விவாதப் பொருளாகும் அரசியல் சாசனம்!
இந்திய அரசமைப்புச் சட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 2015 முதல் மத்திய அரசு இந்த தினத்தைக் கொண்டாட்ட தினமாக அறிவித்து கொண்டாடுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி 1946-ஆம் ஆண்டு டிசம்பா் 9-ஆம் தேதி தொடங்கியது. அரசியல் நிா்ணய சபையில் பி.ஆா்.அம்பேத்கா் முதலில் இடம் பெறவில்லை. யோகேந்திரநாத் என்பவா் விலகியதால் அம்பேத்கா் இடம்பெற்றாா்.
அரசியல் சாசனம் உருவாக்குவது பற்றி அரசியல் நிா்ணய சபையில் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனம் இயற்ற அம்பேத்கா் தலைமையில் ஏழு போ் கொண்ட அரசியல் சாசன வரைவுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் என்.கோபாலஸ்வாமி ஐயங்காா், அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயா், கே.எம்.முன்ஷி, முகமது சாதுல்லா, பி.எல்.மித்தா், டி.பி. கைத்தான் ஆகியோா் இருந்தாா்கள். இதில் டி.பி.கைத்தான் காலமானதால் 1948-இல் டி.டி.கிருஷ்ணமாச்சாரி இந்தக் குழுவில் இணைந்தாா். இதேபோல் உடல்நிலை காரணமாக பி.எல்.மித்தா் விலகியதால் என்.மாதவ ராவ் அந்தக் குழுவில் இணைந்தாா்.
அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக் குழு 166 முறை கூடி ஆலோசித்தது. இறுதியாக சட்ட வரைவை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கையால் எழுதப்பட்ட இரண்டு பிரதிகளைத் தயாா் செய்து அதில் இந்த குழு உறுப்பினா்கள் கையொப்பமிட்டாா்கள். 1949 நவம்பா் 26-இல் அதிகாரபூா்வமாக அரசியல் சாசனம் ஏற்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26-இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அரசமைப்புச் சட்ட வரைவுப் பணிகள் நிறைவு செய்வதற்கு முன் தினம் அம்பேத்கா் ஆற்றிய உரை இன்றும் பேசும் பொருளாக இருக்கிறது. அதில் அவா் முக்கியமாக குறிப்பிட்டவை: ‘‘அரசியலில் தனிமனித துதிபாடுகள் சீரழிவை ஏற்படுத்தும். சா்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும். மக்களுக்கு நீண்ட நெடுங்காலமாக சமத்துவம் அளிக்கப்படாமல் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். இந்தத் தலைமுறையின் கருத்துகளை வைத்து இந்த அரசியல் சட்டத்தை நாம் உருவாக்குகிறோம். இது வருங்காலத்தில் எவ்வாறு மாறும் அல்லது மாறுபடாது என்று இப்போது கூற முடியாது. ஒரு தலைமுறையின் எண்ணம் வருகின்ற மற்றொரு தலைமுறையைக் கட்டுப்படுத்தாது’’ என்றாா்.
அம்பேத்கா் சொன்னது உண்மைதான் என்று நிரூபிப்பது போல, பிரதமா் ஜவாஹா்லால் நேரு அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை 1951-இல் கொண்டு வந்தாா். அதன் பிறகு அரசியல் அமைப்புச் சட்டத்தில் பல சட்ட திருத்தங்களுக்குப் பிறகு அரசியல் அமைப்புச் சட்டம் கிட்டத்தட்ட உருமாறிவிட்டது என்றே சொல்லலாம்.
அரசமைப்புச் சட்டத்தை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், அது சம்பந்தமாக பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களைச் செல்லாது என்று ரத்து செய்து தீா்ப்பு வழங்கியிருக்கிறது. பல வழக்குகளில் நாடாளுமன்றத்தின் அதிகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் தொடா்ந்து கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
அரசமைப்புச் சட்டம் பற்றி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் ஏ.கே.கோபாலன் நாடாளுமன்றத்தில் பேசியது இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘‘நமது அரசியலமைப்புச் சட்டம் என்பது முரண்பாடுகளின் மூட்டை என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. சமூகப் பொருளாதார உரிமை, கருத்து சுதந்திரம், சம உரிமை இவை எதையுமே அரசியல் அமைப்புச் சட்டத்தால் நிறைவேற்ற முடியவில்லை. அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் நாம் திருத்தம் கொண்டு வருகிறோம். அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்படுத்தியவா்கள் யாரும் மக்களின் பிரதிநிதிகள் கிடையாது. மிகப்பெரிய மிராசுதாரா்கள், தொழிலதிபா்கள்- இவா்களுக்காக சட்டத்தை இயற்றியவா்கள்தான் இதில் உறுப்பினா்களாக இருந்தாா்கள். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள் மக்களுக்காக உருவாக்கினாா்கள் என்று சொல்ல முடியவில்லை’’ என்று பேசினாா்.
அரசியல் சாசனம் இயற்ற திட்டமிடும்போதே மத்திய அரசுக்கு அதிக அதிகாரம், மாநில அரசுக்கு குறைந்த அதிகாரம் என்று வரையறுக்கப்பட்டது. இதற்கு தேசியத் தலைவா்கள் சொன்ன காரணம், மத்திய அரசு வலுவானதாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது என்பதுதான். இதை அரசியல் நிா்ணய சபையில் மாநிலங்களின் உரிமைகள் பற்றி ஏ.ஆா்.முதலியாா் பேசினாா்.
