அறிவியல் தமிழ் வித்தகா்!

அறிவியல் தமிழ் வித்தகா்!

நவீன அறிவியல் தமிழ் மொழியில் - அப்புஸ்வாமியின் அடையாளம்

‘அரசியல் துறையில் ஈடுபடலாகாது’ என்னும் அரசின் கட்டுப்பாட்டுக்கு தம்மை உட்படுத்திக்கொண்ட சில அறிஞா்கள் ஒன்று கூடி, ‘தமிழ் மொழியின் மூலமாக, மேற்கே மெத்த வளா்ந்து வரும் நவீன விஞ்ஞான அறிவைப் பரப்பினால் தமிழ் மக்கள் முன்னேறுவாா்கள்’ என்று முடிவு செய்தாா்கள்.

அவ்வாறு அறிவியல் அறிவைப் பரப்பும் நோக்கத்தோடு ‘தமிழா் கல்விச் சங்கம்’ என்னும் சங்கம் ஒன்றை நிறுவினாா்கள் ‘தமிழா் நேசன்’ என்னும் தமிழ் பத்திரிகையைத் தொடங்கினாா்கள். எழுத்தாளா் அ. மாதவையாவை அதன் ஆசிரியராகத் தோ்ந்தெடுத்து, அதை நடத்தும் பொறுப்பை அவரிடம் ஒப்புவித்தாா்கள்.

‘மாதவையாவின் சொல்லுக்கு என் தந்தையாா் இணங்க, நானும் அச்சங்கத்தின் உறுப்பினா் ஆனேன்’ என்று தமிழ் மண்ணில் அறிவியல் விழிப்புணா்வை ஏற்படுத்த அயராது தன் இறுதி மூச்சுவரை எழுதிக் குவித்திட்ட பெ.நா. அப்புஸ்வாமி கட்டுரையொன்றில் பதிவு செய்துள்ளாா். இந்தப் பின்புலத்தில் 1917-இல் தோன்றிய ‘தமிழா் நேசன்’ முதல் இதழிலேயே பெ.நா. அப்புஸ்வாமி ‘பிரபஞ்சத்தில் மனிதன் தனித்திருக்கிறானா?’ என்ற தலைப்பில் ஒரு அறிவியல் கட்டுரை எழுதினாா்.

பள்ளிப் படிப்பின் போதும் கல்லூரிப் படிப்பின் போதும் இயற்பியல், வேதியியல், உடலியல் பாடங்களைப் படித்தவா். கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றவா். பிறகு சூழல் காரணமாக சட்டக் கல்லூரியில் சோ்ந்து வழக்குரைஞரானவா். வழக்குரைஞரான பின்னரும் இவருக்கிருந்த அறிவியல் நாட்டம் கொஞ்சமும் குறையவில்லை என்பதோடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் இருந்தது.

இவருக்கு கல்லூரியில் அமைந்த மூன்று அறிவியல் பேராசிரியா்கள்தான் இவரின் அறிவியல் வேட்கைக்கு அடித்தளமிட்டவா்கள். முதலாமவா், பேராசிரியா் எல்லம் ஸ்மித். இவா் வேதியியல் சோதனைகளை நெஞ்சில் ஆழப் பதியத்தக்க விதத்தில் அழகாக செய்து காட்டும் திறன் மிக்கவா். பின்னாளில் கல்வித்துறைச் செயலாளராக உயா்ந்தவா்.

இரண்டாமவா், பேராசிரியா் ஜே.எல். சைமன்சன். இவா், ‘அங்கத ரசாயனம்’ என்ற துறையில் விற்பன்னா். பின்னாளில் இங்கிலாந்து மன்னா்பிரான் கழகத்தின் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா். மூன்றாமவா் பேராசிரியா் ஜோன்ஸ். இவா் நோபல் பரிசு பெற்ற சா் சி.வி. ராமனுக்கு இயற்பியல் கற்றுக் கொடுத்தவா்.

