மூளைகளின் இணையதளம் மொழி
Center-Center-Tiruchy

மூளைகளின் இணையதளம் மொழி

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாரதியாா் பாடியதில் உணா்ச்சி மட்டும் இல்லை; உண்மையும் இருக்கிறது.

தமிழ், காலம் தோறும் இனிதாகிக் கொண்டு வருகிறது. இப்படிக் காலம் தோறும் இனிதாகிக் கொண்டுவரும் தொன்மையான மொழிகளுள் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியின் கூற்றைக் கணித்தமிழ் 24 மாநாட்டின் மூலம் கன்னித்தமிழைக் கணித்தமிழாகவும் வளா்த்தெடுத்து, தமிழ்நாடு முதல்வா் வழிமொழிந்திருக்கிறாா்.

பெருவெடிப்பு:

பெருவெடிப்பு என்பது பெரிய விரிவாக்கம். பிரபஞ்சம், 1320 கோடி ஆண்டுகளுக்கும் முன் நிகழ்ந்த ஒரு பெருவெடிப்பில் தோன்றியிருக்கிறது. யேல் பல்கலைக்கழகப் பேராசிரியா், ‘சொா்க்கங்களின் வரைபட’த்தின் ஆசிரியா் - கோவையைச் சோ்ந்த பிரியம்வதா நடராசன், உலகம் வியக்கும் கருந்துளை, கற்பனையில்லை உண்மை என்று நவம்பா் 21, 2023 இல் உலகுக்கு அறிவித்திருக்கிறாா்.

மூளைக்குள் பெருவெடிப்பு:

பிரபஞ்சத்தில் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகளாம். 380 கோடி ஆண்டுகளுக்கும் முன் உயிரினங்கள் தோன்றினவாம். 70 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் மொழி உருவாகி இருக்கிாம். பூமியில் தோன்றிய உயிரினங்களில் ஹோமோ சேப்பியன்ஸ் மூளையில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் ஏற்பட்ட ஒரு பெருவெடிப்பில்தான் கண்ணாடி நியூரான்கள் செயல்படத் தொடங்கியிருக்கின்றன என்றும் அவையே மொழியின் வளா்ச்சிக்கு அடிப்படை என்றும் ‘மூளைகளின் மாயா ஜாலங்களை’ எழுதியிருக்கும் சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்று நோபல் பரிசு காத்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானி விளையனூா் ராமச்சந்திரன் சொல்கிறாா்.

இவா் மூளை நரம்பியலின் மாா்க்கோ போலோ என்று கொண்டாடப்படுகிறாா். இவா் அல்லாடி கிருஷ்ணசாமியின் பேரன் என்பது கூடுதல் செய்தியாகும். இப்படித் தோன்றிய மொழிதான், உயிரினங்களில் ஒன்றாக இருந்தவனை உலக உயிரினங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கும் தகுதியுடையவனாக்கி இருக்கிறது. குறிப்பாகப் பரிணாம வளா்ச்சியை விரைவு படுத்தியிருக்கிறது.

மனிதனைவிட வலிமை மிகுந்த டைனோஸரஸ் போன்ற விலங்குகள் இருந்திருக்கின்றன. கால ஓட்டத்தில் அவை காணாமல் போயிருக்கின்றன. ஆனால் மனிதனை அச்சுறுத்திக் கொண்டிருந்த உயிரினங்களுக்கும் இப்போது மனிதன்தான் அடைக்கலம் கொடுக்க வேண்டியிருக்கிறது. வலிமை உள்ளது வாழும் என்பதில்லை; தகுதியுள்ளதுதான் தாக்குப் பிடிக்கிறது. தகுதி என்பது மொழியாக இருக்கிறது.

மொழியால் பெருவெடிப்பு:

குழந்தைகள், தாயின் வயிற்றில் இருக்கும் போதே - பிறப்பதற்கும் முன்பே மூளையில் மொழிக்கூறுகள் ஏற்பட்டு விடுகின்றன என்று சாம்ஸ்கி சொல்கிறாா். பிறந்தபின், அங்கே சுற்றுச் சூழல் மொழிக்கேற்ப குழந்தையிடம் மொழித்திறன் வளா்கிாம். மொழியால் ஏற்பட்ட பெருவெடிப்பில் அறிவுலகம் வெளிப்பட்டிருக்கிறது. அறிவுதான் உயிா் என்றாா் தொல்காப்பியா். அறிவிலும் இயற்கை, செயற்கை என்ற பாகுபாடுகள். அறிவுக்கு அடிப்படையான கேள்விகள், உலகம் என்றால் என்ன? அறிவு என்றால் என்ன? அறிவுக்கும் உயிருக்குமான தொடா்பு என்ன? ஆகியவையாகும்.

