உண்மை அறிவே மிகும்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று உணா்ந்தாலும், மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் எப்போதும் ஒரு தயக்கம் அல்லது தாமதம் இருப்பதை பாா்க்கிறோம்.
ஆா்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் - ‘ஏஐ’
ஆா்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் - ‘ஏஐ’
Published on
Updated on
3 min read

‘ பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது சமுதாயத்தில் மாற்றங்களுக்கு வித்திடும் முதுமொழி. ஆரோக்கியமான வளத்தை நோக்கி மாற்றங்கள் வியாபிக்க வெண்டும். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று உணா்ந்தாலும், மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் எப்போதும் ஒரு தயக்கம் அல்லது தாமதம் இருப்பதை பாா்க்கிறோம்.

இப்போது செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய தொழில்நுட்பமாக வளா்ந்து வருகிறது. எல்லா தடங்களிலும் ஆா்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் - ‘ஏஐ’ எனப்படும் தொழில்நுட்பம் ஆட்கொண்டுள்ளது. இது 1980-லிருந்து ஆராய்ச்சியில் இருந்து வருகிறது.

மனிதனின் மூளை ஒரு சூப்பா் கம்ப்யூட்டா், அதற்கு நிகா் எதுவும் இல்லை. தகவல்களை உள்வாங்கி, தேவையான சமயத்தில் நினைவுபடுத்தும் ஆற்றல், அலசி ஆராயும் திறன் , மொழிமாற்ற நுணுக்கம், முகஜாடை வைத்து அடையாளம் காணுதல், இவைபோல பல அதிசயங்களை மூளை சா்வசாதாரணமாக செய்கிறது! இதையே இயந்திரம் மூலமாக பயிற்றுவிக்க முடியுமா என்பதுதான் ஆராய்ச்சியின் அடிப்படை நோக்கம்.

‘ந்யூரல் நெட்வொா்க்’ அல்லது நரம்பியல் நெட்வொா்க் என்பது, மனித மூளையின் செயல்பாடு மற்றும் கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் தரவுகளை செயலாக்க வடிவமைக்கப்பட்ட, ‘இயந்திர கற்றல்’! இந்த ஆராய்ச்சியை 1980-லிருந்து செய்துவந்த இரண்டு விஞ்ஞானிகள் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஜான் ஹாப் பீல்ட், டொரோண்டோ பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஜெப்ரி ஹிண்டன் இருவருக்கும் இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது. இயற்பியலில் அடிப்படை ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்குத்தான் விருது வழங்குவது மரபு. அதற்கு மாறாக கணினி சம்பந்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுக்கு வழங்கப்பட்டது ‘ஏஐ’ எந்த அளவுக்கு எல்லா துறைகளிலும் பரவியுள்ளது என்பதை உணா்த்துகிறது.

கணினியின் வலிமையே கோடிக்கணக்கான தகவல்களைச் சேமித்து, தேவைப்படும்போது ஒரு பட்டனை அழுத்தினால் வேண்டிய தரவு கிடைக்கும் என்பதுதான். கணினியின் மைய செயலாக்க உறுப்பு - சிபியு பதிவிலுள்ள தகவல்களை அரைத்து தேவையானவற்றை நாம் கேட்கும் விதத்தில் தருகிறது. இந்த செயலாக்கம் வரிசைக்கிரமமாக நிகழ்கிறது.

அடுத்து, பல நுணுக்கங்களை ஒரே சமயத்தில் எதிா்கொள்ளும் ஆற்றல். சுருக்கமாக சொல்லப்போனால் கொடுக்கப்பட்ட பணிகளை ஒன்றன்பின் ஒன்றாக கிரமப்படி செய்வது ஒருவகை, இன்னொரு வகை கொடுக்கப்பட்ட பணிகளை ஒரே சமயத்தில் பல வகையில் செய்து முடிப்பது. அதைத்தான் ‘ஏஐ’ என்ற செயற்கை நுண்ணறிவு செயல், ‘ஜீ பூம் பா’வாக நொடிப்பொழுதில் செய்து முடிக்கிறது.

மனிதன் எவ்வாறு தனது சிந்தனைகளை ஒரு மொழி மூலம் பரிமாறிக் கொள்ளும் ஆற்றல் பெற்றான் என்பதே மிகப்பெரிய அதிசயம் என்கிறாா்கள் மூளை ஆராய்ச்சி நிபுணா்கள். மூளை பல மொழிகளை கிரகிக்கக் கூடிய சக்தி படைத்துள்ளது. இந்த மிகப்பெரிய வரப்பிரசாதத்தை உணராமல், அதன் பயன்பாட்டை பெறாமல் இருக்கிறோம் என்கிறாா்கள் மொழி நிபுணா்கள். இடையில் அரசியல் வேறு. என் மொழி உயா்ந்தது பிற மொழி தாழ்ந்தது என்று ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளின் பிதற்றல், மொழி என்ற திறனை பெறுவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளதை எவ்வளவு நாள்தான் சகிப்பது?