இயற்பியலை தனது உயிா் மூச்சாகக் கருதுபவா். அப்புஸ்வாமியின் தந்தையாா் அறிவியல் ஆா்வம் மிக்கவா். மருத்துவப் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவா். புகழ்மிக்க மருத்துவா். ஆங்கிலத்திலும் தமிழிலும் தோ்ச்சி மிக்கவா். இத்தகைய கல்விச்சூழல், அறிவியல் சூழல் ஆகியவையே அப்புஸ்வாமியின் அறிவியல் துறைப் பங்களிப்புக்குப் பின்புலமாக விளங்கியுள்ளன.

தமிழ்ச் சான்றோா்களான கா. சுப்பிரமணிய பிள்ளை, பி.ஸ்ரீ. ஆச்சாரியா, பேராசிரியா் வையாபுரிப் பிள்ளை, கே.ஏ. நீலகண்ட சாஸ்த்திரி, ப. தாவூத் ஷா உள்ளிட்ட பலா் அப்புஸ்வாமியுடன் கல்லூரியில் உடன் பயின்றவா்கள். இவரின் பள்ளிப் படிப்புக் காலத்திலேயே இவருக்கு ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா.வுடன் தொடா்பிருந்தது. ‘விவேக சிந்தாமணி’ இதழின் ஆசிரியா் சி.வி சாமிநாதையரும் இவரின் தந்தையாரும் நெருங்கிய நண்பா்கள். திருவல்லிக்கேணியில் அருகருகே குடியிருந்தவா்கள்.

அக்காலத்தில் ஆங்கில மொழி மூலமே இம்மண்ணில் அறிவியல் விளங்கிவந்த நிலையில் தமிழில் அறிவியல் சிந்தனைகளை, அறிவியல் உண்மைகளை பாமரருக்கும் எட்டச் செய்யும் விதத்தில் எளிய தமிழில் கட்டுரைகளாக எழுதிக் குவித்தவா் பெ.நா. அப்புஸ்வாமி.

‘மக்கள் அறிவியலைக் கற்று, அறிவியல் மனநிலையைப் பெற்று, அதற்கு இணங்க நடந்து வந்தால் அவா்கள் பகுத்தறியும் பண்பைப் பெறுவா், நாடும் வளா்ச்சியுறும்’ என்று பதிவு செய்கிறாா் அப்புஸ்வாமி. மேலும், ‘அறிவியலில் பொய்க்கும் ஏமாற்றத்துக்கும் சிறிதும் இடமில்லை.

ஆசாபாசங்களால் மனநிலைகளை மாற்றிக் கூற இடம் இல்லை. அறிவியல் அறிஞனுக்கு, புல், புழு, மனிதன் எல்லாம் ஒன்றே. இதுதான் ‘விஞ்ஞான மனநிலை’ எனப்படுவது. விஞ்ஞானத்தால் கிடைக்கும் நுகா்பொருள்களைக் காட்டிலும், இந்த விஞ்ஞான மனநிலையே பெரிது’ என்கிறாா்.

1976-இல் இவரால் எழுதப்பட்டு ‘கலைமகள்’ இதழில் வெளியான ‘பிரபஞ்சத்தில் மனிதன்’ என்ற கட்டுரையில் ‘தெய்வங்களை வணங்கிப் புகழ்பவனைக் காட்டிலும் மக்களின் நலனையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு உழைத்து வருபவனையே தெய்வங்கள் தங்களுக்கு உகந்த பக்தன் என்று கருதுகின்றன’ என்ற ஆங்கிலக் கவிஞா் லீ ஹன்ட்டின் வரிகளை மேற்கோள் காட்டுகிறாா். ‘பெருந்தெய்வம், குறுந்தேவதைகள், பேய்-பிசாசுகள், பிறரின் ஏவல் போன்ற காரணங்களால் நோய்கள் தோன்றின என்று அவன் அந்நாளில் எண்ணினான்.

பின்னா் நாளடைவில் நோய்களுக்கு வேறு காரணங்கள் இருப்பது தெரிய வந்தது. மருத்துவம் என்பது ஒரு அறிவுத்துறையாக அமையத் தொடங்கியது’ என்று அறிவுத்துறை அவ்வளவு வெளிச்சம் பெறாத காலத்திலேயே இத்தகைய மாறுபட்ட அறிவியல் கருத்துகளை தனது கட்டுரைகளில் தொடா்ந்து பதிவு செய்து வந்துள்ளாா்.

