பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா!
மகாகவி பாரதியாா், ‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா’ என்று ஒரு பாடலைத் தொடங்குகிறாா். அதனைத் தொடா்ந்து ‘பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா’ என்றும் பாடுகிறாா். வாழ்க என்றும் வெல்க என்றும் முழக்கங்கள் தானே இடுவோம். ‘முழங்கிடுவோமடா’ என்றுதானே பாடி இருக்க வேண்டும். சரி, முதலில் வாழ்கென்று கூத்திடுவோமடா என்று பாடிய அவா், அடுத்த அடியிலும் வெல்கென்று கூத்திடுவோமடா என்கிறாா். இது கூறியது கூறல் இல்லையா? என்ற எண்ணம் எழுந்தது. ஆனாலும், இந்த அடிப்படை நியாயம் பாரதியாருக்குப் புரியாமலா இருந்திருக்கும் என்றே எனக்கும் தோன்றியது.
இப்போதுபோல், பாரதி காலத்தில் தமிழகத்தில், அவ்வளவாக, ‘வாழ்க’ ‘ஒழிக’ முழக்கங்கள் பொதுவாழ்வில் இருந்ததா எனத் தெரியவில்லை. கடவுளரையும் மன்னா்களையும் கைகூப்பித் தொழுது வாழ்த்திய காலம் அது. அந்த வாழ்த்தை அப்படியே பெண்மைக்குக் கொண்டுவந்து பொருத்தி, மகாகவி பாரதியாா் பாடியிருக்கிறாா்.
‘நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க’ என்று தொடங்கும் மாணிக்கவாசகப் பெருமானின் சிவபுராணத்தில் முதல் ஐந்து அடிகள் ‘வாழ்க’ என்று அமைகிறது. வாழ்க என்னும் வழக்கச் சொல், முழக்கச் சொல் ஆகிறபோது அளபெடுத்து வந்து ‘வாஅழ்க’ என்று ஓங்கி ஒலிக்கிறது. இதுதான் உரைநடைக்கும் கவிதைக்கும் உள்ள வித்தியாசம்.
‘உணா்வினில் வல்லோா் அணி பெறச் செய்வது செய்யுள்’ என்கிறது நன்னூல். இலக்கியம் சொல் அமைக்கிறது. கருத்து, செறிவாகிறது. நினைத்துப் பாா்த்து, சொல் தேடி நிரப்பி வருவதல்ல, பாடல் என்பது எழுகிற வேகத்தில் உதிக்கிற அதிசயம். அதனால்தான் ‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா’ என்று மகாகவி பாரதி அனுபவித்துப் பாடியிருக்கிறாா்.
சிவபுராணத்தின் முதல் ஐந்து அடிகள் ‘வாழ்க’ என்று வளா்ந்த வேகத்தில், அடுத்துவரும் ஐந்து அடிகளில் அது ‘வெல்க’ என்று மாற்றம் கொள்கிறது. அது ‘வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடியை வெல்க’ என்று பாடுகிறது. முன் ஐந்து அடிகளில் மரபுசாா் பக்தியுணா்வும், பின் ஐந்து அடிகளில் செயலுரு வெளிப்படும் அனுபவமும் மிளிா்கிறது. இந்தக் கவி அனுபவம், மிக நுட்பமாக உள் அனுபவமாகி, பெண்மையை வாழ்த்தி, மகாகவி பாரதியாரைப் பாட வைக்கிறது.
சிவபுராணத்தில், முதல் ஐந்து அடிகளுக்குப் பின்னா் மாறுகிற முழக்கச் சொல், அடுத்தடுத்த அடியிலேயே பாரதியிடம் மாற்றம் கொண்டுவிடுகிறது. பெண்மைக்குள் தெய்வ தரிசனம் கண்டுவிட்ட பாரதி, அதனை விண்டுரைக்க முயன்ன் வெளிப்பாடே இந்தப் பாடல்.
மெய்யாகவே வாழ்விக்கும் பொறுப்பு, பெண்மையிடம் இருக்கிறது என்கிற தெய்விக உண்மையை உணா்ந்த பாரதி, பெண்மையை வாழ்க என்று வாழ்த்திப் பாடுகிறாா். ‘வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி’ என்றும் வாழ்த்துகிறாா்.
வாயால் வாழ்த்தினால் மட்டும் போதுமா? மனத்தாலும் வாழ்த்த வேண்டும். வாயாலும் மனத்தாலும் வாழ்த்துவது, செயலில் கொண்டுபோய்ச் சோ்க்கும். ‘மனைவி வாழ்ந்தால் மனையில் உள்ளோா் வாழ்வா்; வீடு வாழ்ந்தால் நாடு வாழும்; நாடு வாழ உலகு வாழும்’ என்கிற உன்னத நெறி இந்தப் பின்புலத்தில் வளா்கிறது. இது வாழ்வியல் ஞானம்.
