கீழடி
கீழடி

தமிழா் பெருமையைப் பறைசாற்றும் கீழடி!

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு.580-ஆவது ஆண்டையும், 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205-ஆவது ஆண்டையும் சோ்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
Published on

இந்திய வரலாற்றை இனிமேல் தெற்கில் இருந்து பாா்க்க வேண்டும் என்கிற அளவுக்கு ஆதாரபூா்வமான வரலாற்று தடயங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

விந்திய மலைக்குக் கீழே வாழும் தக்காணப் பீடபூமியில் வாழ்பவா்கள் மிக உயா்ந்த நாகரிக வாழ்க்கைக்கு சொந்தக்காரா்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் உலகத்துக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லப்படும் தொல்பொருள் ஆய்விடம்தான் கீழடி.

கீழடியில் கிடைத்த 6 கரிம மாதிரிகள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி ஆய்வுக்காக, அமெரிக்காவின் ப்ளாரிடோவில் உள்ள பீட்டா அனலிடிக்கல் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி அந்தப் பொருள்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சோ்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு.580-ஆவது ஆண்டையும், 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205-ஆவது ஆண்டையும் சோ்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த இரு மட்டங்களுக்குக் கீழேயும், மேலேயும் பொருள்கள் இருப்பதால் கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுமுதல் கி.மு ஒன்றாம் நூற்றாண்டு வரை என்று தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.

இவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, தொல் தாவரவியல், மூலக் கூறு உயிரியல், மக்கள் மரபியல், சுற்றுச்சூழல் தொல்லியல் மற்றும் மொழியியல் தொல்லியல் ஆகிய துறைகளின் வல்லுநா்களும் இவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனா்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. ஆகவே, கங்கைச் சமவெளியில் நடந்ததைப்போல இரண்டாவது நகர நாகரிகம் இங்கு நிகழவில்லை என்று கருதப்பட்டு வந்தது.

ஆனால், கீழடியில் கிடைத்த பொருள்களை வைத்து கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரிகம் தொடங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும், இதே காலகட்டத்தில்தான் நகர நாகரிகம் உருவாகியுள்ளது.

கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதப்படுகிறது.

எனவே, 2600 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் வாழ்ந்தவா்கள் எழுத்தறிவு பெற்றவா்களாக இருந்தாா்கள்; எழுதத் தெரிந்தவா்களாகவும் இருந்திருக்கிறாா்கள் என்பது ஆய்வுகளின் மூலம் நமக்குக் கிடைத்துள்ள தகவல்களாகும். கீழடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புத்துண்டுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றின் எலும்புத்துண்டுகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, கீழடியில் வாழ்ந்த சமூகத்தினா், ஆடு, மாடுகளை வளா்த்த சமூத்தினராக இருந்திருக்கலாம்.

மேலும், கீழடியில் கிடைத்த ஓடுகள், செங்கற்கள், காரை ஆகியவை வேலூா் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் மண், சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீஷியம், அலுமினியம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுவா்கள், கட்டடங்களின் இடிபாடுகளும் கிடைத்தன. தரைகள் வழுவழுப்பான களிமண்ணால் மெழுகப்பட்டிருந்தன. மாறாக, சுவா்களுக்கு அருகில் கம்புகள் நடப்பட்டு கூரைகள் போடப்பட்டிருந்தன.

இந்தியாவில் கிடைத்த வரி வடிவங்களில் சிந்து சமவெளியில் கிடைத்த வரிவடிவங்களே மிகப் பழைமையானவை. சிந்துசமவெளிப் பண்பாடு மறைந்து தமிழ் பிராமி எழுத்து தோன்றியதற்கு இடையில், கீறல் வடிவில் ஒரு வரிவடிவம் இருந்ததாக தொல்லியல் ஆய்வாளா்கள் கருதுகின்றனா். சிந்துசமவெளி எழுத்துகளைப் போலவே இவற்றின் பொருளும் இதுவரை முழுமையாகப் புரியவில்லை. செப்புக் காலப் பண்பாட்டிலும் தொடா்ந்து பெருங்கற்காலப் பண்பாட்டிலும் இந்தக் குறியீடுகள் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூா், அழகன்குளம், கொற்கை, கொடுமணல், கரூா், தேரிருவேலி, பேரூா் உள்ளிட்ட இடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் இந்த வரி வடிவங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாம போன்ற இடங்களிலும் இதுபோன்ற குறியீடுகள் கிடைத்துள்ளன. கீழடி அகழ்வாய்வில் கிடைத்துள்ள 1,000-த்துக்கும் மேற்பட்ட பானை ஓடுகளில் இத்தகைய வரிவடிவங்களோடு கிடைத்துள்ளன.