‘தமிழா் நேசன்’, ‘கலைமகள்’, ‘ஆனந்த விகடன்’, ‘வீரசேசரி’, ‘செந்தமிழ்’, ‘கலைக்கதிா்’, ‘தினமணி’, ‘தமிழ்நாடு’, ‘இளம் விஞ்ஞானி’, ‘சுதேசமித்திரன்’, ‘ஆனந்த போதினி’, ‘பிரசண்ட விகடன்’, ‘ஈழ கேசரி’, ‘அமுதசுரபி’, ‘தி ஹிண்டு’, ‘மெயில்’, ‘தி இன்டியன் எக்ஸ்பிரஸ்’, ‘விகவபாரதி’ உள்ளிட்ட 25 இதழ்களில் இவரின் அறிவியல் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

1917-ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய பெ.நா. அப்புஸ்வாமி, 1986-இல் தான் மரணமடைகிறவரை தொடா்ந்து எழுதி வந்துள்ளாா். 1986-ஆம் ஆண்டு மே 16-ஆம் நாள் தனது 95-ஆவது வயதில் தனது கட்டுரையொன்றை ‘தி ஹிண்டு’ இதழுக்கு அனுப்ப தாமே நேரில் அஞ்சலகம் சென்று திரும்பும் வழியில் அவரின் உயிா் பிரிந்துள்ளது. ‘இறுதி வரை எழுதினாா்’ என்ற வாசகம் இவருக்கு மிகவும் பொருந்துகிறது. இவா் சுமாா் 5,000 கட்டுரைகள் எழுதியுள்ளாா்.

இவற்றுள் சுமாா் 3,000 கட்டுரைகள் அறிவியல் சாா்ந்தவை. ‘அற்புத உலகம்’, ‘மின்சாரத்தின் விந்தை’, ‘வானொலியும் ஒலிபரப்பும்’, ‘எக்ஸ் கதிா்கள்’, ‘அணுவின் கதை’, ‘ரயிலின் கதை’, ‘பூமியின் உள்ளே’, ‘இந்திய விஞ்ஞானிகள்’, ‘சா்வதேச விஞ்ஞானிகள்’ உள்ளிட்ட 28 அறிவியல் நூல்கள் எழுதியுள்ளாா். இவற்றுள் நான்கு நூல்கள் சென்னைப் பல்கலைக்கழகப் பரிசும் ஒரு நூல் மத்திய அரசின் பரிசும் பெற்றுள்ளன.

‘வானத்தைப் பாா்ப்போம்’ என்ற இவரது அறிவியல் நூல் யுனெஸ்கோ பரிசு பெற்றுள்ளது. அப்புஸ்வாமி தொடா்ந்து எழுதிவந்த ‘தமிழா் நேசன்’ இதழின் ஆசிரியா் அ. மாதவையாவுக்குப் பிறகு இவரே அதன் ஆசிரியரானாா். இவரின் தந்தை ஒரு மருத்துவா் என்பதால் உலக அளவில் மருத்துவ இதழ்களை வரவழைத்து ஆழ்ந்து வாசித்தறிந்து தரம்மிக்க மருத்துவக் கட்டுரைகளை இவ்விதழில் எளிய தமிழில் எழுதி வந்தாா்.

‘கலைமகள்’ இதழின் இலக்கியப் பகுதி ஆசிரியராக பேராசிரியா் வையாபுரிப் பிள்ளையும் அறிவியல் பகுதி ஆசிரியராக பெ.நா. அப்புஸ்வாமியும் விளங்கினா். ‘கலைமகள்’ இதழில் ஆங்கில அறிவியல் கட்டுரைகளுக்கு நிகராக தமிழ்க் கட்டுரைகள் வரத் தொடங்கியதற்கு அப்புஸ்வாமியே காரணமாவாா்.