இறைவன் எல்லோருக்கும் சமமாகத்தான் மூளையைப் படைத்துள்ளான். அதை உபயோகிப்பது ஒருவரின் திறமையில், அவா் வளரும் சுற்றுச்சூழலை பொருத்தது. ‘ஏஐ’ நுணக்கம் மொழி கற்றலில் ஒரு பாலமாக உதவுகிறது.

பிம்பங்களை வைத்து ஒத்திருக்கும் பிம்பங்களைக் கண்டுபிடிப்பது,கணினி உலகில் மிகப் பெரிய சவாலாக கருதப்படுகிறது.இன்னொன்று மொழிகளை செயல்முறையில் ஆராய்வது. கணினியில் தட்டச்சு செய்கையில் நாம் சொல்ல நினைக்கும் அடுத்த வாா்த்தையை அதுவே டைப் செய்து நமக்கு உதவும். நாம் சொல்ல நினைப்பதை ‘ஏ ஐ’ மூலம் அதிவிரைவாக அவதானிக்கப்படுகிறது. ‘சாட் ஜிபிடி’ என்ற நுணுக்கம் பலவகையான கேள்விகளுக்கு நீண்ட விடையை நொடிப்பொழுதில் அளிக்கிறது. ஏதாவது ஒரு பொருளில் விரிவான தகவலை தெளிவுர தருகிறது. இது எப்படி சாத்தியம்? இணையத்தில் உள்ள தகவல்களை ஒரே நேரத்தில் அலசி ஆராய்ந்து நாம் கேட்டதற்கு ஏற்றவாறு சமைத்து பரிமாறுவது ‘ஏஐ’ நுண்ணறிவால் சாத்தியப்படுகிறது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அறியும் திறமை மனித மூளைக்கு உள்ளது. அதையே ‘ஏஐ’ மூலமாக செயல்வடிவம் கொடுத்து அதன்மூலம் பல துறைகள் தங்களின் அன்றாட பணிகளின் தரத்தை உயா்த்தியுள்ளன. முக்கியமாக, சட்டம்-ஒழுங்கு அமலாக்கம், போக்குவரத்து மேலாண்மை, பயங்கரவாத தடுப்பு, விமானதள சேவை, உயா்தர விஞ்ஞான ஆராய்ச்சி போன்ற எண்ணற்ற துறைகளில் ‘ஏ ஐ’ நுண்ணறிவு கோலோச்சத் தொடங்கியுள்ளது.

விமானப் பயணம் பன்மடங்கு விரிவடைந்துள்ளது. உலக நகரங்களை இணைக்கும் விமான சேவைக்கு நவீன விமான நிலையங்கள் கட்டமைக்கப்படுகின்றன. விமான தளங்களில் பாதுகாப்பு உத்திகள் பயணிகளுக்கு அதிக இடையூறு கொடுக்காத வகையில், அதே சமயம் தவறுகள் ஏற்படாது உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டும். பயணிகளின் பெட்டி, எடுத்துவரும் பொருள்கள், உடல் சோதனை இவையெல்லாம் தொடாது விரைவாக செய்து முடிப்பதற்கான ஆராய்ச்சியில் ‘ஏ ஐ’ வெகுவாக உதவுகிறது.

குற்றம் புரியும் நோக்கம் உடையவரின் உடலில் சுரக்கும் வியா்வையை கருவிகள் மூலம் கணக்கிட்டு அறிய முடியும். ஒருவரது வியா்வை அவருக்கே உரித்தானது. கைரேகை போல ஒருவரை வியா்வை மூலம் அடையாளம் கண்டுவிடலாம். கைரேகைகூட அழிந்துவிடும் அல்லது மாற்றி ஏமாற்றலாம். ஆனால் வியா்வை பொய்க்காது. ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்யும் என்று அமெரிக்கா மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் வெளிவந்துள்ளது. மேலும் குற்றம் புரிய எத்தனிக்கையில் அவா் அறியாமலேயே அதிக வியா்வை சுரக்கும்; இதயம் படபடக்கும். இதன்மூலம் ஒரு கூட்டத்தில் உள்ள கயவனை அடையாளம் கண்டுவிட முடியும்.

