சிறுகக் கட்டி பெருக வாழ்

Representational
Representational

சமீபத்தில் நடந்து முடிந்த நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எந்தவித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 25 புள்ளிகள் அதிகரித்து நிர்ணயிக்கப்பட்ட 6.5 சதவீத வட்டி விகிதம் இதுவரை மாற்றமில்லாமல் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பொருளாதார அறிவிப்பு நம் ஒவ்வொருவரையும் எவ்விதம் பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

"உலகமயமாக்கல்' என்ற பொருளாதாரச் சித்தாந்தம் வேரூன்றிவிட்ட நிலையில், பொருளாதார வளர்ச்சியில் துவண்டு விழுதல், மீண்டு எழுதல் ஆகியவற்றில் உலக நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

கரோனா கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பின்போது ஏற்பட்ட பொருளாதார நலிவுகளிலிருந்து படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கும் உலகப் பொருளாதாரம், சில வேகத் தடைகளைக் கடந்து வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடனுக்கான வட்டி விகிதம், அது போன்ற வேகத் தடைகளில் முக்கியமான ஒன்றாகும். அந்தந்த நாட்டின் மத்திய வங்கிகள், கடன்களுக்காக நிர்ணயிக்கும் வட்டி விகிதங்கள் இதற்கு வழிகாட்டியாக அமைகின்றன.

நம் நாட்டைப் பொருத்தவரை, வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை, வட்டி விகிதப் பாதைக்கான வழிகாட்டியாகக் கருதலாம். வட்டி விகிதம் தனித்து இயங்கும் சாதனம் அல்ல. அதைச் சார்ந்த பல காரணிகளின் இயக்கத்தைக் கொண்டுதான் மாற்றத்தின் நேரம், அளவீடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

தங்கள் நாடுகளில் வட்டி விகித சக்கரத்தைச் சுழற்றுவதற்கு முன்பு, அமெரிக்க மத்திய வங்கியின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும் உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன. அமெரிக்காவின் பொருளாதார அசைவுகளுடன் மற்ற நாடுகளை இணைப்பதில், அதனுடனான வணிகத் தொடர்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

கரோனா காலகட்டத்தில், அமெரிக்க மத்திய வங்கியின் தாராள பணப்புழக்கக் கொள்கையால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை பணப்புழக்க வெள்ளம் மற்ற நாடுகளுக்கும் வழிந்தோடியது. அந்த வெள்ளத்தின் பக்க விளைவுகளில் ஒன்றான பணவீக்கத்தை மற்ற நாடுகளும் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அந்த வீக்கங்கள் முழுவதும் வடியும் வரை பொறுமை காக்க வேண்டிய சூழ்நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவைப் பொருத்தவரை, சமீபகாலங்களில் பணவீக்க வெள்ளம் வெகுவாகக் குறைந்தாலும், அதன் சுவடுகள் முற்றிலும் மறைந்ததாகத் தெரியவில்லை என்று அமெரிக்க ரிசர்வ் வங்கி கருதுவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தை கீழ் நோக்கி மாற்றி அமைக்கத் தயங்குகிறது.

வட்டி விகித உயர்வால், எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தி அளவில் (ஜி.டி.பி.) பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை ஆகிய நிகழ்வுகள் எதிர்மறையாக இயங்குவதும் அமெரிக்காவின் வட்டி விகித மாற்றத்தைத் தள்ளிப்போடும் உத்திக்கு காரணமாகக் கருதப்படுகிறது. சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, பணவீக்கத்தின் அளவு, எதிர்பார்த்த 2.9 சதவீத அளவிலிருந்து மேல்நோக்கி விலகி, 3.1 என்ற அளவீட்டில் மிதக்கிறது.

அதனால்தான், வருகிற மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதல் வட்டி விகிதக் குறைப்பு, அடுத்த காலாண்டுவரை தள்ளிப் போகும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. பணவீக்க அளவை மேலும் குறைப்பதற்கு வட்டி விகிதம் மீண்டும் ஒருமுறை மேல்நோக்கியும் நகர்த்தப்படலாம் என்ற கருத்தும் உலா வருகிறது.

"பணவீக்க வெள்ளம்' முற்றிலும் அடங்கி, நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது என்ற நினைப்பில், அவசரப்பட்டு வட்டி விகிதங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம். வெள்ளம் தாக்கியதற்கான அறிகுறிகள் முற்றிலும் மறையும் வரையில் பொறுத்திருந்து முடிவு எடுப்பதுதான் உலகப் பொருளாதாரத்திற்கு நல்லது' என்ற அறிவுரையை உலக நாடுகளுக்கு சர்வதேச நாணய மையம் (இன்டர்நேஷனல் மானிடரி ஃபண்ட்) வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

வட்டி விகிதக் கொள்கையில் ரிசர்வ் வங்கி தன் பிடியைத் தளர்த்தியதற்கான எந்த அறிகுறியும், சமீபத்திய அறிக்கையில் தென்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், வட்டி விகிதக் குறைப்பு என்ற எதிர்பார்ப்பை ரிசர்வ் வங்கி தற்போதைக்கு பின்னுக்கு தள்ளிவிட்டதாகக் கருதத் தோன்றுகிறது. அதனால்தான், தங்கள் தினசரி தேவைகளுக்கு வங்கிகள் கடன் வாங்கும் "கால்மணி' சந்தையில், வட்டி விகிதம் 6.550 என்ற உயர் அளவில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றபடிதான், வங்கிகளின் கடனுக்கான வட்டி விகிதங்களும் அமையும் என்பது நிதர்சனம்.