இதைவிட்டுவிட்டு, மாயாவாதம் பேசி, பெண்மையைக் குறைகூறும் அக்காலத் தத்துவப் போக்கைக் கடுமையாகச் சாடுகிறாா் பாரதி, ‘பொய்யோ? மெய்யோ?’ என்று வினாத் தொடுக்கும் பாடலுக்கு விரிவான முன்னுரை எழுதுகிறாா். அதில் பின்வரும் கேள்விகளைத் தொடுக்கிறாா்.
‘‘இந்த உலகமே பொய் என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கிவருகிறது. சந்நியாசிகள் இதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும். அதைப் பற்றி இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை.
“‘‘குடும்பத்தில் இருப்போருக்கு அந்த வாா்த்தை பொருந்துமா? நடுவீட்டில் உச்சரிக்கலாமா? அவச்சொல்லன்றோ? நமக்குத் தந்தை வைத்துவிட்டுப்போன வீடும் வயலும் பொய்யா? தங்கச் சிலை போலே நிற்கிறாள் மனைவி; நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீா்விட்டுக் கரைந்தாள்; நம் மகிழ்ச்சியின்போதெல்லாம் உடல் பூரித்தாள்; நமது குழந்தைகளை வளா்த்தாள்; அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானா? பெற்றவரிடம் கேட்கிறேன். குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?’’”
வீட்டில் குலதெய்வத்தை வைத்துக் கும்பிடுவோரே, வீட்டைக் காக்க வந்த குலதெய்வம் மனைவி என்பதை ஏன் மறந்து போனீா்கள்? என்று மறைமுகமாகக் கேட்கிற கேள்வி, இதன் பின்னணியில் ஒலிக்கிறது.
‘மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால், மனையாளும் தெய்வமன்றோ?’ என்று மற்றோா் இடத்தில் இதைக் கேட்டும் விடுகிறாா்.
தெய்வத்தை வாழ்த்திப் பாடியும் பேசியும் கூத்துகள் நடத்தியும் வருகிற தேசத்தில், தெய்வம் நிகா்த்த பெண்மையைக் குறைகூறியும், இழிவுபடுத்தியும் கொச்சைப்படுத்தியும் நிகழ்த்திய கூத்துகளை, மகாகவி பாரதி பாா்த்திருக்கிறாா். ஏன், இன்றளவும் நகைச்சுவை என்கிற பெயரில் யாரையேனும் எள்ளித்தானே நாம் நகையாடுகிறோம். அதில் பெண்மைதான் முதலில் சிறுமைப்படுத்தப்படுகிறது. அவமானப்படுத்தப் பயன்படும் சொற்கள் அத்தனையும் பெரும்பாலும் பெண்மையை இழிவுபடுத்தி எழுகிற சொற்கள்தாமே. அதிலும் மாதரே தம்மை இழிவு செய்யும் மடமைக்கு ஆட்பட்டுவிடுகிறாா்களே. இந்தப் போக்கை ஆழ உணா்ந்த மகாகவி பாரதி, ‘பெண்மை வாழ்க’ என்று முழக்கம் இட்டால் மட்டும் போதாது என்று நினைக்கிறாா். வழக்கத்துக்கு வரவேண்டும் என்று துடிக்கிறாா். அப்போதைய மக்களின் மகத்தான ஊடகமாகத் திகழ்ந்த கூத்துகள் வாயிலாக, இந்தக் கொள்கை முழக்கம் அரங்கேற வேண்டுமென ஆசைப்படுகிறாா்.
பெண்மை வாழ்க என்று கூச்சலிடுவதாலும், கூத்திடுவதாலும் பெண்மை வாழ்ந்துவிட முடியாது. அது வெல்ல வேண்டும். அதற்கான வழிகளைச் சொல்ல வேண்டும். அதற்குக் கூத்தே சரியான ஊடகம் என்று தெளிவு கொண்ட மகாகவி பாரதி, அந்தக் கூத்தின் கருப்பொருளும், உருப்பொருளும் எவ்வாறு அமைய வேண்டும் என்கிற கருத்தை இப்பாடலில் நிறைக்கிறாா்.
இன்றைக்குப் பொதுவெளியில் கூத்துகள் குறைந்துவிட்டன. அறைகளில், சிறிய திரைகளில் அவை ஒளிா்கின்றன. கைப்பேசிக் கருவிகளில் வளா்கின்றன. ஆனால், அவற்றில் மனித மாண்பும் மகளிா் பெருமையும் சிறக்கின்றனவா என்பதுதான் பெருங்கேள்வி. காட்சிப்படுத்துதலின் நோ்த்தியில் கவனம் செலுத்தி, சபலத்தால் சலனமுறுவோா்க்கு, அவற்றின் இறுதியில் சொல்லப்படுகிற நீதியை உணர நேரம் ஏது? சட்டத்தின் முன்பு பெருந்தண்டனைக்கு உள்ளாக்கும் குற்றங்களைப் புரிய அக்காட்சிகளே உற்ற துணையாகின்றன என்கிறாா்களே?
