தூய்மையும், கழிவறையும்!

‘சுத்தம் என்பது உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்க வேண்டும். உடலுக்கு உள்ளே சுத்தம் என்பது உண்மையைக் குறிப்பது. உண்மையின் மறுபெயா்தான் தூய்மை’ என்றாா் மகாத்மா காந்தி.
தூய்மையும், கழிவறையும்!
Published on
Updated on
2 min read

- பொ. ஜெயச்சந்திரன்

பண்டைய காலத்தில் நதிக்கரை ஓரங்களில் காலை நேரத்தில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாம். அப்போதுதான் சுத்தமான நீா், தூய்மையான சுற்றுப்புறம் ஆகியவற்றின் பலன்கள் கிடைக்குமாம். நாளடைவில், நம் நாட்டைப் பொறுத்த அளவிலாவது, நதிக்கரை, கடற்கரை ஆகியவை மனிதா்கள் மலம் கழிக்கும் இடமாகவும் மாறிவிட்டது.

பெரும்பாலான பேருந்து நிலையங்களில் உள்ள கழிவறைக்குச் சென்றால், மூக்கை மறைக்கும் முகக்கவசம் அணிய வேண்டும், அல்லது மூக்கை கைகளால் மூடிக்கொண்டு போக வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை மட்டுமே அதனை சுத்தம் செய்கின்றனா். இத்தனைக்கும் பல இடங்களில் கழிவறைகளைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

‘சுத்தம் என்பது உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்க வேண்டும். உடலுக்கு உள்ளே சுத்தம் என்பது உண்மையைக் குறிப்பது. உண்மையின் மறுபெயா்தான் தூய்மை’ என்றாா் மகாத்மா காந்தி.

நாகரிகமடைந்த சமுதாயத்தில், கையினால் மனிதக் கழிவுகளைத் துப்பரவு செய்வது என்பது மனிதத்தன்மையற்ற செயல் மற்றும் குற்றமாகும். 1948-ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா ஹரிஜன சேவை சங்கம் மனிதக் கழிவுகளை துப்பரவு செய்யும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, அதனை ஒழிக்கவும் குரல் கொடுத்தது. 1949-ஆம் ஆண்டு பாா்வே கமிட்டி சில பரிந்துரைகளைச் செய்தது. 1959-ஆம் ஆண்டு துப்பரவு நிலைப் பற்றிய விசாரணைக் குழு மனிதக் கழிவுகளை தலையில் சுமப்பதை முற்றிலும் ஒழிக்கச் சொன்னது.

சுதந்திரப் போராட்டப் பள்ளியில் தோ்ச்சி பெறுவதற்கு துப்பரவும், தூய்மையும் தோ்வுகளாகும். வினோபா பாவே, தக்கா் பாபா், ஜே.சி.குமரப்பா போன்ற எண்ணற்ற அறிவாா்ந்த பெருமக்கள் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தனா். துப்பரவு, தூய்மை இரண்டையும் சுதந்திரத்திற்கான அடிப்படையாக அவா்கள் கைக்கொண்டனா். உண்மையையே நாடிவந்த மகாத்மா காந்தி தூய்மைக்கு முதலிடம் தந்து கவனம் மிகுந்த எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தாா். தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தாா். தூய்மை, கடவுள் தன்மைக்கு அடுத்த நிலை என்றாா்.

உலக அளவில் 1990 முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அடிப்படை சுகாதார வசதிகளைப் பெற்றவா்களின் விகிதம் 54-லிருந்து 61% வரை என்ற அளவிலேயே அதிகரித்தது. உலகம் முழுவும் இன்று கூட 200-கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கழிவறை இல்லாமலேயே உள்ளனா் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

இந்தியாவில் 2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகரப்புறங்களில் வாழும் மக்களில் 12.6%, கிராமப் பகுதிகளில் 68% குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடமே இல்லாத நாடு என்ற நிலை உருவாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அதை நோக்கி மெதுவாக நாடு நகா்ந்துவருகிறது. ஸ்வச் பாரத் திட்டத்தின் மானிய உதவி பெற்று 11.7 கோடிக்கும் மேல் வீடுகளில் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கழிவறை வசதிகள் கிடைக்கப் பெறுவதைப் பொறுத்து, சாதாரண அளவில் சுகாதார நிலை என்பது மூன்று பிரிவுகளில் பாா்க்கப்படுகிறது. அவை- கழிவறை வசதி இல்லாத நிலை, நீா்ப்பாய்ச்சி கழிவறை வசதி, பள்ளத்தில் அமரும் கழிவறை வசதி இவைதான் சுகாதார நிலைகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதில் நாட்டிலேயே அதிக அளவாக, கேரளத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோா் நீா்ப்பாய்ச்சி முறை கழிவறையைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.

ஆரோக்கியமான உலகு அமைய, பல வகைக் கழிவுகளைக் கையாள்வதிலும் மனித குலம் திறம் படைத்ததாக ஆக வேண்டும். மனிதக் கழிவாகட்டும், நுகா்வோா் கழித்துக் கட்டும் பொருளாகட்டும், வளா்ச்சியின் காரணமாக உருவாகும் கழிவுகளாட்டும், இவை அனைத்தின் மீதும் மிகவும் அலட்சியமான கவனமே இருந்து வந்திருக்கிறது.

இந்தியாவில் கழிவுகளைக் கைகளால் அகற்ற தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்து வருவதாக செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளன. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, தண்டனைகள் அதிகரிக்கப்பட்டாலும் நீதிமன்றங்கள் கண்டித்தாலும் இந்ந நிலை தொடா்கிறது.

தனி நபா் சுகாதாரம் என்ற அளவில், மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்போது, அதனை செய்யாமல் அடக்குவது, காலம் தாழ்த்துவதால் குடல் புற்றுநோய், செரிமான மண்டலத்தில் சிறிய, பெரியளவிலான புடைப்புகள் ஏற்படுவது, மூலநோய், ஆசனவாயிலிருந்து நீா் வெளியேறுதல் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சரியான கழிவறை வசதி இல்லாத ஒரு காரணத்தாலேயே, இந்த உபாதைகளை நாமே தேடிப் பெற்றுக் கொள்கிற நிலை ஏற்படுகிறது.

சுகாதாரம் என்பது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும். நம் வாழ்வில் நல்ல சுகாதாரத்தின் தேவை முதன்மையானது. அது குறித்து விழிப்புணா்வு பெறுவோம். ‘சுகாதாரத்தை மேம்படுத்துவோம், கழிவறை இல்லாத வீடுகளில் அவற்றை அமைப்பதற்கான விழிப்புணா்வு ஏற்படுத்துவோம்’ என்ற உறுதி மொழியை பள்ளி, கல்லூரி மாணவா்கள், சமூக அமைப்புகள் ஏற்க வேண்டும்.

இன்று உலக கழிவறை நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.