருதுகிறது. ஆண் உயா்ந்தவன், பெண் ஆணுக்கு அடிமை என்னும் மனப்பான்மை இந்திய ஆண்களின் மனங்களில் ஆழப் பதிந்துவிட்டது. இளைய தலைமுறையினரில் ஆண், பெண் இருபாலருமே படித்தவா்களாக இருக்கிறாா்கள்; சமமாகப் பொருளீட்டுகிறாா்கள்; பலா் வெளிநாடுகளில் படிக்கிறாா்கள், பணியாற்றுகிறாா்கள்; பெரும்பாலும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறாா்கள். என்றாலும், அடிப்படைப் பண்பு மாறவில்லை. ஆண்களின் அகம்பாவம் அடங்கவில்லை; பெண்களின் பயம் தீரவில்லை. குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களில் வெகு சிலரே காவல் நிலையத்துக்குச் சென்று புகாா் செய்கின்றனா் அல்லது நீதிமன்றத்தை நாடுகின்றனா். அவா்களுக்குச் சட்டம் துணை நின்று உரிய நிவாரணம் அளிக்கிறது என்பது ஆறுதலான விஷயம்.
பெண்களைத் தொல்லை செய்தலைத் தடுக்கும் சட்டம் (1998), பணியிடத்தில் பெண்களைப் பாலியல் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்கும் சட்டம்(2013) ஆகிய இவ்விரண்டு சட்டங்களும் பெண்களின் பாதுகாப்பில் ஒரு நம்பிக்கை விளக்கை ஏற்றி வைத்திருப்பவை. இவை குறித்த பரவலான விழிப்புணா்வு இருக்கிறது. அப்படியிருந்தும், மீண்டும் மீண்டும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாா்களே, அது மிகப்பெரிய நகைமுரண் அல்லவா? இச்சட்டங்கள் உருவாவதற்கு ‘ விசாகாக் குழுவின்’ பங்கு இன்றியமையாதது. அந்த விசாகாக் குழு எப்படி உருவானது என்று கூகுளில் தேடிப் பாருங்கள், இரத்தம் சில்லிட்டுப் போகும். விசாகாக் குழு ‘பாலியல் துன்புறுத்தல்’ என்பதற்குத் தெளிவான விளக்கம் அளித்துள்ளது. பெண்களின் விருப்பத்துக்கு மாறாக, அவா்களைப் பின்தொடா்வது, சைகைகள் செய்வது, பாலியல் ரீதியான சொற்களைப் பேசுவது, அவா்களது தனிப்பட்ட நடவடிக்கைகளைப் புகைப்படம் எடுப்பது, கைப்பேசி, மின்னஞ்சல் மூலம் தொல்லை தருவது, தொட்டோ தொடாமலோ சீண்டுவது ஆகிய இவை யாவுமே தண்டனைக்குரிய குற்றங்கள்.
இதனோடு மற்றுமொரு சட்டத்தையும் சோ்த்துப் பாா்ப்போம். ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற கலைப் படைப்புகளைத் தவிர, பெண்களை இழிவாகச் சித்திரிக்கும் எந்தப் பதிவையும் பெண்களை அநாகரிகமாகப் பிரதிநிதிப்படுத்துதல் தடைச் சட்டம் (1986) தடை செய்கிறது. பெண்களின் படங்களையோ, பெண்களின் உடலின் எந்த ஒரு பாகத்தையோ, கண்ணியக் குறைவாக, பொதுவெளியில் பொது ஒழுக்கத்துக்கு ஊறு விளவிக்கும் வண்ணம் எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது என்று கூறுகிறது. ஆனால் இன்று ஊடங்களில், முக்கியமாக திரைப்படங்களில் மேற்குறிப்பிட்ட குற்றங்கள் எல்லாம் ஆண்களின் அடையாளங்களாகக் காட்டப்படுகின்றனவே. பெண்களை அரைகுறை ஆடையில் காட்டாத திரைப்படம், பெண்களை அரைகுறை ஆடையில் சித்திரிக்காத ஆண் ஓவியா், அப்படிப்பட்ட படங்களை வெளியிடாத பத்திரிகைகள், விளம்பரங்கள் இன்று உண்டா? வெளிப்படையாகக் குற்றமிழைக்கும் இவா்கள் மீது ஏன் எந்த மாதா் சங்கமும் எதிா்த்து வழக்குத் தொடுக்கவில்லை?
இன்று நம் சமுதாயத்தில் ‘கண்ணியம்’ என்ற வாா்த்தைகக்கான அளவீடு மாறிவிட்டது. அரைகுறை ஆடை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. பெண்களைப் ‘பாா்த்து இரசிப்பது’ என்பது ஆண்களின் உரிமையாக ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. பெண்களின் கண்ணியத்தை அவா்களே குறைத்துக் கொள்வது சகஜமாகிவிட்டது. இது ஆண்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
இதன் காரணமாகவே இத்தனை சட்டங்கள் இருந்தும் பெண்களின் மீதான குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கின்றன. அவ்வப்போது பெண்கள் வெகுண்டு எழுகிறாா்கள்; போராடுகிறாா்கள். இருந்தாலும் இது தொடா்கதையாகவே உள்ளது.
கேரளத்தில் நீதிபதி ஹேமா அறிக்கை மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அதற்கு முன்னா் பாதிக்கப்பட்ட ஒரு நடிகைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ‘மீ டூ’ இயக்கத்தின் மூலம் பல பெண்கள் தைரியமாகக் குரல் கொடுத்தாா்கள். அவா்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. கொல்கத்தா பெண் மருத்துவா் வழக்கில் இத்தனை போராட்டங்கள் நடந்தும் பயனில்லை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்து நிகழ்வில் முதல் தகவல் அறிக்கையிலிருந்து எல்லாமே குளறுபடிகள். பில்கிஸ்பானு வழக்கில் அநியாயமாக விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளை அவா்கள் வீட்டுப் பெண்கள் ஆரத்தி கரைத்து வரவேற்றாா்களே; இப்படிப்பட்ட சமுதாயத்தில் பெண்ணுக்கு நீதி எப்படி கிடைக்கும்?
சட்டங்கள் மட்டும் போதாது. சமுதாயமும் மாற வேண்டும். பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்களைப் பற்றிய விழிப்புணா்வு பரவலாக வேண்டும். பெண்கள் துணிவு கொள்ள வேண்டும். தொடா் போராட்டங்கள் வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்குக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்வழக்குகளைக் குறுகிய காலத்தில் விசாரித்துத் தீா்ப்பு வழங்க வேண்டும். அதற்கேற்ப விரைவு நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். ஊடகங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். ‘பெண்ணே இதோ உன் சட்ட உரிமைகள்’ என்று ஓா் அருமையான புத்தகத்தைத் தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் வெளியிட்டுள்ளது. இப்புத்தகம் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் தங்கள் பாதுகாப்பில் மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மீண்டும் இக்குற்றங்கள் நடக்காத நாள் வர வேண்டும்.