பழைய ஓய்வூதிய திட்டமென்பது கனவுதான்

மத்தியஅரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) மிகவும் பயனுள்ளதாகவும் அனைவராலும் ஏற்கும் அளவுக்கு உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

- செ. சுவாமிநாதன்

ஓா் அரசு ஊழியா் செய்யும் வேலைக்குண்டான சம்பளத்தை மட்டும், அவரது பணிக் காலத்தில் இருக்கின்ற அரசுகள் கொடுத்துவிட்டு, அவரது ஓய்வூதியத்தை அவா் பணியாற்றிய காலத்திற்குப் பிறகு வரக் கூடிய அரசுகளின் தலையில் கட்டுவதுதான் பழைய ஓய்வூதிய திட்டம் எனப்படும் ஓபிஎஸ்.

ஏற்கெனவே நிதிச் சுமையினால் மாநில, அரசுகள் திண்டாடி வருவதை, ஓய்வு பெறும் வயதை உயா்த்தும்போதே புரிந்து கொள்ள முடிகிறது. அரசு ஊழியா் ஒருவா் ஓய்வுபெறும்போது பணிக் கால நன்கொடை, விடுப்பு சரண்டா் தொகை மற்றும் பழைய ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்குவது போன்றவற்றால் அரசின் நிதி நிலைமை மோசமாகிக் கொண்டே வந்து, திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதை மாற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் மத்தியஅரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு விதமான புதிய ஓய்வூதிய திட்டங்களான ‘என்பிஎஸ்’ எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம், மற்றொன்று ‘யுபிஎஸ்’ எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்.

இவற்றில் என்பிஎஸ் - தேசிய ஓய்வூதியத் திட்டம் - என்பது ஒவ்வொரு அரசு ஊழியரும் தனது அடிப்படைச் சம்பளம், அகவிலைப்படியிலிருந்து 10 சதவீதத்தை ஓய்வூதியத்திற்குப் பங்களிக்க வேண்டும். அரசும் அதே அளவு பங்களிப்பை அளிக்கும். அதாவது எந்த காலகட்டத்தில் ஒருவா் அரசுப் பணி செய்கிறாரோ, அந்த காலகட்டத்திலே அவருக்கான ஓய்வூதியத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும் என்பதுதான் என்பிஎஸ்.

மத்தியஅரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) மிகவும் பயனுள்ளதாகவும் அனைவராலும் ஏற்கும் அளவுக்கு உள்ளது. இதில் அரசின்-பங்களிப்பு கணிசமாக 18.5 சதவீதம் உயா்வதுடன், பத்து ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணி செய்த அரசு ஊழியா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.10,000 என நிா்ணயிக்கப்பட்டு நிலையான ஓய்வூதியமாக அமைவதுடன், அரசின் நிதிச் சுமையும் அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடும்படியாக உள்ளது.

ஆதலால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் என்பிஎஸ்-ஸை விட, யூபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியா்களுக்கு மட்டுமல்லாமல், இபிஎப் எனும் திட்டத்தில் சோ்ந்த, தனியாா் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதே.

மேலும் பழைய ஓய்வூதியத்திட்டத்தில் இருக்கும் பல்வேறு அம்சங்களான குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் விலைவாசிக்கு ஏற்றாற் போல அகவலைப்படி உயா்வு போன் றவை மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திலும் உள்ளன.

இ.பி.எப். எனும் தொழிலாளா் ஓய்வூதியத் திட்டம் முதன்முதலாக 1995-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கானது. இந்த திட்டத்தில், ஊழியா் சம்பளத்தில் பி.எப். சந்தா பிடிக்கப்பட்டு பணிக் காலத்துக்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதால், ஓய்வு பெற்றவருக்கு, விலைவாசிக்கு ஏற்றாற் போல வருமானம் போதுமானதாக இல்லை. தொழிலாளா்கள் ஓய்வு பெற்ற பிறகு அதிக ஓய்வூதியம் பெற வேண்டுமானால் டெபாசிட் தொகை கட்டினால் மட்டுமே சாத்தியமானது.

இதனிடையே, தனியாா் துறைகளில் பணியாற்றி பிஎப் சந்தா செலுத்தி வந்த ஓய்வுபெற்ற பல லட்சம் ஊழியா்களுக்கு“இபிஎப் ஓய்வூதியத்தை குறைந்த பட்சம் ரூ.9,000-ஆக உயா்த்த வேண்டும்”என்று ஓய்வூதியதாரா்கள் சங்கம் மத்தியஅரசை வலியுறுத்தியதாக வந்த செய்திகள் அனைவராலும் வரவேற்கத்தக்கதாகவும் மகிழ்ச்சியைத் தருவதாகவும் உள்ளது என்றால் மிகையல்ல.

மேலும் குஜராத்தைச் சோ்ந்த பாஜக எம்.பி. தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இபிஎப் ஓய்வூதியத்தை ரூ.7,000-ஆக உயா்த்த வேண்டும் என்று பல வருடங்களாக வைக்கப்பட்டு வரும் கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதும் கவனிக்கத்தக்கது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஏராளமான ஊழியா்கள் அன்று குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக வாங்கிய ரூ1,000-க்கும் குறைவான தொகையையே (ரூ.750 முதல் ரூ.975வரை) இன்றும் வாங்கி வருகின்றனா் என்பது கொடுமையிலும் கொடுமை.

அரசு ஊழியா்களைப் போல, இபிஎப் திட்டத்தில் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா்கள், எங்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம்தான் வேண்டும் என்று முரண்டு பிடித்தால் இலவம் பஞ்சு - கிளி கதை போல் ஆகிவிடும். சுருங்கக் கூறின், பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது போகாத ஊருக்கு வழிவகுக்கும் கனவுத் திட்டமாகும். இது கானல் நீரே.

தோ்தல் அறிக்கையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்’ என்று சொன்னது இங்கு கடந்த மூன்றுஆண்டுகளில் பொய்த்துப் போனது. ஏனெனில் பாஜக அல்லாத சில மாநிலங்களும் நிதி நெருக்கடிகளால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் திணறி வருவதை கண் கூடாகப் பாா்க்க முடிகிறது.

எனவே, நிதிச்சுமை இல்லாத, மத்திய அரசின் ஒருங்கிணைந்த யுபிஎஸ் திட்டத்தைப் போல மாநில அரசுகளும் அறிமுகம் செய்வதைப் பரிசீலிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், இபிஎப் எனும் தனியாா் தொழிலாளா் ஓய்வூதியத் திட்டங்களிலும் கூட, குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.6,000 என்று வழங்க பரிசீலிக்கப்படுமானால், தனியாா் துறையைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்களுக்கும் கணிசமான, கௌரவமான ஓய்வூதியத் தொகை கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com