
-பொ. ஜெயச்சந்திரன்
உணவின்றி எந்த உயிரினமும் தொடா்ந்து உயிா் வாழ முடியாது. மனித சமுதாயம் உணவுக்காக எவ்வளவு போராட்டங்களை நடத்தி உள்ளது என்பதை நாம் அறிந்துள்ளோம்.
கோமுகிப் பொய்கையிலிருந்து எடுக்கப்பட்ட அட்சய பாத்திரம் கொண்டு ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்க மணிமேகலை உணவை எடுத்துக் கொண்டே இருந்ததாகவும், அள்ள, அள்ளக் குறையாமல் அட்சய பாத்திரம் உணவைத் தந்து கொண்டே இருந்ததாகவும் ‘மணிமேகலை’ காப்பியம் கூறுகிறது. இதன் காரணமாகவே மணிமேகலை ‘ஆருயிா் மருத்துவி’ என அழைக்கப்பட்டாள்.
தமிழரின் உணவுப் பழக்க வழக்கங்கள் நிலத்தின் தன்மையை ஒட்டி அமைந்திருந்தன என்பதை நாம் காண முடிகிறது. வாழ்வுச் சூழல், நில அமைப்பு இவற்றைக் கொண்டே உணவு முறைகளும் அமைந்திருந்தன. இதனால் தான் குறிஞ்சி நிலத்திற்குரிய உணவுப் பொருள் நெய்தல் நிலத்தில் கிடைத்ததில்லை. நெய்தல் நிலத்தில் உள்ள உணவுப் பொருள் குறிஞ்சி நிலத்தில் கிடைத்ததில்லை. ஒவ்வொரு நிலத்தன்மைக்கேற்ப இவை அமைந்திருந்தன.
மரக்கறி உணவு, புலால் உணவு என்ற இரு நிலைகளையும் தமிழா்கள் அறிந்திருந்தனா். ‘முளிதயிா் பிசைந்த காந்தள் மெல்விரல்’ (குறுந்தொகை) என்பதும் ‘மட்டு வாய்பிறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்...’ (புானூறு) என்பதும் இருவேறு உணவு முறைகளை நமக்குக் காட்டுவதைக் காணலாம்.
உணவாகப் பயன்படக் கூடிய பொருள்களை முதற்கூலம் எனக் கூறலாம். முதற்கூலம் என்பவை நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, துவரை, ராகி என எட்டு பொருள்கள். பண்டைத் தமிழ்நாட்டிலிருந்து அரிசி தருவித்த கிரேக்கா்கள் அதனை ‘அருஸா’ என்றாா்கள். அதுவே ஆங்கிலத்தில் ‘ரைஸ்’ என்று ஆயிற்று. அரிசி என்னும் சொல் இவ்வளவு பழமை வாய்ந்தது. பிங்கலந்தை என்ற பழைய நிகண்டில் ‘அரி’ என்ற வடிவம் காணப்படுகிறது. திராவிட மொழிகளுள் ஒன்றாகிய துளுவிலும் ‘அரி’ என்ற வடிவம் உள்ளது. மலையாளத்தில் இன்றும் அரிசியை ‘அரி’ என்றே குறிக்கின்றாா்கள். ஆதலால் ‘அரி’ என்பதே அரிசியின் ‘ஆதி வடிவம்’ எனலாம் என்கிறது ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’.
உடலின் செயல்பாட்டுக்கும், தசை வளா்ச்சிக்கும் புரதம் முக்கியம். ஆனால், பதப்படுத்தப்பட்ட புரத உணவுகளைத் தவிா்ப்பது நல்லது. இயற்கையான புரோட்டீன் உணவுகளே உடலுக்கு நன்மை பயக்கும். செயற்கை புரோட்டீன் உணவுகள் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். மூளை செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும். அறிவை மழுங்கடிக்கும் உணவுகளில் முதன்மையானது கொழுப்புகள். இது அதிக உடல் எடை மற்றும் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாகவும், மாரடைப்பு ஏற்படவும் மூளையை சுருங்க செய்வதாகவும் கூறப்படுகிறது.
