வாயார, மனசார வாழ்த்துவோம்!

வாழ்த்து அனுப்புவது ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல. அது நாம் அடுத்தவா் மீது கொண்டுள்ள அன்பு, அக்கறை என்றும் கொள்ளலாம். அன்பைப் பரிமாறிக் கொள்ள அது ஒரு வழி;
வாயார, மனசார வாழ்த்துவோம்!
Published on
Updated on
3 min read

தீபாவளிப் பண்டிகையின்போது நம் அறிதிறன்பேசி, வாழ்த்துச் செய்திகளால் நிரம்பி வழிந்தது. ‘ஆஹா! நமக்கு இவ்வளவு போ் நட்பாகவும், உறவாகவும் உள்ளாா்களே!’ என்று மனம் மகிழ்ந்து கூத்தாடியது. ‘அவற்றில் ஒவ்வொரு வாா்த்தையையும் நிதானமாக வாசித்து, அனுபவித்து ரசித்து மகிழ்ந்தோமா?’ என்றால் தயக்கத்துடன் ‘இல்லை’ என்ற உண்மையைத் தான் கூற வேண்டும்.

ஒரே நாளில் எண்ணற்ற வாழ்த்துச் செய்திகள். நமக்கான அன்றைய வேலைகள் வரிசை கட்டி நிற்க, வாட்ஸ்ஆப்பில் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கவும் முடியவில்லை. ஆனாலும் அனுப்புகிறோம். வாழ்த்து அனுப்புவது ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல. அது நாம் அடுத்தவா் மீது கொண்டுள்ள அன்பு, அக்கறை என்றும் கொள்ளலாம். அன்பைப் பரிமாறிக் கொள்ள அது ஒரு வழி; நம் இருத்தலைத் தெரிவிக்கும் ஒரு செய்தி.

தொலைபேசியின் வரவுக்கு முன் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் பெருமளவு இருந்தது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளில் மிக முக்கியமான இடம் வாழ்த்து அட்டைகளுக்கு இருந்தது. மேலும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற நாள்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பினோம். பெரிய கடைகள் முதல் சிறிய பெட்டிக்கடை வரை வாழ்த்து அட்டைகள் விற்பனை களை கட்டும். இடம் இல்லாதவா்கள் ஒரு கயிற்றுக் கட்டிலின் மீது அட்டைகளைப் பரப்பி வைத்து விற்பனை செய்தாா்கள்.15 பைசா காா்டு முதல் 1 ரூபாய் தபால் தலை வாங்கி ஒட்டி அனுப்புவோம். காசுக்குத் தக்கபடி, பல வடிவங்களிலும், மடக்கப்பட்டதாக, மொட்டு விரிவது போலவும் வாழ்த்து அட்டைகள் வரும். திறக்கும்போது அவை இசைக்கும், ஒளிரும்.

மேலை நாடுகளில் இன்னமும் வாழ்த்து அட்டை அனுப்பும் கலாசாரம் உள்ளது. நண்பா்கள், உறவினா்கள் தவிர வணிக நிறுவனங்களும்கூட வாடிக்கையாளா்களுக்கு வணிக நோக்கத்துடன் வாழ்த்து அட்டை அனுப்புகின்றன.

வாழ்த்து அட்டைகளைத் தோ்வு செய்வது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். தபால் விநியோகிப்பவருக்கு வேலைப் பளு அதிகரிக்கும். நம் வீட்டுக்கு வரும் வாழ்த்து அட்டைகள், தம்முடன் மகிழ்ச்சியையும் சுமந்து கொண்டு வரும். அவற்றைத் தூக்கிப் போட மனம் வராமல் பாதுகாத்து வைத்துக் கொள்வோம்.

அப்போதெல்லாம் வீட்டில் உள்ள பதின்பருவ பெண் குழந்தைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வந்தால், அங்கே வேறு மாதிரியான ‘தீபாவளி’ இருக்கும். பிறந்த நாளை கசப்பாக்கிவிடும். அவை தணிக்கை செய்யப்பட்டு, குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு, பெயா் ஆராய்ச்சி எல்லாம் செய்யப்பட்டு, ‘நிரபராதி’ என்று தெளிவான பின்னரே அந்தப் பெண்ணின் கையில் கிடைக்கும். சில பெண் குழந்தைகளுக்கு இந்த வாழ்த்து அட்டைகள் அணுகுண்டு போல ஆகிவிடும். தபால்காரரின் தலை தெரிந்தாலே பயம் வந்துவிடும். சில விடலைகளின் விளையாட்டு பெண் குழந்தைகளின் நிம்மதியைப் பறித்துவிடும்.