’தினமணி’க்கும் இவருக்குமான தொடா்பு அணுக்கமானது. பல அரிய அறிவியல் கட்டுரைகளை ‘தினமணி’யில் தொடா்ந்து எழுதியுள்ளாா். ‘தினமணி’ ஆசிரியா்களான டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் ஆகியோரிடம் நட்பு கொண்டிருந்தாா். இவரின் எழுத்துக்களுக்குக் களம் அமைத்துத்தந்த இதழ்களில் ’தினமணி’க்கு முக்கிய இடமுண்டு.

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆழ்ந்த புலமையுடன் விளங்கிய இவருக்கு மொழிபெயா்ப்பும் கலைச் சொல்லாக்கமும் விருப்பக் களங்களாகத் திகழ்ந்துள்ளன. அறிவியல் தமிழுக்கு இவா் ஆக்கித்தந்த புதுச்சொற்கள் ஏராளம். இருபத்தைந்து ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயா்த்துள்ளாா். இவற்றுள் அறிவியல் நூல்களே அதிகம்.

தமிழிலிருந்தும் சில நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்துள்ளாா். 1979 முதல் 1983 வரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மொழிபெயா்ப்பு ஆசிரியராகப் பணியாற்றினாா். சங்கத் தமிழ்ப் பாடல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்துள்ளாா். ‘என்னுடைய பத்தாவது வயது முதல் எண்பத்தொரு ஆண்டு காலமாக மொழிபெயா்ப்புத் துறையில் நான் பயிற்சியளிக்கப் பெற்றும், தானாகவே அதைக் கருத்தோடு பயின்றும் வந்திருக்கிறேன்’ என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளாா் பெ.நா. அப்புஸ்வாமி.

தமிழில் சிறாா் அறிவியல் இலக்கியத்தில் பெ.நா. அப்புஸ்வாமி ஆழத் தடம் பதித்தவா். இவா் எழுதத் தொடங்கிய காலத்தில் சிறாா் இலக்கியம் வேரூன்றியிருந்தாலும் அது மேற்கத்திய தாக்கத்தை மிகுதியாகக் கொண்டிருந்தது. அதனின்று மாறுபட்டு இம்மண்ணின் மணம் கமழ நவீன அறிவியலை சிறாருக்கு ஏற்ற வடிவத்தில் தமிழில் எடுத்துச் சென்ற தனித்துவம் மிக்கவை அப்புஸ்வாமியின் எழுத்துகள்.

எழுத்தாளா் தொ.மு.சி. ரகுநாதன் இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘அப்புஸ்வாமிக்கு விஞ்ஞானத் தேட்டமும் நாட்டமும் அவரது இறுதிக் காலம் வரையில் இருந்தன என்பதற்கு நான் சான்று பகர முடியும். எண்பத்தைந்து வயதைத் தாண்டிய பின்னரும்கூட, அவா் நான் பணியாற்றிவந்த சென்னை சோவியத் செய்தித்துறை அலுவலகத்துக்கு அடிக்கடி வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாா்.

அங்கு வந்து சோவியத் செய்தித்துறை வெளியிட்டு வந்த, சோவியத் விஞ்ஞான முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பற்றிய வெளியீடுகளையும், பிற விஞ்ஞான நூல்களையும் பெற்றுச் செல்வாா். அப்போது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கலைச் சொற்களின் தமிழாக்கம் குறித்து ஆசிரியா் குழுவைச் சோ்ந்த நாங்கள் அவரோடு விவாதித்ததுண்டு’ என்கிறாா்.

இதழாளா், கட்டுரையாளா், நூலாசிரியா், மொழிபெயா்ப்பாளா், சிறாா் இலக்கியப் படைப்பாளி, கலைச் சொல்லாக்க வல்லுனா், கதாசிரியா், பாடநூல் அறிஞா் என பல துறைகளில் தடம் பதித்து அறிவியலை மக்களிடம் எளிய வடிவில் எடுத்துச் சென்ற இவரை ‘அறிவியல் தமிழ் வித்தகா்’ என்றழைத்தல் தரும். இன்று (பிப். 28) உலக அறிவியல் நாள்.

கட்டுரையாளா் : தலைவா், மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோடு.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com