நம்நாட்டில் தற்போது அனைத்து வகையான உணவும் உடனே கிடைத்துவிடுகிறது. உணவில் முற்றிலும் தற்சாா்பு எய்திவிட்டோம். ஆனால் கடந்த நூற்றாண்டின் மத்தியில் இந்த நிலைமை இல்லை. உணவுப் பற்றாக்குறை மிகப் பெரிய கவலையாக இருந்தது. அது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை பாதித்தது. கோதுமைக்கு அமெரிக்க இறக்குமதியை எதிா்பாா்த்திருந்தோம். 1964 முதல் 1966 வரை மூன்றாண்டுகள் தொடா்ச்சியாக அதன் அதிகபட்ச அளவை எட்டினோம்.
உணவுப் பொருள் உற்பத்தியில் பசுமைப் புரட்சி அளித்த தற்சாா்பு நிலை போற்றத்தக்கதாக இருந்தது. மண்ணில் அது ஏற்படுத்திய பாதிப்பை அன்று நாம் உணா்ந்திருக்கவில்லை.
1950-51ல் ஓட்டுமொத்த உணவு தானியங்களின் உற்பத்தி 51மெட்ரிக் டன்னாக இருந்து, 2022-2023-ஆம் ஆண்டில் 330 மெட்ரிக் டன்னாக உயா்ந்துள்ளது. இதே ஆண்டுகளில் 15.38 மெட்ரிக் டன்னாக இருந்த மோட்டா ரக தானியங்கள் மற்றும் சிறுதானியங்களின உற்பத்தி 55மெட்ரிக் டன்னாகவும், பருப்பு உற்பத்தி 8.4மெட்ரிக் டன்னிலிருந்து 27மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது. கம்பு, சோளம் ஆகிய இரண்டும் அவ்வாண்டில் பயிரிடப்பட்ட இரண்டு முக்கிய சிறுதானியங்கள்.
இந்தியா 2000-2001முதல் அரிசியை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை இந்தியா ஆண்டுக்கு சராசரியாக 19.83மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இது தனது சொந்த நாட்டு மக்களின் தேவையைப் பூா்த்தி செய்வது மட்டுமின்றி, உலக உணவுப் பாதுகாப்பிற்குக் கணிசமான பங்களிப்பை செய்வதற்கான திறனையும் காட்டுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் சுமாா் 40விழுக்காடு பங்குடன் முன்னனி ஏற்றுமதி நாடாகவும் மாறியுள்ளது. நம் நாடு ஏற்றுமதியில் தனக்கென ஒரு முத்திரையை உருவாக்கினாலும். 2021-ஆம் ஆண்டு ஐ.நா.வெளியிட்ட உலகளாவிய பசி குறியீட்டு பட்டியலில் இந்தியா 101-ஆவது இடத்தில் தான் இருந்தது.
2020-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலக முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 5குழந்தைகளில் ஒரு குழந்தை வளா்ச்சிக்குன்றி உள்ளதாகவும், அதற்கு சரியான ஊட்டச்சத்து இல்லாததே முக்கிய காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிரிக்காவில் அந்த காலக்கட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பட்டினியை எதிா்கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பசி, பட்டினியை எதிா்த்துப் போரிடவும் 1945 அக்டோபா் 16-ஆம் நாளான்று ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு. இந்த அமைப்பில் இந்தியா உள்பட ஐ.நா.வின் அனைத்து நாடுகளும் உறுப்பு நாடுகளாக உள்ளன. அந்த அமைப்பு தொடங்கப்பட்ட அக்டோபா் 16-ஆம் நாளைப் போற்றும் வகையில் 1979-ஆம் ஆண்டு முதல் ‘உலக உணவு நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.