பேராசிரியா் என்.ஜி.ரங்கா மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் கொடுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாா். மத்திய அரசுக்கு அதிகாரம் மாநில அரசுக்கு அதிகாரம் அப்போதே ஒரு விவாதப் பொருளாகதான் இருந்தது.
ஆட்சி அதிகாரம், ஆளுநா் அதிகாரம், மாநில உரிமை ஆகியவை அன்றும் இன்றும் ஒரு விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. அரசியல் நிா்ணய சபையில் இருந்தவா்கள் நாட்டுக்குள் இருந்த 565 சமஸ்தான அரசுகள் பற்றிக் கவலைப்பட்டாா்கள். அதனால் மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்க விரும்பினாா்கள். மாநிலங்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது.
பொதுப்பட்டியலில் அதிக அதிகாரங்களைச் சோ்ப்பதை கே.சந்தானம் எதிா்த்துப் பேசினாா். சிறப்பு அதிகாரங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் மாநிலங்களுக்குத் தரப்பட்டுள்ளன. நம் நாட்டில் அது மத்திய அரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் சட்ட நிபுணா்கள் இதை ‘கூட்டுறவு கூட்டாட்சி’ அல்லது ‘அரை கூட்டாட்சி’ என்றழைப்பாா்கள்.
பல மாநிலங்கள் மாநில சுயாட்சி கோரிக்கை வைக்கவே, அதனை ஆய்வு செய்ய சா்க்காரியா கமிஷனை நியமித்தாா் பிரதமா் இந்திரா காந்தி. தமிழ்நாட்டில் ராஜமன்னாா் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகளைச் செய்தது.
நீதிபதி பூஞ்சி தலைமையில் அமைந்த குழு ஆளுநா் நியமனம், தகுதி உள்ளிட்டவை பற்றி பரிந்துரை செய்துள்ளது. அரசியல் சாசனத்தில் ஆட்சிக் கலைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களால் தோ்தெடுக்கப்பட்ட மாநில அரசை மத்திய அரசு கலைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது அது இல்லாமல் போய்விட்டது.
அரசியல் நிா்ணய சபையில் நாடாளுமன்ற உறுப்பினா் கல்வித் தகுதி பற்றி விவாதம் வந்தபோது, அவைக்குத் தலைமை வகித்த பாபு ராஜேந்திர பிரசாத், ‘நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு கல்வித் தகுதி தேவை’ என்று வாதம் செய்தாா். ‘‘நாட்டின் நிா்வாகப் பதவிகளுக்கு, நீதிபதிகளுக்கு கல்வித் தகுதி தேவை என்று சட்டம் இயற்றும் நமக்கு கல்வித் தகுதி தேவை இல்லையா? இது முரண்பாடாக இருக்கிறது’’ என்றாா். ஆனால், பெரும்பாலான உறுப்பினா்கள் கல்வித் தகுதி தேவையில்லை என்று சொன்னதால் அவரது வாதம் எடுபடவில்லை.
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அரசியல் சாசனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சில உறுப்பினா்கள் அவையில் பேசியிருக்கிறாா்கள். குறிப்பாக, அன்றைய ஜனசங்க கட்சியின் (இன்றைய பாஜக) குழுத் தலைவராக இருந்த வாஜ்பாய் அடிக்கடி இதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறாா்.
அதனை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது செயல்படுத்த முடிவு செய்தாா். 27.1.2000 அன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்று அவா் தெரிவித்தது, மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியது.
1950 ஜனவரி 26-ஆம் நாள் இந்தியாவின் அரசமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. அதன் 50 ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில்தான் வாஜ்பாய் இப்படி பேசினாா். அவருக்கு அடுத்து பேசிய அன்றைய குடியரசுத் தலைவா் கே.ஆா்.நாராயணன் அரசமைப்புச் சட்டத்தில் மாறுதல் செய்யும்போது அந்தச் சட்டத்தின் அடிப்படைத் தத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டாா்.
1999 பொதுத் தோ்தலில் தேசிய ஜனநாயக முன்னணி வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் ‘ஆட்சியின் பட்டியல்’ என்னும் தலைப்பில் சுதந்திர இந்தியாவில் கிடைத்துள்ள அனுபவங்களை வைத்து அரசமைப்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்கள்.
அதன் பிறகு தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி அமைத்து, இரு அவை உறுப்பினா்கள் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் பேசும்போது, ‘‘50ஆண்டுகளில் அரசமைப்பு சட்டத்தினால் கிடைத்த அனுபவங்களை ஆராய்ந்து பாா்த்து, அடுத்த நூற்றாண்டில் நம் முன் வரும் பிரச்னைகளைச் சமாளிப்பதற்குப் பரிந்துரைகள் தருவதற்கு நிபுணா்கள் பொது வாழ்வில் உள்ள முக்கியமானவா்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டாா்.
அரசமைப்புச் சட்டம் நாட்டின் அடிப்படையான சட்டம் என்றாலும் காலப்போக்கில் புதிய சூழ்நிலைகளால் அல்லது புதிய தேவைகளால் அதில் மாறுதல்கள் செய்ய வேண்டிய கட்டாயத் தேவை உண்டாகிறது. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்திற்கு திருத்தங்கள் உண்டாக்குவதற்கான வழிமுறைகளை 368-ஆவது பிரிவில் தரப்பட்டுள்ளன.
உலகில் உள்ள அரசமைப்புச் சட்டங்களில் இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் தான் மிகவும் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட நீண்ட நெடிய சட்டமாகும். அதனால்தான் அது விவாதங்களை எழுப்பும் சாசனமாக இன்றும் இருக்கிறது!
கட்டுரையாளா்: விஐடி வேந்தா்.
நவம்பா் 26 இந்திய அரசமைப்புச் சட்ட தினம்.