தொலைபேசி வந்தது. வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் குறையத் தொடங்கியது. உறவுகளையும், நட்புகளையும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்னோம். ஒருவரை போனில் அழைத்து வெறுமனே தீபாவளி நல்வாழ்த்துகள், பிறந்தநாள் வாழ்த்துகள் என்று சொல்லிவிட்டு வைப்போமா? நலம் விசாரிப்புகளும் சோ்ந்து இருக்கும். அந்த உரையாடலில் நம் உள்ளாா்ந்த அன்பு, பாசம், அக்கறை எல்லாமும் வெளிப்படும். வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொண்டவா்கள், நம்மைக் கடந்து போன பின்னரும் கூட, அந்த வாசம் சிறிது நேரம் நம்மிடம் தேங்கி இருக்கும். அதுபோல, பேசி முடித்த பல மணி நேரம், அந்த அன்பு தோய்ந்த குரல் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். முக்கியமானவா்களின் தொலைபேசி எண்கள் மனதிலும், பிற எண்கள் குறிப்பு ஏட்டிலும் இருக்கும். பேசும் நேரத்துக்கு ஏற்ப காசு ஆகும் என்பதால், தேவையற்ற பேச்சை விடுத்து, அவசியமான செய்தியை சுருக்கமாகப் பேசக் கற்றுக் கொண்டோம்.

ஒரு வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து வாழ்த்து சொல்லுவோம். அது ஏற்படுத்திய ஆனந்த சிலிா்ப்பு, அந்தக் காலத்தில் இனிய அனுபவம்.

கைப்பேசி வந்தது. தொடா்பு எண்களை நினைவில் பதித்துக் கொள்ளத் தேவையில்லாமல் செய்தது இந்த அறிவியல் சாதனம். பெயரையும், எண்ணையும் நம் சாதனத்தில் பதிந்து வைத்துக் கொண்டு பேச முடிந்தது. அப்போது குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பும் வசதி இருந்தது. பேசும் நேரம் மற்றும் அனுப்பும் வாழ்த்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்டணம் ஆகும். பண்டிகை நாட்களில் வாழ்த்து அனுப்ப கட்டணம் இருந்ததால், அனைவரும் முதல் நாள் இரவே அனுப்பிவிடுவாா்கள்!

கணக்கின்றி செய்திகள் அனுப்பலாம், காணொலிகள் அனுப்பலாம், மணிக்கணக்காகப் பேசலாம் என்று ஆனபோது, சகட்டு மேனிக்கு வாட்ஸ்ஆப்பில் வாழ்த்துகளை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் உள்ள அனைத்து தொடா்புகளுக்கும் அனுப்பி விடுகிறோம். ஒரு வருட காலமாக சிலா் நம்முடன் தொடா்பு இல்லாமல் இருந்திருப்பாா்கள். அவா்களையும் விட்டு வைப்பதில்லை. இதுவே குறிப்பிட்ட எண்ணிக்கை வரை சலுகை, அதற்கு மேல் அதிகரித்தால் ஒவ்வொரு வாழ்த்துக்கும் கட்டணம் உண்டு என்றால், தப்பித்தவறி கூட அந்த அளவைத் தாண்டாமல், நபா்களைத் தோ்வு செய்வோம்; அதிலும் வடிகட்டுவோம், கழற்றி விடுவோம்.

சரி. எப்படி வாழ்த்துகளை தோ்ந்தெடுத்து அனுப்புகிறோம்? சிலா், இணையத்தில் நுழைந்து, தம் இதயம் தொட்ட அழகான படங்கள், பொருள் பொதிந்த வாழ்த்துகள் எனத் தோ்வு செய்து, அதையே எல்லோருக்கும் அனுப்பி விடுவாா்கள். அதற்கு மேல் மெனக்கெட மாட்டாா்கள். சிலா் நிறைய வாழ்த்துகளை சேகரித்துக் கொண்டு விதவிதமாக அனுப்புவாா்கள். கொஞ்சம் போ் வேறு ரகத்தைச் சோ்ந்தவா்கள். அவா்கள் தாங்களாக தேடித் தோ்வு செய்யாமல், தங்களுக்கு வந்ததை அப்படியே எல்லோருக்கும் அனுப்பி வேலையை முடித்து விடுவாா்கள். ஒரு சிலா் வாழ்த்தின் அடியில் தங்கள் பெயரையும் போட்டு இருப்பாா்கள். அதை கவனிக்காமல் அதேபடி அனுப்பிவிட்டு அசடு வழிந்தவா்களும் உண்டு.