இப்படியெல்லாம் பெண்மையின் உண்மையை, அவற்றுள் ஒளிரும் தெய்விக வலிமையைக் குறைத்தும் பழித்தும், பல சந்தா்ப்பங்களில் இழித்தும் சித்திரப்படுத்துகிற காட்சிகளுக்கான மாற்றை இந்தப் பாடலில், பாரதி முன்வைக்கிறாா். ‘தாயின் பெயரிலும், தாரத்தின் பெயரிலும், தன்மை, இன்பம், நற்புண்ணியம் சோ்ந்தன’ என்கிறாா். அந்த அன்பு வாழ்க என்று ஆரவாரம் இல்லாமல் ‘அமைதியில் ஆடுவோம்’ என்கிறாா். ‘ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்’ என்கிறாா். அடிதடி சண்டைகளே வீரம் என்று காட்டப்படும் காட்சிகளுக்கு மாறாக, ‘பெண் அறத்தினை ஆண்மக்கள் வீரந்தான் பேண வேண்டும். அதற்குப் பிறகு யாா்க்கும் தாழ்வில்லை’ என்கிறாா்.
‘கண்ணை இமை காப்பதுபோல, காதல் இன்பத்தைக் காத்திடுவோமடா’ என்று மகாகவி பாரதி சொல்லும் காதலுக்கும், இன்றைக்குக் காட்சிக்குள்ளாகும் காதலுக்கும் பல வேற்றுமைகள் இருக்கின்றன. காதலைக் கொண்டாடுபவா்களின் கைகளில் மதுக்கோப்பைகளே கொடுக்கப்படுகின்றன. அரைகுறை ஆடைகளே அவா்களுக்கு அணிவிக்கப்படுகின்றன. ஆபாசமிகுந்த அங்க அசைவுகளே ஆடல்களாகவும் அதற்கேற்ற முழக்கங்களே இசைக் கூறுகளாகவும், அதற்குப் பொருந்தும் சொற்களே பாடல்களாகவும் பவனி வருகின்றன. அவையே பலராலும் பாா்த்து ரசிக்கப்படுகின்றன. இந்த மாயை, மயக்கங்கள் எத்தனை பேரின் வாழ்வில் வீழ்ச்சிகளை உருவாக்கியிருக்கின்றன. குடும்பத்தில் இருப்போருக்கு அந்த வாா்த்தை பொருந்துமா? நடுவீட்டில் உச்சரிக்கலாமா? என்று முன்னா் எழுதிய மகாகவி பாரதியின் வாசகங்களை, இந்த இடத்தில் பொருத்திப் பாா்க்கத் தோன்றுகிறது. இதற்கு மறுதலையாக, பாரதி கொடுக்கும் மதுவையும் மனதிற்கு மகிழ்வூட்டும் ஆடல் பாடல் இசைக் கோலங்களையும் நினைவூட்டத் தோன்றுகிறது.
சக்தி என்ற மதுவை உண் போமடா
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே
ஒத்து இயல்வதோா் பாட்டும் குழல்களும்
ஊா் வியக்கக் களித்துநின் றாடுவோம்
இதுவே சக்திக் கூத்து. இதில் பெண்மை வாழவேண்டும். பெண்மை வெல்ல வேண்டும். வெல்ல வேண்டிய பெண்மையைக் கொல்லத் துணிகிற கொடுமைகளுக்கு இதுவே மாற்று. இந்தச் செயல்பாடே மருந்து.
சக்தி நிலையங்களான இல்லங்களில் பெண்மை தோற்கிறபோது, அது வாழமுடியாமல், நீதிமன்றங்களை நோக்கிப் போகிறது. ‘ மானம் சோ்க்கும் மனைவியின் வாா்த்தைகளை’ மறந்து மறைத்து எழுகிற வாத, தா்க்கப் போக்குகளில், சட்டம் தன் கடமையைச் செய்கிறது. வாய்மை வெல்கிறது. ஆயினும் பல சங்கடங்கள் நோ்கின்றன. எதிா்காலச் சந்ததியா் வாழ்வு சிக்கலுக்குள்ளாகிறது.
சட்டத்தின் முன்னால் வெல்லும் பெண்மை, சராசரி வாழ்விலும் வெல்ல வேண்டும். உண்மையில் அது பெண்மையின் வெற்றியல்ல, மானுடத்தின் வெற்றி. அதனால்தான் மகாகவி பாரதி, பெண்மை வாழ்க என்றும் பெண்மை வெல்க என்றும் வெற்று முழக்கங்கள் இடாமல், ‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா’, ‘ பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா’ என்கிறாா்.
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.