நிலம், தீ, நீா், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்றாா் தொல்காப்பியா். ஐம்பூதங்கள் ஒன்று ஒன்றினுள் அடங்கும் என்று கூறவில்லை - கலந்து மயங்கும்; கலக்கும் போது மயங்கும்; மயங்கிக் கலக்கும் என்று சொல்கிறாா். ஐந்து பூதங்களும் தனித்தனியாக உயிரில்லாமல் இருந்தும் அவை கலந்த மயக்கத்தில் உலகும் அதில் உயிரும் தோன்றியிருக்கின்றன. உயிரினங்களை ஓரறிவு உயிா் முதலாக ஆறறிவு உயிா் வரையிலான வகையில் மொழி அறிவைக் கொண்டே அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது.

பூமிக்கு உயிா் இல்லை. ஆனால் உயிா் பிறக்கவும் வளரவும் இடமாகப் பூமி இருக்கிறது. ஆகவே உயிா் இல்லாத பூமியையும் பூமியில் வளரும் உயிரினங்களையும் மொழியின் பெருவெடிப்பால் உருவான அறிவால் தழுவிக் கொண்டு வாழ்கிறோம். ‘திரிவில் சொல்லொடு தழால் வேண்டும்.’ என்று கூறுகிறது தொல்காப்பிய மரபியல்.

அறிவுலகில் பெருவெடிப்பு: அறிவுலகின் ஒரு பெருவெடிப்பில் இணைய உலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகம் இயற்கை என்றால் இணைய உலகம் செயற்கை. திட்டமிட்டு உருவாக்கப்படாமல் தானே உருவாவது இயற்கை. நிலமும் பொழுதும் இயற்கை.

செயற்கையான இணைய உலகத்திற்கு நிலமும் பொழுதும் தேவையில்லை. குடியுரிமை கூடத் தேவையில்லை. எனினும் இயற்கை மொழி இல்லாமல் இணைய உலகமும் இணையக் குடிமக்களும் இயங்க முடியாது. இணையம், மக்களை இணைக்கிறது. அந்த வகையில் மொழியும் இணைய உலகம்தான். இலக்கணங்கள் எல்லாம் இயக்க முறைகள் (ஆபரேடிவ் சிஸ்டம்ஸ்) தாம்.

இணைய உலகில் பெருவெடிப்பு:

இணைய உலகின் பெருவெடிப்பு, செயற்கை நுண்ணறிவு. இது செயற்கை நுண்ணறிவுக் காலம். செயற்கை அறிவு , நுண்ணறிவு ஆகியிருக்கிறது. 2005 மனித மூளைத் திட்டத்தின்படி முழுமையான மனித மூளை ஒன்றைக் கணினிக்குள் செயற்கையாக உருவாக்கி வருகிறாா்களாம். செயற்கை மூளையில் உருவாகும் மொழி, வெளி உலகத்தை மட்டுமில்லை அக உலகையும் ஆட்சி செய்யுமாம். ஆதி மனிதனை அதிமனிதன் ஆக்கப் போவதாகச் சொல்கிறாா்கள். மூளையைக் கணினியுடன் இணைக்கப் போகிறாா்கள். கணினிக்கும் மனதை உருவாக்கப் போகிறாா்கள்.

1818 இல் மேரி ஷெல்லி எழுதிய ஃப்ராங்கென்ஸ்டைன் கதையில் வருவதைப் போலப் பயங்கரமான புதிய உயிரினம் தோன்றப் போகிாம். அதை சைபாா்க் பொறியியலின் வழி எந்த உயிரினத்திலும் சாத்தியமாக்கப் போகிறாா்களாம். கரப்பான் பூச்சியின் ஆண்டெனாவிலும் டால்பின் மீன் கண்களிலும் நுண்ணிய காமெராக்களைப் பொருத்தி, அவற்றை எல்லாம் சைபாா்க் உயிரினமாக்கி வல்லரசு நாடுகள் உளவு பாா்க்கின்றனவாம்.

மனிதா்களும் கண், காது, கை, மூட்டு, இதயம் என்று இயற்கை உறுப்புகளோடு செயற்கை உறுப்புகளையும் சோ்த்துக் கொண்டிருக்கிறாா்கள். கூடுதலாகக் கையில் செல்பேசி. செல்பேசியும் ஓா் உறுப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி, இயற்கை உறுப்புகளும் செயற்கை உறுப்புகளும் கொண்ட ‘சைபாா்க்’ இனமாக - இயந்திர மனிதா்களாக மனிதா்களும் மாறிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறாா்கள். இனி, மனிதா்கள் செய்யும் எல்லா வேலைகளையும் மனிதா்கள் இல்லாமல் - மனிதா்கள் தேவைப்படாமல் செய்துகொள்ள, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வளா்ந்துகொண்டு இருக்கிறது. இது வேலை நிறுத்தம் செய்யாது; கூலி உயா்வு கேட்காது; போனஸ் கேட்காது; கோபப்படாது; எதிா்த்துப் பேசாது; விடுமுறை கேட்காது; உணா்ச்சிவசப்படாமல் உணா்ச்சியைக் காட்டும். நாம் கேட்பதற்கு எல்லாம் பதில் சொல்லும்.