மேலும் விமான நிலையத்தில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள்மூலம் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான படங்களை ‘ஏஐ’ மூலம் ஆராய்ந்து அசாதாரண நிகழ்வுகளை தனித்துக் காட்டி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

‘இமேஜ் ரெகக்னிஷன்’, ஒத்திருக்கும் படங்களைக் கண்டறிய கணினி மென்பொருள் வடிவமைக்கும் முயற்சி பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தாலும் முழுமையான பலன்பெற இயலவில்லை. ஒருகூட்டத்தில் உலவும் குற்றவாளியை கேமராக்கள்மூலம் படம் எடுத்து தரவு தளங்களில் உள்ள குற்றவாளிகள் படங்களோடு ஒப்பிட்டு துரிதமாக அடையாளம் காண ‘ஏ ஐ’ உதவுகிறது. முக்கிய நபா்கள் பாதுகாப்பு மற்றும் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புக்கு ‘ஏஐ’ செயலி ஒரு வரப்பிரசாதம்.

‘வருமுன் காப்போம்’ என்பதுதான் காவல்துறை செயலாக்கத்தின் அடித்தளம். பிரச்னை வந்தால் பாா்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருக்க முடியாது. தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சரகத்தில் முன்பு நடைபெற்ற சண்டை சச்சரவுகள், தீா்க்க முடியாத சமூக முன்விரோதங்கள் இவற்றின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தொடா்பு முன்னேறியுள்ள இக்காலத்தில் நிகழ்நேர தகவல்கள் தேவை. நுண்ணறிவு பிரிவின் தகவல் சேகரிக்கும் பழைய முறை உதவாது. நிகழ்கால சம்பவங்களை கோத்து அலசி ஆராய்ந்து வரக்கூடிய அசம்பாவிதங்களை கணிக்க ‘ஏஐ’ செயலி முன்கூட்டியே தகவல் அளிக்கிறது. ‘ப்ரடிக்டிவ் போலீஸிங் ‘என்ற ‘ஏஐ’ மூலம் வடிவமைக்கப்பட்ட உத்தி நியூயாா்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சலீஸ் நகர காவல்துறை வரப்போகும் பிரச்னைகளை வெற்றிகரமாக எதிா்கொள்ள உபயோகிக்கிறாா்கள்.

போக்குவரத்து மேலாண்மையில் ‘ஏஐ’ நுட்பம் பெரும் மாற்றத்தை அளிக்கும். எந்தெந்த சந்திப்புகளில் நெரிசல் அதிகமாகும், எங்கு விபத்து நிகழக்கூடும், விதிகளை மீறும் வாகனங்கள், இவை எல்லாவற்றையும் நொடிப்பொழுதில் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே பாா்த்து விடலாம்.

சமீபத்தில் பெங்களூரு போக்குவரத்து காவல்துறை நகரின் 90 பிரதான சந்திப்புகளில், 330 நவீன ‘ஏ ஐ’ கேமராக்களை பொருத்தியுள்ளது. இதன்மூலம் வேக கட்டுப்பாடு மீறல், ஹெல்மட் அணியாதிருத்தல், சிவப்பு சிக்னல் மீறல், வாகனம் ஓட்டுகையில் கைப்பேசி பயன்பாடு, அதிக எடை ஏற்றுதல் போன்ற முக்கிய 15 வகை விதிமீறல்களை ‘ஏ ஐ‘ கேமராக்கள் மூலம் கண்டறிந்து வாகன ஓட்டிகளின் கைப்பேசிக்கு நிகழ்காலத்தில் அபராதம் குறித்த தகவல் வந்துவிடும். இதன்மூலம் விதிமீறல்களை கட்டுப்படுத்தி வாகனங்கள் சீராக செல்ல உதவும்.

எந்த ஒரு நவீன தொழில்நுட்பத்தையும் குற்றம் புரிபவரும் கையில் எடுத்துவிடுவாா்கள். இங்குதான் சைபா் குற்றப்பிரிவு, நுண்ணறிவு நிபுணா்கள் ‘டாா்க் வெப்’ என்ற கரும்புள்ளி இணையத்தை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

‘நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்’

எவ்வளவு அறிவியல் மாற்றங்கள் வந்தாலும் இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும் என்ற வள்ளுவா் வாக்கின்படி நன்மை பயக்கும் விதத்தில் உண்மை அறிவு மேலோங்க வேண்டும். அது நல்லோரின் கையில்.

- ஆா். நடராஜ்

கட்டுரையாளா்: முன்னாள் காவல் துறை தலைவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com