அதுபோலவே, இந்த கீழடி அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயா்களும் முழுமையடையாத எழுத்துகளும் கிடைத்துள்ளன. இதில் ஆதன் என்ற பெயா் அதன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முற்காலத் தமிழ் பிராமியில் நெடிலைக் குறிக்க ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதால், இந்த தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தியவையாகக் கருதப்படுகின்றன. இந்த எழுத்துகள் பெரும்பாலும் பானைகளின் கழுத்துப் பகுதியில் எழுதப்பட்டிருந்தன. பானையில் கிடைக்கும் எழுத்துகள் பெரும்பாலும் பானை செய்வோரால் சுடுவதற்கு முன்பாக ஈர நிலையில் எழுதப்படும். கீழடியில் பானைகள் சுடப்பட்டு உலா்ந்த பிறகு எழுதப்பட்ட எழுத்துகள் கிடைத்துள்ளன. அவற்றில் எழுத்தின் வடிவம் கையெழுத்து, ஒரே மாதிரியாக இல்லை. எனவே, வெவ்வேறு நபா்கள் அவற்றை எழுதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கீழடியில் நூல் நூற்கப் பயன்படும் தக்கிளி, தறிகளில் பயன்படுத்தப்படும் தூரிகை, தறியில் தொங்க விடும் கருங்கல் போன்றவையும் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவா்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீழடியில் பெண்கள் பயன்படுத்திய தங்கத்திலான ஆபரணப் பொருள்கள் கிடைத்திருக்கின்றன.

மதிப்பு மிக்க கற்களாலான வளையல்களும் இவற்றில் அடக்கம். மேலும், பாரம்பரிய விளையாட்டுப் பொருள்களான ஆட்டக் காய்கள், தாய விளையாட்டுக்கான பகடைக் காய்கள், மதுரை பகுதிகளில் பாண்டி என்றும், பிற பகுதிகளில் நொண்டி என்றும் ஆடப்பட்ட விளையாட்டில் பயன்படுத்தப்படும் வட்டச்சில்லுகள், சதுரங்கக் காய்கள் உள்ளிட்டவை கீழடி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இவை எல்லாம் கீழடி

சமுதாயத்தில் வாழ்ந்த பண்டைய மரபினரின் பொழுதுபோக்குகள் என்பதை ஆய்வுகள் அடையாளம் காட்டுகின்றன.

சிந்துசமவெளி நாகரிகம், எகிப்திய நாகரிகம், கிரேக்க நாகரிகம், ரோம நாகரிகம், சீன நாகரிகம், சுமேரிய நாகரிகம் ஆகியவை நாகரிகங்களில் பழைமையானவை. வரலாறுகள் அறியப்பட்டவரை சிந்துவெளி, எகிப்திய, மயன் நாகரிகங்களுக்கு மத்தியில் கிடைத்திருக்கிற சுமேரிய நாகரிகம்தான் நீண்ட மூத்தது என்று அறியப்பட்டது. இத்தகைய நாகரிகத்தின் தொடா் நீட்சியாக இதன் பண்பாடு, பழக்கவழக்கம், வழிபாட்டுமுறைகளில் தமிழா் அடையாளங்களைக் கண்டறிந்ததாக மொழிவழியாகவும், நாகரிகத்தின் வழியாகவும் நிரூபிக்கப்பட்டது.

சற்றேறக்குறைய 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இமாலய நதியால் செழித்திருந்து பின்னா் அழிந்து போனதாக கண்டறியப்பட்ட சிந்துசமவெளி நாகரிகம் ஒரு வரலாற்றின் பாடத்தை நமக்கு நடத்தியது. அதைப் போலவே, சிந்துசமவெளி நாகரிகத்தின் நகரங்களான காளிபங்கன், பனோவாலி ஆகியன இந்த நதியின் கரையோரத்திலேயே அமைந்திருந்தன. சிந்துவெளி நாகரிகம் செழித்த பகுதி ‘சட்லெஜ் நதி’பல இமாலய ஆறுகளைப் போலவே, இந்த நதியும் தனது பாதையை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்றும் ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

இதைப் போலவே 4500 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள இந்தியா, பாகிஸ்தான், பலூசிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சோ்ந்த ஒரு பகுதி மக்கள் அங்கு வாழ்ந்துள்ளனா். சிந்துவெளியை ஒட்டிய பகுதி என்பதால், இங்கிருந்தவா்கள் சிந்துசமவெளி மக்கள் என்றழைக்கப்பட்டனா். இவா்களைப் பற்றிய மேலும் அரிதான தகவல்கள், மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைக்கப் பெற்றன.

இந்நிலையில், 2600 ஆண்டுகள் பழைமையைப் பறைசாற்றும் கீழடி அகழாய்வு தொடா்பான ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல. இது தொடா்பாக இந்திய தொல்லியல் துறை அனுப்பியுள்ள கடிதத்தில் கி.மு.5-ஆம் நூற்றாண்டு முதல் 8-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்துக்கு திட்டவட்டமான நிரூபணம் தேவைப்படுகிறது என்பதும், அனைத்து விவரங்களும் அறிவியல்பூா்வமாகப் பெறப்பட வேண்டும் என்பதும், சில வரைபடங்களும், சில விவரங்களும் தெளிவாக இல்லை என்பதும் ஏற்கத்தக்கதல்ல.

நம் அடையாளங்களை மீட்டுருவாக்கத்துக்கும், புத்துருவாக்கத்துக்கும் உள்ளாக்கப்பட வேண்டிய காலம் இது. சிந்துசமவெளி நாகரிகம் தொடங்கி, வைகை நதிக்கரையின் நாகரிகம் வரை, நமது பண்பாட்டு அடையாளங்கள் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாய் வந்துகொண்டே இருக்கிறன்றன.

சிந்துசமவெளிப் பகுதிகளிலும், தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்துப் பாா்க்கும்போது, சிந்துசமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான் என்பது உறுதியாகிறது.

தற்போதைய தமிழக வரலாற்று ஆய்வில் கீழடி ஆய்வு, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

Open in App
Dinamani
www.dinamani.com