பொருளாதார பணவீக்கத்திற்கான அளவீட்டு இலக்கை 4 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்து, அதற்கேற்றபடி பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி சில்லறைப் பணவீக்கம் சுமார் 6.5 சதவீத அளவிலிருந்து 5.1 சதவீத அளவுக்குக் குறைந்திருந்தாலும், அது மேல் நோக்கி நகராது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

செங்கடல் பகுதியில், சர்வதேச வணிகப் போக்குவரத்துக்கு ஏற்பட்டிருக்கும் தடங்கல்களால், "கேப் ஆஃப் குட் ஹோப்' போன்ற மாற்றுத் தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், வணிகப் பொருள்களுக்கான போக்குவரத்து செலவுகள் பல மடங்குகள் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, அன்றாடப் பயன்பாட்டு பொருள்களின் விலை அதிகரித்து, அதுவே பணவீக்க முள்செடி வளர்வதற்கான உரமாகவும் அமையும்.

உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக் குறைவு, நீடிக்கும் புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய நிதி அமைப்பில் ஏற்படும் புதிய அழுத்தங்கள் ஆகிய காரணிகள் பணவீக்கத்தை அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கவல்ல வில்லன்களாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன.

எனவே, பணவீக்க எண்ணுக்குள் மறைந்திருக்கும் அத்தனை காரணிகளும் சாதாரண குடிமகனின் பொருளாதாரத்தை, அவனை அறியாமலேயே பாதிக்கும் சக்தி படைத்தவையாகும். மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பயன்பாட்டு பொருள்களைத் தயாரிக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் வங்கிக் கடன் மூலமாகத்தான் தங்கள் மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

கடனுக்கான வட்டி உயர் நிலையில் இருந்தால் உற்பத்திச் செலவு அதிகமாகும். உற்பத்திச் செலவு அனைத்தும் உற்பத்தியாகும் பயன்பாட்டுப் பொருள்களின் விலைக்குள்தான் திணிக்கப்படுகின்றன. மூலப்பொருள்களின் வரத்து பற்றாக்குறை மற்றும் கடனுக்கான அதிக வட்டி ஆகியவைதான் அன்றாட பயன்பாட்டுப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணிகளாக அமைகின்றன.

இந்தக் காரணிகளால், தொழில் நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய, அவற்றின் கடந்த மூன்றாவது காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஆராய்ந்தால், அதற்கான விடை கிடைக்கும்.

"எகனாமிக் டைம்ஸி'ன் மாதிரி சர்வேயில் இடம் பெற்ற 254 பெரும் உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் 28.4 சதவீதம் மற்றும் லாபம் 17 சதவீதம் அதிகரித்தும் உள்ளது. எனவே, வணிகக் கடன்களுக்கான அதிக வட்டி விகிதம் போன்ற சுமைகளை, பயன்பாட்டுப் பொருள்களின் விலையை உயர்த்துவதன் மூலம், நுகர்வோர் முதுகில் உற்பத்தி நிறுவனங்கள் மடைமாற்றம் செய்கின்றன என்ற உண்மை இதன்மூலம் தெளிவாகிறது.

வட்டிக் கொள்கையின் மீதான ரிசர்வ் வங்கியின் பிடி தளரும்வரை, இதுபோன்ற நிலையே நீடிக்கும் வாய்ப்புள்ளது. தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழ்நிலையை உற்று நோக்கினால், வட்டி விகிதக் குறைப்பு என்பது குறுகிய காலத்தில் நிகழாது என்பது போலத்தான் தோன்றுகிறது. அதிக வட்டி விகித சூழ்நிலையோடு இணைந்து, நாம் மேலும் சிறிது காலம் வாழப் பழகிக் கொள்ளவேண்டும்.

இதற்கிடையே, சமீப காலங்களில் கடன் அட்டைகள் (கிரெடிட் கார்ட்) மற்றும் தனிநபர் கடன்கள் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது கவனிக்கத் தக்கதாகும். பிணையற்ற, இது போன்ற கடன்கள் மிக அதிக வட்டி விகிதத்தோடு வழங்கப்படுகின்றன. இந்த வளர்ச்சிக்குள் ஒளிந்திருக்கும் அபாயங்களைக் கணக்கில் எடுத்து, வங்கிகள் வழங்கும் அது போன்ற கடன்களுக்கான மூலதனத் தேவையை அதிகரிக்கும் அறிவிப்பை ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது.

இதை வங்கிகளுக்கு மட்டும் உரித்தான அபாயச் சங்காக கருதக் கூடாது. அபரிமிதமான வட்டியை சுமக்கும் கடன்கள் மூலம், தங்கள் பொருளாதார வலிமைக்கு அப்பாற்பட்ட வசதிகளைத் தேட நினைப்பவர்களும் இந்த அறிவிப்பை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ளலாம். செலவு

களை ஈடுகட்ட, கடன் வாங்கும் மனப்போக்கை விடுத்து, வருமானத்துக்குள் சிறிதளவாவது சேமித்து, செலவுக் கணக்கை நிர்வகிப்பதுதான் தற்போதைய சூழலில் புத்திசாலித்தனமாகும்.

தற்போதைய அதிக வட்டியில் மிதக்கும் வீட்டுக் கடன் போன்ற கடன்களுக்குள் நுழைவதற்கு, வட்டி விகிதம் குறைக்கப்படும்வரை பொறுமை காக்கலாம்.

"சிறுகக் கட்டி பெருக வாழ்' என்ற ஆன்றோர் வாக்கை இந்தக் காலகட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கட்டுரையாளர்:

வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com