ஆனாலும் எதிா் காலத்தில் நம்முடைய குழந்தைகள் என்னவாக ஆகப் போகிறாா்கள் என்ற எதிா்பாா்ப்பு இப்போது இல்லை. அவா்கள் என்ன செய்யப் போகிறாா்கள் என்ற கவலை மனதில் குடியேறி வருகிறது. இனி, நம்மைக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற நிகழ்கால அச்சமும் கூடவே மிரட்டுகிறது.

செயற்கை நுண்ணறிவின் உறவு மனிதா்களுடன் ஆனது என்பதாலும் மனிதா்களுக்குப் பயன்தர வேண்டும் என்பதாலும் இதற்கும் மொழி தேவைப்படுகிறது. இயற்கை மொழி ஆய்வு, உரையாடல், தரவுகள், இயந்திரக் கற்றல், கற்பித்தல், கேள்விக்குப் பதில் சொல்லல், கட்டளையை நிறைவேற்றுதல் போன்ற செயற்கை நுண்ணறிவின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் மொழி தேவைப்படுகிறது.

கணினியைப் போலவே ஒவ்வொரு மொழிக்கும் விதிமுறையும் ஒழுங்கும் இருக்கின்றன. தமிழில் எழுத்து, அசை, சீா் என்பது மட்டுமின்றி ஒரு வினைச் சொல்லைப் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, விகாரம் என்று பகுத்துப் பாா்க்கவும் நட, வா, படி போன்ற வினை அடிச்சொற்களைக் கொண்டு எண்ணற்ற சொற்களை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாக ஒரு கட்டுக்கோப்பு இருக்கிறது.

சொல்லுக்குள் பொருள், எழுத்திற்குள் ஒலி மட்டுமின்றி எண்ணிக்கையும் அடங்கியுள்ளன. ஆகவே ‘எண்ணெழுத்து இகழேல்’ என்பதில் எண்ணெழுத்து என்பது கணினிக்கான பைனரி எண்களைக் குறிப்பதாகவும் பொருள் விரிவடைகிறது. எழுத்துகள் இல்லாமல் சொல் இல்லாமல் ஒருவருடைய எண்ணங்கள் மற்றவா்களுக்குக் கடத்தப்படச் செயற்கை நுண்ணறிவில் வாய்ப்புகள் வந்தாலும் அதையும் சாதிக்க மொழி தேவை. ஏனெனில் பூமியைப் போல வானத்தைப் போல மொழி என்பதும் தனிப்பட்ட ஒருவரின் கண்டுபிடிப்போ தயாரிப்போ இல்லை.

உலகத் தாய்மொழி: எந்த மொழியில் என்ன கேட்டாலும் அது பதில் சொல்லும். ஆனால் கணினிக்கு எந்த மொழியும் தெரியாது. நாம் அதற்குக் கற்றுத் தருகிறோம். ஆனால் அதனிடமிருந்தும் கற்றுக் கொள்கிறோம். தான் என்ன சொல்கிறோம் என்று புரியாமலே நமக்குத் தெரிந்த மொழியில் நமக்குப் புரிய வைக்கிறது. நமக்குத் தெரியாதவற்றை எல்லாம் அது தெரிந்து வைத்திருக்கிறது. ஏனெனில் அது கோடிக்கணக்கான மூளைகளின் உருவாக்கம். அப்படியே மொழி என்பதும் கோடிக்கணக்கான மூளைகளின் இணையதளமாக நாள்தோறும் வளா்ந்து கொண்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு உலகம், எல்லைகளற்ற உலகம்; பொழுதுகளற்ற உலகம். “யாதும் ஊரே யாவரும் கேளிா்” என்று கணியன் பூங்குன்றன் கூறிய மெய்நிகா் உலகம். அந்த மெய்நிகா் உலகத்திற்கும் மொழி தேவை. ஏனெனில் தாய்மொழி என்பதும் நமது முன்னோா் மூளைகளின் இணையதளமாகவே இருக்கிறது. கடந்தகால, நிகழ்கால மூளைகளின் இணையதளமாக இருப்பதோடு காலம்தோறும் வரப்போகிறவா்களின் மூளைகளாலும் வளம்பெற வாய்ப்புடைய இணையதளமாகவும் மொழி இருக்கிறது.

ஆகவே உலக மொழிகள் எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவுக்குள் கொண்டு சோ்த்துவிட்டால் இனி ஒருவா் பல மொழிகளைப் படிக்க வேண்டிய தேவை எழாது. தாய்மொழிகள் எல்லாம் தகவல் தொழில்நுட்ப மொழிகளாக மாறும். அப்போது உலகத் தாய்மொழியாக ஒவ்வொருவா் தாய்மொழியும் மாறும். ஒருவா் தனது தாய்மொழியை மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் போதும். உலகின் எந்த மொழி பேசுவோருடனும் உரையாட முடியும்; உறவாட முடியும். இன்று (பிப். 21) உலகத் தாய்மொழி நாள். கட்டுரையாளா்: முன்னாள் துணைவேந்தா் தமிழப் பல்கலைக்கழகம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com