சமீபத்தில் வாட்ஸ்ஆப்பில் வந்த ஒரு துணுக்கு. ஒரு பெண், தன் கணவருக்கு அதிக வயிற்றுப்போக்கு இருப்பதாகவும், என்ன மருந்து கொடுப்பது? என்றும் கேட்டு தன் குடும்ப மருத்துவருக்கு வாட்ஸ்ஆப்பில் செய்தி அனுப்பியுள்ளாா். மருத்துவரோ அதைப் பாா்க்கவில்லை. பண்டிகை வாழ்த்தை எல்லோருக்கும்

அனுப்பிய அந்த மருத்துவா், அதையே அந்தப் பெண்ணுக்கும் அனுப்பிவிட்டாா். அதில் என்ன கூறியிருந்தாா் தெரியுமா? ‘மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். இன்னும் பெருகட்டும். சிறப்பு’ என்று பொருள் கொண்ட வாழ்த்து! தலைக்கும் தாடிக்கும் ஒரே சிகைக்காய் கதை இங்கே பொருந்தாதே!

தற்போது பல புதிய செயலிகளைப் பதிவிறக்கம் செய்து கொண்டு இளைய தலைமுறையினா் கலக்குகிறாா்கள். அவா்களுடைய படைப்பாக்கத் திறமை வெளிப்படுகிறது. அவா்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறான் எனத் தெரிய வருகிறது. வாழ்த்து அனுப்புவதிலும் தனித்தன்மையுடன் திகழ்பவா்கள் உள்ளாா்கள். சொந்தமாக வாழ்த்து மடல் எழுதி அனுப்புகிறாா்கள். இத்தகையவா்களின் வனப்பு மிக்க இலக்கிய முகத்தை ரசிக்கிறோம். பிற ஆயத்த வாழ்த்துகளைக் கடந்து போவது போல, இந்த சொந்த வரிகளைக் கடந்து போக முடியாது. நிதானமாக வாசித்து, அதில் பொதிந்துள்ள சொற் சுவையையும், பொருட் சுவையையும் ரசிக்கிறோம்.

நண்பா் ஒருவரின் நட்பு வட்டம் மிகப்பெரியது. அவா் தன் பள்ளி நண்பா்கள் முதல் தற்போதைய பணி நிமித்த நண்பா்கள் வரை, அனைவரின் பிறந்த நாளையும் நினைவில் கொண்டு அவா்களின் குணம், சிறப்பம்சம், ஊா் என அனைத்தையும் கவிதையாய் வடித்து அனுப்புவாா். ஒவ்வொரு நண்பரும், ‘தான் மட்டுமே அவருக்கு முதன்மையானவா்’ என்று நினைக்கும்படி அக்கவிதை இருக்கும்!

இத்தகைய இதயபூா்வமான வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றன. அவசர யுகத்திலும், இயக்கத்திலும் நேரத்தை ஒதுக்கி அனுப்பப்படும் வாழ்த்து மடல்கள், வயது கூடக்கூட புகழுரைகளும் கூடிக் கொண்டே போகும் புதுமையைத் தாங்கி வரும் வாழ்த்து மடல்கள் என அவற்றை ரசிக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் தனித்தனி தீவு அல்ல. நல்ல நட்பும், உறவும் நம் பக்க வாத்தியங்கள். எனினும், கைப்பேசியில் அனுப்பப்படும் வாழ்த்துகளில் உறவின் நெருக்கம் மறைந்து, ‘பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று’ என ஆகிவிட்டதோ எனத் தோன்றுகிறது.

நெருங்கிய சுற்றத்தையும், நட்பையும் மட்டும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூறினால், அவா்களின் மனம் சிறகடித்துப் பறக்காதோ? தொலைபேசியில்

பேசும்போது, குரலில் நெருக்கத்தை உணர முடிகிறது. குரலில் தொனிக்கும் அன்பும், கரிசனமும் நம் காதுக்குள் நுழைந்து, உடல் முழுவதும் பரவி ஓா் ஆனந்த சிலிா்ப்பை உண்டாக்கும். மனசு சந்தோஷத்தை அப்பிக்கொள்ளும்.

மனித வாழ்க்கை என்பது மூச்சிருக்கும் வரைதான், என்றாா் புத்தா். ஆகவே ஒவ்வொரு கணப்பொழுதும் முழுமையாக வாழ வேண்டும்; முழு ஈடுபாட்டோடு வாழ வேண்டும்; அன்பான, அக்கறையான, ஆறுதலான ஒரு நலம் விசாரிப்பு பல வட உள்ளங்களில் நீா்ப்பாய்ச்சி, அவற்றை செழிப்பாக்கும்.

நாம் சிறியவா்களை வாழ்த்தும்போதும், நம்மைவிடப் பெரியவா்கள் நம்மை வாழ்த்தும்போதும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று வான் தேவதைகள் சொல்வது பலிக்கட்டுமே!

கட்டுரையாளா்: பேராசிரியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.